பாரிய இன அழிப்புத் திட்டத்துடன் வன்னி மீது சிறிலங்கா படை தொடர் தாக்குதல்: பேரவலத்தில் மக்கள்
[செவ்வாய்க்கிழமை, 13 சனவரி 2009, 04:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
அண்மைக்காலமாக வன்னியில் சிறிலங்கா படையினர் தொடரான கடும் பீரங்கித் தாக்குதலை அப்பாவி பொதுமக்களை நோக்கி தொடங்கியுள்ளனர் என வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த எறிகணைத் தாக்குதல்கள் முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பேரழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் பொதுமக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளித் தெரியாமல் கொன்றொழிக்கும் நோக்கத்தோடு இத்தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டிருப்பது போல தெரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
படுகாயங்கள்
கடந்த பத்து நாட்களாக பொதுமக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்தி வரும் கடுமையான பீரங்கி மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களால் இதுவரை 140-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் 100-க்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், இப்போது மருத்துவமனைகளுக்கு அருகிலும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.
சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் கடுமையாக தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் காயமடைந்து வருகின்ற பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இடப்பெயர்வு
தருமபுரம் வடக்கு, புளியம்பொக்கணை, வட்டக்கச்சி, கல்மடுப் பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே கிளிநொச்சி நகரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
கடும் பீரங்கித் தாக்குதல் காரணமாக ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமல் தற்போது 24 மணித்தியாலமும் மக்கள் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த பத்து நாட்களாக சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டதனையடுத்து மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து செல்லும் நிலை நிலை காணப்படுகின்றது என "புதினம்" செய்தியாளர் தெரிவித்தார்.
மக்கள் இடம்பெயர்ந்து தருமபுரம் விசுவமடு தொடக்கம் புதுக்குடியிருப்பு வரைக்கும் வீதிகளின் ஓரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் காடுகளின் கீழும் தங்கி அவலப்பட்ட வண்ணம் உள்ளனர்.
மக்களுக்கு உதவிகள் கிடைக்கக்கூடாது என்று தொண்டு நிறுவனங்களையும் சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றிய நிலையில் கூடாரங்கள் கூட இல்லாமல் திறந்த வெளிகளில் பொருட்களை போட்டு விட்டு மழையிலும் வெயிலிலும் பனியிலும் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் வாடி வருகின்றனர்.
Puthinam
0 விமர்சனங்கள்:
Post a Comment