கருணா "தினமலர்" இதழுக்கு வழங்கிய செவ்வி 2
'அப்பாவித் தமிழரைக் காப்பாற்ற, புலித் தலைவர் சரணடைய வேண்டும்'
புலிகள் போர்ப்படையில் தளபதியாக 22 ஆண்டுகள் இருந்து பிரபாகரனோடு ஏற்பட்ட மோதலால் வெளியேறி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தை உருவாக்கிய கருணா அம்மான், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி தொடர்ச்சி... நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில், ஓர் அமைதி ஒப்பந் தத்தை, "பரிசீலிக்கிறோம்' என, கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைக் கொண்டு வந்து 2003ம் ஆண்டு மார்ச் மாதம் பிரபாகரனிடம் கொடுத் தோம். உடனே அதைத் தூக்கி வீசி எறிந்தார். "போராட்டத்தை விற்றுவிட்டு வந்து நிற்கிறீர்கள்' என்று, கத்தினார். "ஆச்சடா போச்சடா' என்று சத்தம் போட்டார்.நான் சொன்னேன், நீங்கள் சொல்வது போல் இல்லை. போர்க்களத்தில் நான் தான் நிற்கிறேன். ஆயிரக்கணக்கில் ராணுவத்தைக் கொன்று குவித்துள்ளோம். போராளிகளும் மடிந்து போகின்றனர்.
ஆனால் மாற்றம் வந்துள்ளதா; வராது. போராளிகள் நம்பிக்கை இழந்து போகின்றனர். நாங்கள் எத்தனை பேரைக் கொன்றாலும், ராணுவமும் கொன்றுகொண்டுதான் இருக்கும்.ஏனென்றால் அது ஒரு நாடு; நாட்டை எதிர்த்து போராடுகிறோம். உலகில் ஒரு நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவின் ஆதரவும் இல்லை. அப்படியே ஆதரித்தாலும், பிரிவினை செய்து தனிநாடாக, இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என, பிரபாகரனிடம் கூறினேன்.இந்த சூழ்நிலையில் தான், பெடரல் மாதிரி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
இதற்காக, சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்து அந்த நாட்டின் அரசின் மாதிரியை படித்தோம். அதே போல் ஓர் அமைப்பை இலங்கையில் கொண்டு வரவேண்டும் என்று தான் விரும்பினோம்.அதன் அடிப்படையில் தான், ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட துணிந்தோம். அது இந்த மனிதருக்கு விளங்கவில்லை. உடனே, பிரிவின் பொறுப்பாளர்களைக் கூப்பிட்டார் பிரபாகரன். "இவன் போராட்டத்தை விற்று வந்திருக்கிறான். எனக்கு துரோகம் செய்துவிட்டான்' என்று கூறினார்.
அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள்?
நான் போர்ச்சூழலை விளக்கினேன்; போராளிகளின் மனநிலையைச் சொன்னேன். அதுவரை 14 ஆயிரத்து 500 போராளிகள் மடிந்திருந்ததைச் சொன்னேன். இனி இவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் தந்திரமாக நடந்து கொண்டேன்.நான் நேராக மட்டக்களப்பு படைப் பிரிவுக்கு சென்று விட்டேன். அங்கு 6,000 போராளிகள் இருந்தனர். மறுநாள் கிளிநொச்சிப் பகுதிக்கு, 2,000 போராளிகளை அனுப்பச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். நான் சண்டையை விரும் பவில்லை; போராளிகளை அனுப்ப மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
அப்போது, கிழக்கு மாகாணத்தில் இருந்த போராளிகள் மனநிலை எப்படி இருந்தது?
இங்கே முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். இரண்டு மாகாணங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. மட்டக்களப்பு பகுதியில் படை பலம் அதிகம். யாழ்ப்பாணம் பகுதியில் பணபலம் அதிகம். மட்டக்களப்பு பகுதி தான் படையில் பலமாக இருந்தது. வடக்குப் பகுதியில் இருந்த தமிழர்களிடம் ஒரு ஆளை போராளியாக்க வேண்டும் என்று கேட்டால், 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள்.அந்த வீட்டில் உள்ளவரை உடனே ரகசியமாக புறவாசல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருந்தது. அதுவரை போரில் மடிந்த போராளிகளில் 8,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை அதிகம்; கிழக்கு மாகாணத்தில் குறைவு.
ஆனால், படைப்பிரிவில் கிழக்கு மாகாண போராளிகள் தான் அதிகம் இருந்தனர். முஸ்லிம்கள் இதில் அடக்கமில்லை.படைப்பிரிவில் இருந்த இந்த முரண்கள் போராளிகளிடமும், பொதுமக்களிடம் அவ்வப்போது முணுமுணுப்பாக வெளிப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, 2,000 போராளிகளை கிளிநொச்சிக்கு அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது தான், பிரபாகரன் உத்தரவை முதன்முறையாக, நான் மீறினேன்.
அப்போதை சூழ்நிலை எப்படி இருந்தது?
உடனே என்னை தலைமையகத்துக்கு அழைத்தனர். உடனடியாக வரவேண்டும் என்றனர்; நான் மறுத்துவிட்டேன். அங்கு போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். சுட்டுத்தான் போடுவார்கள். எனவே, சண்டையில் விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். அப்போது நான் மிகவும் நிதானமாக செயல்பட்டேன்.ஏற்கனவே இது போன்ற அனுபவம் ஒன்று இருந்தது. இந்தியப் படை வெளியேறிய போது, தமிழர்களுக்கான படை (டி.என்.ஏ.,) ஒன்று அமைக்கப்பட்டது. அந்த படையில் இருந்த தமிழ் இளைஞர்கள் 1,200 பேரை 18 நாளில் நாங்கள் கொன்று குவித்தோம். அது வீரமான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும்.அவசரப்பட்டால் அதேப்போன்று ஓர் நிலை ஏற்படும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் நிதானமாக செயல்பட்டேன்.
மீண்டும் நாகரிகமற்ற முறையில் எங்களுக்கு நாங்களே மோதிக் கொண்டு, எங்கள் ரத்தத்தையே ஆறாக ஓடவிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.போராளிகளுடன் கலந்து பேசினேன். கிழக்கு மாகாணத்தில் போராளிப் படைப் பிரிவைக் கலைத்து விடுவது என்று முடிவு செய்து பிரபாகரனுக்கு தெரிவித்தோம். உடனடியாக 6,000 போராளிகளையும் வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டேன். அவர்கள் அனைவரும் புலிகளின் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டனர். படைப் பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது.
கடைசியாக பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். படைப்பிரிவு கலைக்கப்பட்டு விட்டது. கலைத்தது நான்தான். எனவே போராளிகள் யாருடனும் மோதலில் ஈடுபடவேண்டாம். அப்படி மோதுவதானால் என்னுடன் மோதுங்கள்.நான் இதற்கு காரணமான ஆள். இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்தேன். 2003ம் ஆண்டு சித்திரை மாதம் இது நடந்தது. அதன்பின் நாங்களும் படைப்பிரிவின் முக்கியஸ்தர்களும் வெளிநாடு சென்றுவிட்டோம்.
அத்துடன் பிரச்னை முடிந்ததா?
முடியவில்லை. வடக்கு மாகாண போராளிகளைக் கொண்டு, கிழக்கு மாகாணத்தில் போர் தொடுக்க வைத்தார் பிரபாகரன். சொந்த நாட்டு மக்களையே, அன்னியர்கள் போல் பாவித்து கொலை செய்ய உத்தரவிட்டார். இந்த வெறியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 520 பேர், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மிகவும் வேதனை அடைந்தேன்.மக்களை விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதோ என்று நினைத் தேன். அந்த சூழ்நிலையில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று யோசித்தோம். புலிகளிடம் இருந்து எங்கள் பகுதி மக்களை காக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
இந்த சூழ்நிலையில் தான் இலங்கை அரசுடன் சேர்ந்தீர்களா?
இலங்கை அரசு எங்களை அழைத்தது. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது புலிகளிடம் இருந்து எங்கள் பகுதி மக்களை காப்பது பற்றி கேட்டோம். ஆயுதங்களை கீழேப் போடுவது பற்றி பேசினோம். கிழக்கு மாகாணத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்த அடைப்படையில் தீர்வு காண விரும்பித்தான் பேசினோம். ஆயுதப் போராட்டத்தை கைவிட விரும்பினோம்.அதன்பின் தேர்தல் நடத்தப்பட் டது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். முதல்வர் பதவியை பிடித்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான், உங்கள் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
இல்லை. இப்படித் தவறான தகவல் பரப்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழர், சிங்களர், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலைமையை விரும்பாத சிலர், இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் நிலைமை எப்படி இருக்கிறது?
அங்கு வளர்ச்சிப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் சுபிட்சமாக வாழ தேவையான வளர்ச்சிக்கான திட்டங்களை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அரசு தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்கிறதா?
நான் லண்டனில் இருந்த போது சில சம்பவங்கள் நடந்தன. நான் இங்கு வந்தவுடனே, அது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். தமிழர் - முஸ்லிம் நட்புறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிராம ரீதியாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ள கவுன்சிலிங் செய்து வருகிறோம். வன்முறைகளை தடுக்க எந்தெந்த வழிகளில் முடியுமோ அத்தனை வழிகளையும் கையாண்டு வருகிறோம்.
தமிழர் - சிங்களர்களிடையே குரோதம் குறைந்துள்ளதா?
குரோதத்தை வளர்த்ததே அரசியல் தலைவர்கள்தானே. வெறுப்புணர்வுகளை களையும் வகையில் பல செயல்பாடுகள் நடக்கின்றன. கிழக்கு மாகாண மக்களுக்கு பிரபாகரன் என்ற ஆளைத் தெரியாது. அவர் கிழக்கு பகுதிக்கு வந்ததும் இல்லை. அந்த ஆளை, கிழக்கு பகுதி தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தவன் நான்தானே. இப்போது, எங்களுடைய மக்களிடம், "பிரபாகரன் என்ற ஆளை தூக்கி எறியுங்கள். நாம் இலங்கை என்ற நாட்டில் வாழ்கிறோம். இது நமது நாடு. இது நமது ராணுவம். தேசிய அளவில் நாம் விட்டுக்கொடுத்து, இணக்கமாக வாழ வேண்டும்' என்று வலியுறுத்தி வருகிறேன். "பிரச்னைகளை நமக்குள் பேசித் தீர்க்க வேண்டும்' என்றும் கூறி வருகிறேன்.
விடுதலைப் புலிகளுடனான இலங்கை ராணுவத்தின் போர் உச்சக்கட்ட நிலையில் உள்ளதே?
இலங்கை ராணுவம் புலிகள் பரப்பளவை சுருக்கி வருகிறது. புலிகள் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். நான் படைப்பிரிவில் இருந்து வெளியேறிய பின் போர்முனையில் புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட அவர்கள், இப்போது வடக்கு மாகாணத்திலும் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியை ராணுவம் நெருங்கிவிட்டது.
இந்த நிலை ஏற்படும் என்று எங்களுக்கு அப்போதே தெரியும். நாங்கள் சொன்னபோதே சமாதான ஒப்பந்தத்துக்கு பிரபாகரன் சம்மதித்திருந்தால் இப்போதைய நிலை ஏற்பட்டிருக்காது. தோல்வியடையாமல், பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம். பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்போதைய போரில் மடிந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் பிரபாகரன் தான். பிரபாகரனின் பிடிவாதத்தால், புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற பெயரை மட்டும்தான் பெற முடிந்தது.
இந்த சூழ்நிலையில் பிரபாகரனின் வியூகம் எப்படி இருக்கும்?
புலிகளின் கடைசி நகரம் கிளிநொச்சி தான். அங்கு 80 ஆயிரம் பேர் வசித்தனர். அதை ராணுவம் பிடித்து விட்டது. இந்த நகரை விடமாட்டோம் என்று பிரபாகரன் வெளிநாட்டில் பிரசாரம் செய்து வந்தார். அவரது வாய்ச்சவடால் தகர்க்கப்பட்டுள்ளது. புலிகளின் இயக்கம் 40 சதுர கி.மீ., பரப்பளவுக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.முல்லைத்தீவு தான் ராணுவத்தின் அடுத்த குறி. கடற்படை வீரர்கள் இப்போது வடக்கு கடல் பகுதியில் இருந்து நெருக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபாகரன், அந்த பகுதியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறார். அவர்களை பிடித்து வைத்துள்ளார். தப்ப முயன்றால் சுட்டு விடுவோம் என மிரட்டி வைத்திருக்கிறார். பொதுமக்கள் தப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
ராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதே?
வாய்ப்பு உண்டு. ஆனால் கிழக்கு மாகாணமும் இதேப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கும் பொதுமக்களை கேடயமாக புலிகள் பயன்படுத்தினர். ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, புலிகளை அடக்கியது ராணுவம். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் செய்தது. அதே போல்தான் இங்கும் நடக்கும். ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்த போதும், இலங்கையில் அந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்தான் தடை செய்யப்பட்டது. அப்படியானால், இலங்கை அரசு எவ்வளவு நிதானமாக நடந்து கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பிரபாகரன் பிடியில் மனிதக் கேடயங்களாக உள்ள பொதுமக்கள் துணிந்து அங்கிருந்து வெளியேற வேண்டும். மட்டக் களப்பு மாவட்டத்தில் ராணுவ நடவடிக்கையின் போது, இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது 60 ஆயிரம் பொதுமக்கள் இதேப் போன்று வெளியேறினர். அவர்களை ராணுவம் பாதுகாத்தது. அனைவரும் புலிகள் என்று கூறி சுட்டு வீழ்த்திவிட வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முல்லைத்தீவு பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் வெற்றியடையும் போது பிரபாகரன் நிலை என்னவாக இருக்கும்?
ராணுவம் இன்னும் சில நாட்களில் வெற்றியடையும் என்று அங்கிருந்து வரும் தகவலை வைத்து உறுதி செய்கிறேன். ராணுவம் வெற்றி யடையும் போது பிரபாகரனின் நிலை என்னவாகும் என்று சொல்ல முடியாது. உலக வரலாற்றில் பலரும் பிடிபட்டுள்ளனர். இவர் பிடிபடுவாரா அல்லது சயனைட் சாப்பிடுவாரா என்பதை உறுதி செய்ய முடியாது.பிரபாகரன் என்ற ஆள் வெளி உலகுக்கு தெரிவது போல் மனஉறுதி மிக்கவர் அல்ல. அவரை உறுதி மிக்க ஆளாக காட்டியது, போராளிகளின் தியாகம்தான். அவர் தஞ்சம் தேடி வெளிநாடுகளுக்கு போகவும் வாய்ப்பு உள்ளது.
புலிகள் இயக்க போராளிகள், சுற்றி வளைக்கப்படும் போது, தற்கொலை செய்யும் முடிவை எடுக்கிறார்களே?
இது பயிற்சி பெற்ற போராளிகள் எடுக்கும் முடிவு. ஆரம்ப காலத்தில் இருந்த பிரபாகரனும் சூழ்நிலைகளின் அடிப்படையில் இப்படிப்பட்ட முடிவை எடுக்கும் துணிச்சல் உள்ளவர்தான். பின்னர் அவரது வாழ்க்கை போக்கு மாறிவிட்டது. சொகுசு வாழ்க்கைக்கு வந்துவிட்டார். பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் தஞ்சம் தேடத்தான் முயற்சிப்பாரே தவிர, வேறுவகையான முடிவை அவர் எடுப்பார் என்று எனக்கு தோன்றவில்லை.
தமிழ தலைவர்கள் சிலர் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனரே...
போர் நிறுத்தம் அவசியம்தான். பொதுமக்களை பாதுகாக்கத்தான் போர்நிறுத்தம் செய்ய வேண்டும்; பிரபாகரனைக் காப்பாற்ற அல்ல. போர் நிறுத்தம் அவசியம் என்றால், இந்த சூழ்நிலையில் பிரபாகரன் சரணடைய வேண்டியதுதானே. போர் நடவடிக்கைக்கு நான்தான் காரணம். அப்பாவி பொதுமக்கள் பாதிக் கப்படக் கூடாது என்றால் அவர் ராணுவத்திடம் சரணடைந்துவிடவேண்டியதுதானே. அவர் சரணடைந்தால், போர்நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். இதை தமிழகத் தலைவர்கள் வலியுறுத்த வேண் டும். பிரபாகரனை ஒரு கதாநாயகனாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
புலிகள் பகுதியில் நடந்த கட்டப்பஞ்சாயத்து போதை மருந்து கடத்தலில் தமிழகத்துடன் தொடர்பு: நாளை மறுநாள்..
0 விமர்சனங்கள்:
Post a Comment