வன்னியில் தொடர்ந்தும் மோதல்: கைகள், கால்கள் இழந்த நிலையில் மக்கள் வருகை
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் மோதல்களில் படுகாயமடைந்த பொதுமக்கள் பலர் இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
படுகாயமுற்ற சுமார் 8 பேர் ஓமந்தையிலிருந்து மூன்று நோயளர்காவு வண்டிகளில், வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், இரவு 7 மணியளவில் மேலும் 20பேர் சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான லொறியொன்றில் அழைத்துவரப்பட்டதாகவும் வவுனியா செய்தியாளர் அறியத்தருகிறார்.
படுகாயங்களுடன் அழைத்துவரப்பட்டவர்களின் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் ஆகியோரும் உள்ளடங்கியிருப்பதாகவும், இவர்களில் இருவர் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரியவருகிறது. இவர்கள் இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இரவு 7 மணிக்கு லொறிமூலம் அழைத்துவரப்பட்டவர்களிலும் சிலர் கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களுக்குத்; தேவையான அனைத்து வைத்திய உதவிகளையும் செய்துகொடுக்கப்பட்டதுடன், வவுனியா வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியர் பவானி பசுபதிராஜா தலைமையிலான வைத்தியர்கள் குழு காயமடைந்தவர்களுக்குகான உடனடி சிகிச்சைகளை வழங்கியதாக எமது வவுனியா செய்தியாளர் அறியத்தருகிறார்.
வன்னிக்கான போக்குவரத்துக்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே வன்னியில் காயமடைந்தவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேநேரம், வன்னி மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் மற்றும், வன்னி செல்வதற்காக தங்கியிருந்த பொதுமக்கள் வன்னிக்குச் சென்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் உடமைகள் இராணுவத்தினரால் எடுத்துவரப்பட்டன
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்களின் ஒரு தொகுதி உடமைகள் இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டன.
இந்தப் பொருள்கள் நெலுக்குளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஐந்து உழவுயந்திரங்களில் எடுத்துவரப்பட்ட இந்தப் பொருள்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் மக்களின் பாவனைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment