பிரபாகரனை காப்பாற்ற ஒபாமாவின் ஆதரவை நாடிய அமெரிக்கத் தமிழர்கள்
ஸ்ரீலங்கா அரச படையினரின் தீவிர தொடர் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலாக தலைவர்களும் வடக்கு, கிழக்கில் குறுகியதொரு பிரதேசத்தைத் தவிர அனைத்து நிலப்பரப்புகளையும் இழந்துவிட்ட நிலையிலும் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் இறுதி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையிலும் அவரையும் இயக்கத்தையும் காப்பாற்றுவதற்காக யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவருவதற்காக இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் புலிகள் இயக்கத்தினரும் இயக்கப் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் அவசர அவசரமாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். எவ்வாறாயினும் தமிழர்கள் கூடுதலாக வாழும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் நாடுகளில் மேற்படி புலிகள் இயக்கத் தரப்பினர் வன்னியில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிவிட்டன. இதற்குக் காரணம் குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் பிரபாகரனின் புலிகள் இயக்கத்தை முற்றுமுழுதாக ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக் கொண்டிருப்பதே ஆகும்.
இந்நிலையில், அண்மையில் ஐக்கிய அமெரிக்காவிலும் இவ்வாறு பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் ஸ்ரீலங்கா அரச படையினரிடமிருந்து காப்பாற்றும் ஒரு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலையொட்டி உருவான ஒபாமாவுக்காக அமெரிக்கத் தமிழர்கள் என்ற அமைப்பே பிரபாகரனைக் காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் புலிகள் இயக்கத்தினர் ஆதரவாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திடீர் அமைப்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாறு மேற்படி பெயரிலான தமிழர் அமைப்பு என்று ஜனாதிபதி தேர்தலின் போது ஒபாமாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததோ இல்லையோ ஆனால், ஒபாமா வெற்றியீட்டிய பின்னர் அவரை ஏதோ வகையில் சந்தித்து ஸ்ரீலங்காவில் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசியுள்ளது. அவர்களின் முக்கிய நோக்கம் ஒபாமா மூலமாக ஸ்ரீலங்கா அரசை யுத்தநிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதே ஆகும்.
இதற்காக அவர்கள் பல்வேறு போலியான தகவல்களை ஒபாமாவிடம் கூறியுள்ளனர். அதாவது ஸ்ரீலங்காவில் 90 வீதமான தமிழர்களும் தனிநாடு பெறுவதையே விரும்புவதாகவும் இவ்வாறு தமிழர்களின் கோரிக்கை அடிப்படையிலேயே பிரபாகரனும் அவரின் புலிகள் இயக்கமும் போராடுவதாகவும் தற்போதைய யுத்தம் ஸ்ரீலங்கா அரசால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே உடனடியாக யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த உதவும் படியும் மேற்படி ஒபாமாவுக்காக அமெரிக்கத் தமிழர்கள் அமைப்பு ஒபாமாவைப் பேச்சுவார்த்தையின் போது கோரியுள்ளது. இதற்காக உடனடியாக சமாதானத்தூதுவர் ஒருவரை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பும்படியும் குறித்த அமைப்பு ஒபாமாவை வேண்டியது. ஆனால், புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானிக்கப்பட்டு அமெரிக்க அரசால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைப் பொருட்படுத்தாது ஒபாமா தமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஸ்ரீலங்காவுக்கு சமாதான தூதுவரை அனுப்புவார் என்பதே மேற்படி புலிகள் இயக்கம் சார்ந்த அமெரிக்கத் தமிழர்கள் அமைப்பின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஒபாமா அவர்களின் கோரிக்கையையிட்டு பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஸ்ரீலங்காவில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்ததுடன் மட்டுமே நிறுத்திக் கொண்டாரே அன்றி மேற்படி அமைப்பு கோரியபடி தீவிரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
திவயின விமர்சனப்பகுதி 4.1.2009
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment