ஒரு இலட்சம் பேரை வரவேற்கத் தயாராக இருக்கவும்
வன்னியிலிருந்து ஒரு இலட்சம் பொதுமக்கள் எந்த நேரத்திலும் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வரலாம் என எதிர்பார்த்திருப்பதால், வவுனியா மாவட்டத்திலுள்ள அரசாங்கக் கட்டடங்கள், பொது இடங்கள் மற்றும் பாடசாலைகளைத் தயார் நிலையில் வைக்குமாறு இராணுவத் தரப்பிலிருந்து, அரசாங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக இராணுவத்தினர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினரின் இந்த அறிவித்தலைத் தொடர்ந்து ஒரு இலட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்து வந்தால் அவர்களைத் தங்கவைத்து அவர்களுக்கான உடனடி நிவாரணங்களை வழங்குவது பற்றி அரசாங்க அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நெலுங்குளம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 232 பேர் மெனிக்பாமில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வன்னியில் மோதல்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி இதுவரை சுமார் 1178 பேர் வவுனியா மாவட்டம் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் நெலுங்குளம் இடைத்தங்கல் முகாமிலும், நெலுங்குளம் பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 232 பேர் செட்டிக்குளத்திலுள்ள மெனிக்பாமில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முகாமிற்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன், நெலுங்குளம் இடைத்தங்கல் முகாமிலிருந்து மெனிக்பாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வவுனியாச் செய்தியாளர் அறியத்தருகிறார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை இன்று வியாழக்கிழமை முதல் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துமாறு இராணுவத் தலைமையகம் அரசாங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய செட்டிக்குளத்திலுள்ள மெனிக்பாம் மற்றும் நெலுங்குளம் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஐஎன்லங்கா
0 விமர்சனங்கள்:
Post a Comment