கிளிநொச்சியின் அபிவிருத்திக்கு இந்தியா உதவி
இந்தியாவின் நிதியுதவியுடன் கிளிநொச்சியை அபிவிருத்தி செய்யும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகர் பேசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை இதுதொடர்பாக விஷேட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
"கிழக்கை விடத் துரிதமாக வடக்கை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்" என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, இதுதொடர்பான விஷேட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த வாரமும் அமைச்சர் பேசில் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா அரசாங்க அதிபர்கள், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள், அமைச்சுக்கள், திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்திருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத், திங்களன்று பேசில் ராஜபக்ஷவுடன் தனியே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment