உயிருக்கு பயந்து படிப்பை பாதியில் நிறுத்தி அகதியாக வந்த மாணவிகள்
உயிருக்கு பயந்து படிப்பை பாதியில் நிறுத்திய இலங்கை மாணவிகள் பெற்றோர்களுடன் அகதியாக தமிழகம் வந்தனர்.இலங்கை வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த 8 பெண்கள் உட்பட 27 அகதிகள் நேற்று முன்தினம் படகில் புறப் பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் வந்திறங்கினர். அங்கிருந்து புதுரோட்டிலுள்ள தனுஷ் கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளிடம் விசாரணை நடத்திய போலீசார் மண் டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
இலங்கை பூவரசங்குளம் மகாவித்யாலயா பள்ளி மாணவி இமெல்டா(15) கூறுகையில்," எனது தங்கை உட்பட 3 பேர் வித்யாலயாவில் படித்துவந்தோம். ஜன.,13 ல் எனது தந்தை சிவலிங்கத்தை இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.புலிகள் இயக்கத்துக்கு உதவுவதாக கூறி அடித்து துன்புறுத்திய ராணுவத்தினர் இரண்டு நாட்கள் கழித்து விடுவித்தனர். இதனால் படிப்பை பாதியில் நிறுத்திய நாங்கள் இங்கு அகதியாக வந்தோம் 'என்றார்.
வவுனியா செட்டிக்குளம் மகாவித்யாலயா பள்ளியில் படித்த மாணவி துஷாந்தி(15) கூறுகையில்," ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டிலிருந்த அண்ணன் பிரஷாந்தனை ராணுவத்தினர் விசாரணை செய்வதற்காக பிடித்து சென்று சிறையில் வைத்து துன்புறுத்தி பல நாட்களுக்கு பின் விடுவித்தனர். மீண்டும் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி பிடித்து சென்றனர்.
உயிருக்கு ஆபத்து என்பதால் பள்ளிக்கு செல்லாமல் பெற்றோர்களுடன் இங்கு அகதியாக வந்தேன்' என்றார். இவர்களுடன் படகில் வந்த மன்னாரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கரை இறங்கியவுடன் தனியாக சென்றுவிட்டதாக அகதிகள் தெரிவித்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
1 விமர்சனங்கள்:
நெல்லைத்தமிழின் புதிய திரட்டி
nellaitamil
Post a Comment