மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளியேன் -ஜனாதிபதி
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு நாட்டில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று (27) மாலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைக்கவோ, இழுத்தடிக்கவோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
ஊடகவியலாளர்களைத் தாக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது. அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கும்போது இத்தகைய கேவலமான வேலையை செய்ய வேண்டிய எந்தத் தேவையும் அரசுக்கு இல்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்படும்போது அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமானதொரு செயலாகும்.
~சண்டே லீடர்| ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ~ரிவிர| ஆசிரியர் காமினி விஜயக்கோன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பன தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரிகைகள் பக்கம் சாராது நடுநிலைமையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்புண்டு. தமிழ்ப் பத்திரிகைகள், தமிழர்களிடத்தில் சிங்கள மக்களுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இச்செயல் நாட்டு மக்களுக்கு மத்தியில் பாரதூரமான குரோதத்தை ஏற்படுத்தி, அமைதியின்மையைத் தோற்றுவிக்கும்.
அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவேயன்றி தமிழ் மக்களுக்கெதிரானதல்ல.
வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செயற்பட வேண்டும். புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளை வலியுறுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment