சர்வதேச சமூகம் முல்லைத்தீவுக்கு நேரில் செல்ல வேண்டும்: சம்பந்தன்
முல்லைத்தீவிலுள்ள மக்களின் நிலைமைகளை சர்வதேச சமூகம் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கையின் வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்கள் அனுபவித்துவரும் துயரங்களை நேரில் கண்டறிய வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
“மோதல்கள் காரணமாக வன்னியில் 4 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்வதும், இடம்பெயராமலிருப்பதும் மக்களின் விருப்பம். ஆனால், அரசாங்கம் பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களைப் பலவந்தமாக இடம்பெயரச் செய்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன” என அவர் குற்றஞ்சாட்டினார்.
புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் அழித்து வருவதாகவும், அப்பாவிப் பொதுமக்கள் இடம்பெயர்ந்து மரநிழல்களின் கீழ் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் சம்பந்தன் கூறினார்.
“பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலைமைகளை அறிவதற்கு சர்வதேச சமூகம் நேரடியாக விஜயம் செய்ய வேண்டும். வடபகுதிக்கு மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கும் சர்வதேச சமூகம் செல்ல வேண்டும்” என்றார் அவர்.
இதேவேளை, நாடுகளில் காணப்படும் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்று காணப்பட வேண்டும் என அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருப்பதை நினைவு கூர்ந்த சம்பந்தன், அவர் கூறுவதைப் போன்று சமூகங்களை சமமாக மதிக்கும் ஜனநாயகம் இல்லையெனக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment