ஒபாமாவின் பதவியேற்பு பிரார்த்தனையில் இந்துமத பெண் மதகுருவும் பங்கேற்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்றதைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆன்மீகப் பிரார்த்தனையில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் பூசகர் ஒருவரும் பங்கேற்கின்றார். வட அமெரிக்காவின் இந்துக்கோவில் சங்கத் தலைவரான டாக்டர் உமா மைசூர்கர் என்ற பெண் பூசகரே இப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்கின்றார். அமெரிக்காவிலுள்ள எட்டுமதங்களின் தலைவர்களும் கலந்து கொள்ளும் இப்பிரார்த்தனை நிகழ்வில் இந்துமதகுரு ஒருவர் கலந்துகொள்வது, மதங்கள் தொடர்பில் அமெரிக்காவின் பாரம்பரியத்தையும் மதச்சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதாக அமையுமென பதவியேற்பு சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள கணேஷா ஆலயத்தின் தலைவரான உமா, பெண்கள் தொடர்பான நோய்க்கான மருத்துவத்தில் நிபுணராவார். நடைபெறவுள்ள பிரார்த்தனை நிகழ்வில் அந்தந்த மதங்களின் வேதங்கள் ஒதுதல், துதிபாடுதல், மற்றும் அனைத்து மதத்தலைவர்களினாலும் ஆசிர்வதிக்கப்படுதல் ஆகியன நடைபெறும். இப்பிரார்த்தனை நிகழ்வில் பொது அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொள்வதுடன் இது ஒரு நாட்டுக்கான பிரார்த்தனை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வின் தொடர்ச்சியாக நடைபெறும் பிரார்த்தனையில் பெண் மதகுரு ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதற்தடவையாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment