பிரபாகரன் எங்கே? : அதிரடித் தேடலில் சிங்கள ராணுவம்
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவது என்ற மூர்க்கத்துடன் சிங்கள ராணுவம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக தனி விமானத்துடன் சிறப்பு அதிரடிப்படை ஒன்றையும் ராணுவம் அமைத்துள்ளதாக இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவை நாலாபுறம் இராணுவம் சூழ்ந்துள்ளது. இராணுவத்தின் 7 பிரிவுகள் முல்லைத்தீவை சூழ்ந்துள்ளன. பிரபாகரன் தப்பிவிடாமல் வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த இராணுவ அதிகாரி கூறினார்.
இலங்கையில் தமிழ் ஈழத்துக்காக போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் கடும் போர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விடுதலைப்புலிகள் வசம் இன்னும் 20 கிலோ மீட்டர் அளவில் கடற்கரை பகுதி இருக்கிறது.
இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர் புதுக்குடியிருப்பு அல்லது விஷ்வா மடு என்ற இடத்தில் உள்ள அதிநவீன பாதாள அறைகளில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரபாகரன், தனது அதிவிரைவு படகில் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கலாம் என்றும், நவீன குட்டி விமானத்தில் பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டுக்கு பறந்து சென்று விட்டதாகவும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.
பிரபாகரன் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று பிடிப்பதற்காக தனி விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்லும் அதிரடி வீரர்கள் பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் இடத்தில் பரசூட் மூலம் குதிப்பார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் நடமாட்டத்தையும் இந்த சிறப்பு அதிரடிப் படை கண்காணித்து வருகிறது. எப்படியும் இராணுவம் பிரபாகரனை பிடித்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரபாகரன் கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது. முல்லைத்தீவு வனப் பகுதியில் பிரபாகரன் எங்காவது மறைந்திருக்கிறாரா என்று இலங்கை விமானப்படை விமானங்கள் தீவிரமாகத் தேடி வருகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமேடு பகுதிகளில் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
பிரபாகரன் தங்கியிருந்திருக்கலாம் என்று கருதப்படும் 2 பாதாள பதுங்கு அறைகளை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்த பாதாள பதுங்கு அறைகளை கைப்பற்றியதால் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுபோன்ற பல பாதாள அறைகளை பிரபாகரன் உருவாக்கியிருக்கக் கூடும் என்று தற்போது கருதப்படுகிறது.
பிரபாகரனை பாதுகாக்க கறுப்புப் புலி படை உள்ளது. இந்த படையினர் கடுமையாக பயிற்சி பெற்றவர்கள் பிரபாகரனுக்கு மிகவும் விசுவாசமானவர்கள். பிரபாகரனை பிடிக்க வேண்டுமானால் இவர்களை வீழ்த்திவிட்டுதான் பிடிக்க முடியும்.
அதிவேக நவீன படகு மூலம் பிரபாகரன் முல்லைத்தீவிலிருந்து தப்பி நடுக்கடலில் உள்ள கப்பலுக்குச் செல்ல முடியும் என்று இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா ஏற்கெனவே கூறியிருந்தார்.
ஆனால் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புக்கும் விஸ்வமேட்டுக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அதி பாதாள அறையில் பிரபாகரன் தங்கியிருக்கக் கூடும் என்று இராணுவ அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.
தனது இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்காதவாறு அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார் என்று கருதுகின்றனர். அவர் தப்பியிருக்க வழியில்லை. முல்லைத்தீவில் 30 கி.மீ. பரப்பளவில்தான் அவர் பதுங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தும் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உள்ளது.
பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்று இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.
பிரபாகரன் மட்டுமின்றி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைப் பிடிக்கவும் இராணுவம் உஷார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "இலங்கை ராணுவம் வெற்றியின் விளிம்பில் இருக்கிறது. விடுதலைப்புலிகள் சரண் அடைவது தவிர, வேறு எந்த பேச்சுக்கும் இடம் இல்லை. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க, அந்த நாடு கோரிக்கை விடுத்தால் பரிசீலிப்போம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.
தற்போதுள்ள நிலவரம் பற்றி, இலங்கை ராணுவ செயலாளர் கோதபயா ராஜபக்சே கூறியதாவது:-
பிரபாகரன், இதுவரை இலங்கையை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றால், அவரை விரைவில் பிடித்து விடுவோம்.
பிரபாகரனை பிடிக்க விசேஷ படை அமைக்கப்பட்டு உள்ளது. முல்லைத்தீவை சுற்றிலும் 7 படைப்பிரிவினர் சுற்றி வளைத்து முன்னேறுகிறார்கள். பிரபாகரன் இருக்கும் இடம் அறியப்பட்டால், உடனே அந்த இடத்தில் பாராசூட் வீரர்களை இறக்க விமானப்படையின் விமானங்கள் தயாராக உள்ளன.
அவரை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வேவு பார்க்கும் விமானங்களும், செயற்கைகோள் மூலம் இயங்கும் கருவிகளும், ரேடார் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர் தங்கி இருந்த 2 பாதாள அறைகள் பிடிபட்டு உள்ளன. இது போன்று மேலும் சில இருக்கலாம் என்று கருதுகிறோம்.
இவ்வாறு ராணுவ செயலாளர் கூறினார்.
"வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு, பிரபாகரன் விரைவு படகில் சென்று, அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பலில் ஏறி தப்பி செல்லவும் வாய்ப்பு உண்டு" என்று ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,"விடுதலைப்புலிகள் தற்போது 1,600 பேர் மட்டும் இருப்பதாக உறுதியான தகவல் வந்து இருக்கிறது" என்றார்.
Last update : 21-01-2009 04:16
விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment