வன்னி மக்களை அரசாங்கமே பாதுகாக்க வேண்டும்: மனித உரிமைகள் அமைப்பு
வன்னியிலிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழிக்கமுடியாதென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னியில், சிறிய பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றிக் கிடைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்; விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத் தரப்பினரிடமும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களின் நிலைமை ஆபத்தானதாக மாறிவருவதாகக் கூறிய பிரட் அடம்ஸ், அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத் தரப்பினரும் மேற்கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், போர் விதிமுறைகளுக்கமைய இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் நடந்துகொள்ளவேண்டுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களில் அதிகளவில் பொதுமக்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் இருப்பதாக சர்வதேச நிவாரண முகவரமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment