பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி கூறியுள்ள, இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்ல, முல்லைத்தீவில் முழுவீச்சில் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் இராணுவம் அதன் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீரும் என்று கூறியிருக்கிறார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டன. தற்போது அவர்கள் முல்லைத்தீவில் மட்டுமே இருப்பதால் அங்கு அவர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது.
முல்லைத்தீவில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை இராணுவம் கூறி வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சிக்கும், முல்லைத்தீவுக்கும் இடையே எல்லைப்பகுதியில் உள்ள தர்மபுரம் பகுதியில் பிரபாகரன் தங்கியிருந்ததாக கருதப்படும் ஆடம்பரமான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பதுங்குகுழி படத்தை இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ளது.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பிரபாகரன் பதுங்கு குழிகளில் மாறிமாறி சென்று கொண்டிருக்கிறார். அவரை சுமார் ஆயிரம் புலிகள் பாதுகாத்து வருகிறார்கள். அவரை நாங்கள் பிடித்து விடுவோம். எங்கள் நோக்கம் எங்கள் மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது தான் என்று ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இலங்கை இராணுவத் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பொன்சேகா விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களுக்கு தனது அரசு இல்லத்தில் சந்தித்து பேசிய பொன்சேகா, கிளிநொச்சி வீழ்ந்த பிறகு கடந்த 17 நாட்களில் முல்லைத்தீவில் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாக தெரிவித்ததுடன், எதிர்பார்க்கப்பட்டதைவிட முல்லைத்தீவு வெகுவேகமாக தங்கள் கட்டுப்பாட்டில் வந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் ஆதிக்கம் செலுத்தி வந்த விடுதலைப்புலிகள் தற்போது முல்லைத்தீவில் உள்ள ஒரு சிறு காட்டுப் பகுதிக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.
புலிகள் இயக்கத்தில் தற்போது நன்கு பயிற்சிப் பெற்ற போராளிகள் ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். எனவே புலிகளுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் பொன்சேகா தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அவர் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கலாம். விடுதலைப் புலிகள் தற்போது தப்பிச் செல்வதற்குள்ள ஒரே வழி தென்கிழக்கு ஆசியாவை நோக்கி செல்வதற்கான கடல்மார்க்கம் தான் என்றும் அவர் கூறினார்.
tamilwin
0 விமர்சனங்கள்:
Post a Comment