திரு.மகிந்த ராஜபக்ஷ அவர்கட்கு
“ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தை காட்டு” என்றும், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”; என்றும் சொன்ன பாரம்பரியங்களில் வளர்ந்தவர்கள் நாம். ஆனால் இன்று உங்கள் படை நடத்தல்களும், ராஜதந்திரங்களும் எங்களுக்கு உவகையளித்தாலும் காலா காலமாக நாங்கள் கேட்ட பேச்சுரிமை, எழுத்துரிமை என்பன மழுங்கடிக்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு பயமும் எங்களுக்கிருக்கின்றது. காரணம்; படைநகர்த்தலுக்கு முன்பு இருந்த மகிந்த ராஜபக்சவின் தோற்றத்துக்கும், இப்போது தொடை நடுங்க படை நடந்தபின் உள்ள ராஜபக்சவின் தோற்றத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றது. அது தோற்றத்தில்மட்டும்தானா! இல்லை நடைமுறையிலும் வந்து விடுமோ என்ற ஒரு பயமும் எங்களை சலனப்பட வைக்கின்றது. அது, கடந்த 25வருடங்களாக நடந்த எல்லாவற்றையுமே கண்டும, பார்த்த ஏமாற்றங்களாக இருக்கலாம். இல்லை தலையை தடவி கழுத்தை அறுத்த ஜே.ஆர்.வம்சமல்ல நான் இது மகாவம்சத்தில் கண்ட, எறும்புக்கும் தீங்கிழைக்காத புத்தமித்திரன் என்று நீங்கள் நிரூபிக்க வேண்டிய நேரமிது.
ஏன் பயப்படுகின்றோமென்றால் நீங்கள் பரீட்சார்த்தமாக எடுத்துக்கொண்ட கிழக்கிலங்கையில் எல்லாம் சுமுகமாகத்தான் நடப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் உள்ளே நிறைய கசமுசாக்கள் நடப்பதாகத்தான் அரசல், புரசலாக செய்திகள் வருகின்றன. 25வருட பசியை 6மாதத்தில் தீர்க்க முடியாதுதான். ஆனால் ஒப்புக்குச் சப்பாணியாகவாவது நீங்கள் சில “கல்குலேற்றிவ் றிஸ்க்”; எடுக்கத்தான் வேண்டும். உங்களிடம் பல நீண்டகாலத்திட்டங்கள் இருக்கலாம். அதை விடயம் புரிந்த சிலர் புரிந்து கொள்வார்கள். ஆனால் அன்றாடம் கஞ்சிக்கலையும் என்னைப் போன்ற “கையில காசு வாயில தோச” ஆத்மாக்களுக்கு புரியும் படியும், எங்கள் வயிறுகள் நிறையும் படியும், எங்கள் கனவுகள் உயரும் படியும் செய்ய வேண்டியது உங்கள் கடமை.
1972க்கு முன் “தடிஎடுத்தவன் தண்டல் காறன்”; எனக்கூறிக்கொண்டு கள்ளியங்காட்டிலும், தின்னவேலி சந்தியிலும், மட்டக்களப்பு பாறடியிலும், ஏறாவுர் வம்மியடியிலும், கல்முனை ஏ.ஆர்.எம் ஹனிபாவின் பெற்றோள் கராஜ் அடியிலும், பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றத்திலும் இருந்த சண்டியர்கள் வட கிழக்கை மிரட்டிக்கொண்டும் அதே போல் கொழும்பை ஒத்தைக்கை சந்திரே ஐயா, ஆறு விரல் ராஜூ, மறியக்கட தாஸ, சொத்தி உபாலி போன்றவர்கள் உத்தியோகப்பற்ற்ற ஆட்சியாளர்களாகவும் இருந்தனர்.
1973க்குப் பின்னர்தான் சிறிலங்கா அரசே களைகட்டியது. இந்தியர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த நமது குட்டி சிறிலங்கா வரைபடம் ஐ.நா.வில் ஏ.சி.எஸ்.ஹமீதை தள்ளிவிட்டு விட்டு வைகுந்தவாசன் பேசியபோது 143உலக நாடுகளின் தொண்டைக்குளிக்குள் சிக்கோ சிக்கென சிக்கி இனி துப்பாக்கி எடுத்தவன்தான் தண்டல்காறன் என்ற நிலைக்கு தள்ள வைத்தது. அப்பாவியான நாங்களும் ஓ! இனி இதுதான் கடவுளோ!! என நினைத்துஅதைக்கும்பிட்டு வழிபட்டு உடல், பொருள், ஆவி எல்லாம் கொடுத்து பல பேர், பல கட்சி, பல கோஷம். சரி , எல்லோரிடமும் துப்பாக்கி இருக்கின்றது. ஓ இதுதான் ஜனநாயகமோ என எண்ணிமுடிப்பதற்குள் நிறைய கெட்ட சகுனங்கள் எங்கள் படலைகளில் நல்வரவாகின.
எல்லாம் முடிந்து விட்டது எல்லாமே சரி. இனி அதுதான், அவர்தான். விடிவுதான் என்று கண்ணைமூடித்திறப்பதற்குள் என்னன்னவோ நடந்து முடிந்து விட்டது போல் தெரிகின்றது. இது கனவாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த கனவை சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி என்கின்ற பதவியை உள்ளங்கைக்குள் வைத்துள்ள நீங்கள் சற்று விரைவாக நனவாக்க வேண்டும்.
ஈ.பி.டி.பி.யுடன் பேசுகின்றீர்கள், கருணாவுடன் சுமுகமாக இருக்கின்றீர்கள், ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உடன் கைகோர்த்துள்ளீர்கள், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் அதிகாரிகளுடன் அளவளாவுகின்றீர்கள் என்பதையெல்லாம் கேட்கும் போது எங்களுக்கு உற்சாகமாகத்தான் இருக்கின்றது. ஆனால் விடுதலைப்புலிகளுடன் என்ன உறவில் இருக்கின்றீர்கள் என்பதுதான் எங்களுக்குப் புரியாத புதிராக இருக்கின்றது.
வாழ்வோ, சாவோ பல வருடங்கள் களத்தில் நின்று பல தியாகங்களை புரிந்தோ புரியாமலோ செய்த பல உள்ளங்கள் இன்னும் அங்கே இருக்கலாம். இருக்கும். அந்த ஜீவன்களுக்கு உங்களிடமிருந்து இன்னும் எந்தவித பச்சை சிக்னலும் அனுப்பப்படவில்லை.
அடித்தோம் அடிக்கிறோம் ,இன்னும் அடிப்போம் கடைசிப்புலி அழியும் வரை அடிப்போம். என்ற ஓசைதானே கேட்கின்றதே தவிர அவர்களையும் சேர்த்து ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற தொனியை உங்கள் ரத்த சொந்தங்கள் இராணுவ சொந்தங்கள் அரசியல் சொந்தங்கள் அயல்நாட்டு சொந்தங்கள் யாரிடமுமே காணவில்லை. இதே தொனியில்தான் விடுதலைப்புலிகளும் நேற்று வரை பேசினார்கள். செய்தார்கள்.
மீண்டும் .மீண்டும், திரும்பத்திரும்ப, துப்பாக்கிகளின் பாஷையில்தான் அனைவரும் பேசிக்கொண் டிருக்கின்றீர்கள். அதைவிட வேறு ஒரு பாஷை, மொழி இல்லையோ என்ற ஆதங்கம் எங்களை ஒவ்வொரு நொடியும் பிறாண்டி எடுத்துக்கொண்டிருக்கின்றது!
இந்த நிலையில் எங்களை பாதுகாப்பு வலையத்துக்குள் ஓடி வா,ஓடி வா என்றால் எங்களால் எப்படி ஓடி வர முடியும். எங்கள் பிள்ளைகளிலொன்று அங்கு கட்டாயமாகவோ, கட்டாயமின்றியோ துப்பாக்கி ஏந்திக்கொண்டிருக்கின்றது அல்லது மாவீரர் பாசறையில் துயின்று கொண்டிருக்கின்றது.அந்த ரத்த சொந்தங்களை விட்டு விட்டு ஓடிவந்தால் அதற்கென்ன மாற்றுவழி என்று உங்களில் எவருமே கோடிட்டுக் காட்டவில்லை !
மகின்த புறொஜக்ட் என்ற ஒரு மந்திரக்கோல் உங்களிடம் இருப்பதாகவும், எல்லாம் முடிந்தவுடன நீங்கள் அதை ஆரம்பித்து, எங்களுக்கு விடிவு தருவீர்களென்றும் படித்த புத்திஜீவிகள் சொல்லுகின்றார்கள். எல்லாமே முடிந்து என்றால்? நாங்கள் எல்லாம் முடிந்த பின்பா? அல்லது இந்த துப்பாக்கி கலாச்சாரம் முடிந்த பின்பா என்பது கூட தெளிவில்லாமல் இருக்கின்றது !!
எங்கள் சக்திக்கெட்டியவரை “துப்பாக்கி எடுத்தவனுக்கு அந்த துப்பாகியால்தான் சாவு” என படித்து தொலைத்துவிட்டோம். அது ஒரு பக்கம் இருந்து எங்கள் உள்மனதை உறுத்திக் கொண்டிருக்கின்றது !!
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க எப்போதுமே எல்லாத்தரப்புகளையுமே தூக்கி சாப்பிட்டு விட்டு வேடிக்கை வினோதங்களைப் புரியும் இந்திய றோ அமைப்பையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் பிள்ளையார் சுழி போட்டு துவக்கி விட்டு, அப்புறம் விட்டுப் பிடித்து விளையாடி மூக்கணாங்கயிறை இறுக்குவார்கள். மீண்டும் ஒருமுறை உத்தரப்பிரதேசம் போய் பயிற்சி எடுத்து தமிழ்நாட்டு பட்டிதொட்டில்களிலெல்லாம் கேம்ப் போட்டு தங்கச்சிமடத்திலிருந்து தோணியேறுவதற்கு எங்களிடம் பிள்ளைகளும் இல்லை. எங்க உடம்புகளில் திராணியும் இல்லை.
இப்போது இந்திய றோ பந்தை உங்களிடம் தந்துள்ளார்கள். சிக்சரும் அடிக்காமல் விக்கட்டும் பறக்காமல், பவுன்றி மட்டுமே அடிப்பதுதான் போதிசத்துவன் வழி வந்த சிறிலங்காவுக்கழகு என நாங்கள் நினைக்கின்றோம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment