இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றத்தை தலையிடக் கோரிக்கை
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கோரியுள்ளார்.
சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர்களில் ஒருவராகவுள்ள எஸ்.பிரபாகரன் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு:-
இலங்கைத் தமிழர்களை முற்றிலுமாக அழிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற மனிதப் படுகொலைகளை உலகில் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கையில் இயல்பு நிலை திரும்ப உலகநாடுகள் முயன்று வருகின்றன. சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர் என்ற முறையில் சாவதேச நீதிமன்றத்தை நான் அணுகுகின்றேன். ஐக்கியநாடுகள் அமைப்பு இதில் தலையிட்டு மனிதத் தன்மையற்ற முறையில் நடைபெற்றுவரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த உத்தரவிடவேண்டும்.
இந்தப் பிரச்சினையில் தீர்வு ஏற்படாததற்கு இலங்கை அரசே முழுப் பொறுப்பு. இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு முன்வைத்த பல்வேறு திட்டங்களுக்கு இலங்கை அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை.
இந்த நிலையில் உலகநாடுகள் ஐ.நா.சபையின் மூலம் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்கும் பணியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்தப் போரில் குழந்தைகள், பெண்களும் விட்டு வைக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையை உலகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காண முடியாது என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதில் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் கொண்டுவர வேண்டும்.
முல்லைத்தீவில் அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புமாறு ஐ.நா.சபைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் எஸ் பிரபாகரன் கோரியுள்ளார்.
நன்றி - தமிழ்வின்
0 விமர்சனங்கள்:
Post a Comment