பிரபாகரனும் முக்கிய தலைவர்களும் தமிழகத்துக்கு ஓடிவிட்டதாக தகவல்
கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சி நகரை அரசபடையினர் கைப்பற்றிவிட்ட நிலையிலும் அதற்கு முன்னரும் பின்னரும் விமானப்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட தீவிர விமானக்குண்டுவீச்சு மற்றும் மல்ரி பரல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களாலும் புலிகள் இயக்கத்தலைவர்களும் அவர்களின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களும் கிளிநொச்சிப்பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ள நிலையிலும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உட்பட ஏனைய முன்னனித் தலைவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றிய பல்வேறு தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.எவ்வாறாயினும் அங்கிருந்து படையினர் தரப்புக்கு கிடைத்துவரும் சில தகவல்களின் அடிப்படையிலும் மற்றும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவுத் தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலும் பார்க்கும்போது பிரபாகரன் தனது முக்கிய சகாக்களுடன் கிளிநொச்சியைவிட்டு மட்டுமல்ல, நாட்டைவிட்டே தப்பியோடிவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அரச படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதுடன் தமது தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்திவிடாது தொடர்ந்தும் முல்லைத்தீவை நோக்கி கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டவண்ணம் முன்னேறிவருகின்றனர். விமானப் படையினரின் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதல்களும் கிளிநொச்சிக்கு அப்பால் முல்லைத்தீவை நோக்கிப் பிரதேசங்கள் மீது தொடர்ந்து கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சியை விட்டு தப்பியோடிவிட்ட பிரபாகரனும் அவருடைய பிரதான தலைவர்களும் அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவு பிரதேசத்தில் பாதுகாப்பாக பதுங்கியிருக்க முடியாது. இதனாலேயே பிரபாகரனுக்கும் சகாக்களுக்கும் நாட்டைவிட்டு தப்பியோடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு தொடரும் கடும் யுத்தம் காரணமாக பிரபாகரன் தன் சகாக்களுடன் இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியிருக்கக்கூடும் எனவும் பெரும்பாலும் அவர்கள் தென்னிந்திய மாநிலமாகிய தமிழ்நாட்டுக்கே தப்பியோடியிருப்பார்கள் என்றும் அரச பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் புலிகள் இயக்கத்தலைவருக்கும் இயக்கத்தினருக்கும் ஆதரவான ஒரு அரசியல் சூழ்நிலையே நிலவுவதால் பிரபாகரனும் சகாக்களும் தமிழ்நாட்டுக்குத் தப்பியோடியிருக்கக்கூடும் என மேலும் அரச தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியை அரசபடையினர் கைப்பற்றிய கடந்த 2 ஆம் திகதியோ அல்லது இரண்டொரு நாட்களுக்கிடையேயோ இவ்வாறு பிரபாகரனும் முக்கிய தலைவர்களும் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கக்கூடும் எனவும் பெரும்பாலும் முல்லைத்தீவுக் கடல்மார்க்கமாக அவர்கள் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அரச தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டபோது அங்கு புலிகள் இயக்கத் தலைவர்களோ இயக்கப்படையினரோ அப்பிரதேசத்தில் காணப்படாதநிலையிலும் மேலும் முல்லைத்தீவைச் சுற்றிய பிரதேசங்களிலும் தப்பியோடும் புலிகள் இயக்கத்தலைவர்கள் உறுப்பினர்களைத்தேடி விமானப்படையினர் குண்டுவீச்சுகளை மேற்கொண்டுவரும் நிலையிலும் பிரபாகரனும் சகாக்களும் முல்லைத்தீவு கடல்மார்க்கமாகத் தப்பியோடக்கூடும் என எற்கனவே பாதுகாப்புத்துறை எதிர்பார்த்திருந்தது. இதனாலேயே பாதுகாப்புத்துறையின் தீவிர ஏற்பாட்டின் கீழ் கடற்படையினர் இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையியேயான வடக்குக் கடற்பரப்பில் தமது கண்காணிப்பு நடவடிக்?ககளைப் பலப்படுத்தியிருந்தனர். அத்துடன் கிளிநொச்சித் தோல்வியைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவக்கூடும் என்ற சந்தேகத்தில் இந்தியக் கடற்படையினரும் தமிழ்நாடு கடலோரக் கண்காணிப்புப் படையினரும் தொடர்ச்சியான ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல்மார்க்கமாகத் தலைவரும் ஏனைய தலைவர்களும் ஸ்ரீலங்கா கடற்படையினரினதும் இந்தியக் கடற்படையினரதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பிடிபடாமல் தப்பிச்செல்வது பெரும்பாலும் இயலாத முயற்சியாகவே இருக்கும்.
எனவேதான் பிரபாகரன் தமிழ்நாட்டிற்குத் தப்பியோடியிருக்கக்கூடும் என அரச தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேவேளை அவ்வாறு அவரும் தலைவர்களும் இதுவரை தமிழ்நாட்டுக்குத் தப்பிச்செல்லாவிட்டால் தற்போது ஸ்ரீலங்கா, இந்தியக் கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவிட்டதால் இனிமேல் கடல்மார்க்கமாக பிரபாகரனும் தலைவர்களும் தமிழ்நாட்டுக்குத் தப்பியோடுவது முடியாதகாரியமாகவே இருக்கும். இந்நிலையில் பிரபாகரனோ தலைவர்களோ முல்லைத்தீவு பிரதேசத்தில் தான் இன்னும் இருக்கின்றார்கள் என்றால் வெகுவிரைவில் அரசபடையினரால் கொல்லப்படக்கூடும் அல்லது உயிருடன் கைது செய்யப்படக்கூடும் என அரசபாதுக்காப்புத்துறை தெரிவித்துள்ள. கடல்மார்க்கமாக இனிமேல் தப்பிச்செல்ல முயன்றாலும் கடற்பரப்பில் வைத்தே பிரபாகரனும் தவைவர்களும் ஸ்ரீலங்கா கடற்படையினரால் அல்லது இந்தியக் கடற்படையினரால் கொல்லப்படக்கூடும் அல்லது கைதுசெய்யப்படக்கூடும் என மேலும் பாதுகாப்புத்துறை தரப்பில் சாத்தியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவயின: 03.01.2009
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment