பிரபாகரனை கடலினுள் தள்ளி விடும் நாளின் வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள்
"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எமது படையினர் கடலினுள் தள்ளி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த வெற்றி நாளைக் கொண்டாட மக்கள் இப்போதே தயாராக வேண்டு' மென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நாவுல பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூடத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய மாகாணசபைக்கு மாத்தளை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சிகளின் வேட்பாளர்களும் அமைச்சர்களும் கலந்து கொண்ட அக் கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்;
"பொறுமை இழந்த நிலையில் நாம் அன்று "மாவில் ஆறு' வில் தொடங்கிய படை நடவடிக்கைப் பயணத்தை இடை நிறுத்தாமலும் பின்வாங்கிச் செல்லாமலும் முன்னெடுத்துச் செல்கின்றோம். அதன் விளைவாக இன்று புலிகளும் அவர்களின் தலைவரும் ஒரு சிறிய நிலப் பரப்பிற்குள் சிக்குண்டுள்ளனர். மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட இக் குழுவினரை எமது படையினர் கடலினுள் தள்ளிவிடும் நாள் தூரத்திலில்லை.
அந்த நன்னாளில் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளைப் பறக்க விட்டு நாம் இழந்து போயிருந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு எமக்குதவிய பாதுகாப்புப் படை வீரர்களை வரவேற்பதற்கும் வாழ்த்துக் கூறுவதற்கும் ஆயத்தமாகுங்கள் என்ற செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், புலிகளின் வாய்களிலிருந்து நாட்டை மீட்டெடுத்து பிரிவினையற்ற ஐக்கியம் மிகுந்த நாடாக இந்நாட்டை பிரகடனப்படுத்தவிருக்கும் தருணத்தில் தான் மத்திய மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறீர்கள்.
நீங்கள் அளிக்கும் வாக்குகள் நாம் செல்லும் இப்பயணத்திற்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை முழு உலகிற்கும் பறைசாற்றும் ஓர் மாகாண சபைத் தேர்தலாக அமையப் போகிறது. நாட்டுக்காக நீங்கள் நிறைவேற்றக் கூடிய கடமையென உணர்ந்து செயற்படுவீர்களென்பது எனது நம்பிக்கையாகும்.
கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளனர். இது தவிர மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இம்முறை மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளருமான ஒருவர் எம்முடன் இணைந்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எமக்குக் கிடைக்கவிருக்கும் வெற்றியையும் எமது தாய் நாட்டின் வெற்றியையுமே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாவதற்கான காலம் கனிந்து வருகின்றது. 300 பில்லியன் ரூபா செலவில் இப்பிரதேச அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மொறகஹகந்த திட்டம் பூர்த்தியாகும் போது அதன் மூலம் பாரிய பயன்களைப் பெறுவர். இப்பிரதேச கிராமங்களின் அபிவிருத்திக்கு நாம் உத்தரவாதம் அளிக்கின்றோம்.
தேர்தலில் உங்கள் மூன்று விருப்புகளையும் மூன்று உறுப்பினர்களின் பொருட்டு பயன்படுத்துவதுடன், எவரும் தனியொருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்களிக்கும் விளையாட்டில் ஈடுபட வேண்டாமெனவும் தனியொருவருக்கு தனி விருப்பு வாக்களிப்பை மக்கள் நிராகரித்து விட வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றேன்' என்று கூறினார்.
இதன் போது அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜோன் செனவிரத்ன, ஜனக பண்டார தென்னக்கோன், மைத்திரிபால சிறிசேன, ஹேமகுமார நாணயக்கார, சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் உரையாற்றினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment