தமிழனாகப் பிறந்ததற்காக வருத்தப்படுகின்றேன் - நடிகர் வடிவேலு
செங்கல்பட்டில் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் நான் தமிழனாகப் பிறந்ததற்கு வருத்தப்படுகின்றேன் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களுக்காக, செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலர் மயங்கி விழுந்தனர்.
நேற்று மாலை நடிகர் வடிவேலு, இயக்குனர்கள் சுந்தர்.சி, மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சரவண சுப்பையா, கௌதம் ஆகியோர் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்திலிருந்து, கறுப்புச்சட்டை அணிந்து ஊர்வலமாக, அரசு வைத்தியசாலைக்குச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் 4 மாணவர்களிடம் உடல் நலம் விசாரித்தனர்.
பின்னர் சினிமா குழுவினர் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்று, உண்ணாவிரதம் இருந்து வரும் 8 மாணவர்களிடமும், உண்ணாவிரதத்தை நிறுத்தும் படி கேட்டனர். அதற்கு அவர்கள், யார் சொன்னாலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எங்களை போன்ற மாணவர்கள் வேறு யாராவது, இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே, போராட்டத்தை கை விடுவோம் என்று கூறினார்கள்.
பின்னர் நடிகர் வடிவேலு நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை பாராட்டுகிறேன். அவர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும். குடியரசு தினத்தன்று கொடியை அணிந்துகொண்டு இந்தியனாக பெருமைப்பட்டேன். ஆனால் இவர்களைப் பார்த்த பின்னர் இந்தியாவில் தமிழனாகப் பிறந்ததற்காக வருத்தப்படுகின்றேன்.
செய்தித்தாள்களில் இலங்கையில் 300 பேர் இறந்து விட்டனர், 1000 பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளைப் படிக்கும் போது வேதனையாக உள்ளது. மாணவர்களின் போராட்டம்தான் எல்லா போராட்டத்திற்கும் வெற்றியை அளித்துள்ளது என்றார்.
டைரக்டர் சுந்தர்.சி. கூறுகையில், மாணவர்கள் 6 நாட்களாக பட்டினி கிடந்து போராடுவதை நினைத்தால் நெஞ்சம் கொதிக்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றார். டைரக்டர் ஆர்.கே. செல்வமணி, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவர் இறந்தால் கூட, நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஒட்டு மொத்த திரை உலகமே, களத்தில் இறங்கி போராடும் என்றார்.
நடிகர் குழுவினர் வந்ததால், அவர்களை பார்க்க திரளான மக்கள் கூடினார்கள். உண்ணாவிரத மேடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment