இன்னும் இரு வாரத்திற்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் - விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.
இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 1983 ஜூலை 23ஆம் திகதி 13 இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்ததால் தலைநகரில் இனக்கலவரம் ஏற்பட்டது.
அந்த கலவரத்தில் பல உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அன்றிருந்த சுயநல அரசியல் வாதிகளால் இந்நாட்டில் யுத்தம் ஆரம்பமாகியது. இன்றைய ஜனாதிபதி அன்றிருந்திருந்தால் இந்த யுத்தம் இந்தளவிற்கு உக்கிரம் அடைந்திருக்காது.
இந்த நாட்டில் யுத்தமும் ஆரம்பித்திருக்காது. இலங்கை வரலாற்றில் நாம் பல ஜனாதிபதிகளை பார்த்திருக்கின்றோம். அவர்களை விட வித்தியாசமான ஜனாதிபதிதான் மஹிந்த ராஜபக்ஷ. இன்று இந்த நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. இதற்கு காரணம் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி அவரை சக்தியுள்ளவராக்கியுள்ளனர்.
தலைவர் பிரபாகரனை அரசியல் நீரோட்டத்திற்கு வரும்படி பலமுறை கூறியிருக்கின்றேன். ஆனால், அது வெற்றி பெறவில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், பிரபாகரனால் அந்த அரசியல் தீர்வை பெற முடியாமல் இருந்தது. அதன்பின் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன் பின் ஜனாதிபதி என்னை அழைத்து எங்களுடன் இணைந்து செயல்படுங்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகளை நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்று கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை 4 வருடங்களுக்கு பின் கிழக்கு மாகாணத்தில் இன்று நிறைவேறியுள்ளது.
இன்று அங்கு நிர்வாக வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் சுதந்திரமாக செயற்பட பல உயிர்த்தியாகங்கள் நடைபெற்றன. இப்பொழுது மக்கள் சுதந்திரமாக வாழுகின்றனர். அதேபோல வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர்.
இந்த யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி பெற பல உயிர்த்தியாகம் நடைபெறும். இதில் சிங்கள மக்கள் நன்மையடையப் போவதில்லை. தமிழ் மக்களே நன்மை அடைவார்கள். இன்று வட மாகாணத்தில் கடந்த வருடங்களை விட பொருட்களின் விலை குறைந்து பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து வருகின்றது.
எமது ஜனாதிபதியின் உறுதியான முடிவே இந்த வெற்றியாகும். எனவே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபை வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment