போர்நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை வரவில்லை: மேனன்
போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காகத் தான் இலங்கை வரவில்லையென இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.
நேற்றிரவு கொழும்பை வந்தடைந்த சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் யுத்தத்தில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுவருவதாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மோதல்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் கூட்டமைப்பினர் சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என அரசாங்கம் கூறினாலும், தமிழர்களை முற்றாக அழிக்கும் ஒரு இன அழிப்பு யுத்தமே தற்பொழுது முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.
போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, நிரந்தர சமாதானமொன்றை ஏற்படுத்துவதற்கான தீர்வொன்று முன்வைக்கப்படுவது அவசியம் எனவும் கூட்டமைப்பினர் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்று திரும்பிய பின்னர் வன்னியில் கொல்லப்பட்டவர்கள் குறித்த பெயர் பட்டியலொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் கையளித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காகத் தான் இலங்கை வரவில்லையெனவும், இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதனை ஆராயும் நோக்கிலேயே கொழும்பு வந்ததாகவும் கூட்டமைப்பினருக்கு, சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.
இலங்கையில் தற்பொழுது காணப்படும் நிலைமை தொடர்பாகப் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்ட மேனன், இலங்கையில் கலந்துரையாடிய விடயங்கள் பற்றி இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்குத் தெரியப்படுத்தவிருப்பதாகவும் கூறினார். அதன் பின்னரே இலங்கை விடயத்தில் இந்தியா தீர்க்கமான முடிவொன்றுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கனகசபை, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்;பலம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment