வன்னி நிலைமை குறித்து பிரித்தானியா கவலை
வன்னி மக்களின் துன்பநிலை குறித்து பிரித்தானிய அரசாங்கம் கவலையடைந்திருப்பதாக பிரித்தானிய அமைச்சர்களான டேவிட் மில்லிபான்ட் மற்றும் மார்க் மல்லோக் பிரவுணும் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழு மற்றும் பிரத்தானிய தமிழ் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
தமிழ் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் அரசியல்த் தீர்வொன்றை இலங்கை முன்வைக்கவேண்டுமென்பதுடன், தமிழ் மக்களின் சகல உரிமைகளும் மதிப்பளிக்கப்படவேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் கோரியுள்ளார்.
அத்துடன், ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செயற்படவேண்டுமெனக் கூறிய மில்லிபான்ட், முதலில் இலங்கையில் இடம்பெற்றுவரும் கொலைகள் நிறுத்தப்படவேண்டுமென்பதுடன், கொலைகளை நிறுத்த தமக்குள்ள சகல சாத்தியமான வழிமுறைகளையும் பயன்படுத்துவோமெனவும்; குறிப்பிட்டார்.
இலங்கையின் நிலைவரத்தை மனிதாபிமான நெருக்கடியெனக் குறிப்பிட்ட டேவிட் மில்லிபான்ட், ஒவ்வொரு பொதுமகன் உயிரிழப்பதையும் பிரித்தானியா கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தாலும், இலங்கையில் இடம்பெறுவது உள்நாட்டு மோதலென்பதால், வெளிநாட்டு அரசாங்கமொன்று இதில் தலையிடுவது மட்டுப்படுத்தப்பட்டதொன்றெனவும் பிரித்தானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மல்லோக் பிரவுண் தெரிவித்தார்.
இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பிரித்தானியா தோல்வி கண்டுவிட்டதென பிரித்தானிய தமிழ்ச் சமூகம் தெரிவித்த குற்றச்சாட்டை இந்த இரு அமைச்சர்களும் நிராகரித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment