விடையில்லாத புதிர்
இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இன்னுமொரு யுத்தம் உருவாகுமா எனும் கேள்வி உலகெங்கிலும் விவாதிக்கப்படுகிறது. இந்திய மக்களில் பெரும்பாலோருக்கு பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி என்பது மட்டுமே தெரிகிறது. ஆனால் பாகிஸ்தானை அழித்து ஒழித்துவிட இந்தியா துடிக்கிறது என்பதுபோல ஒரு பிரமையை அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளனர்.
அதுமட்டுமன்றி பாகிஸ்தான் எனும் ஒரு நாடு கூடிய விரைவில் சிதறுண்டுபோய் உலக வரைபடத்திருந்து நீக்கப்பட்டுவிடுமோ எனும் கவலை அந்நாட்டின் மீது உண்மையிலேயே பற்றுள்ள நல்ல பல பாகிஸ்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் அங்கு நிலவிவரும் தீவிரவாதம் மட்டுமல்ல. அந்நாட்டில் 1947ம் ஆண்டு முதல் நிலவிவரும் அரசியல், பொருளாதார, சமூக சீரழிவுகளும்தான்.
1947ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் திகதி பாகிஸ்தான் உருவாகியது. மறுநாள் ஜனநாயக இந்தியா உருவாகியது. ஜனநாயகத்தின் மீது உண்மையான நம்பிக்கை வைத்து பல சிக்கல்களுக்கு இடையிலும் இன்றுவரை அதைப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளோம் நாம். ஆனால், பாகிஸ்தானில் இரண்டு பிரச்சினைகள் ஆரம்பம் முதலே தலைவிரித்தாடி அங்கு ஜனநாயகம் வேரூன்ற விடாமல் தடுத்துவிட்டன.
ஒன்று, இஸ்லாம் மதத்தினை அடிப்படையாக வைத்து எப்படி அரசியல் சாசனம் எழுதுவது என்பதும் இன்றைய வங்கதேச, அன்றைய கிழக்கு பாகிஸ்தானை உள்ளடக்கிய ஓர் ஆட்சியமைப்பை எப்படி உருவாக்குவது என்பதுமாகும். இதனால் அவர்களால் 1949 வரை ஒரு நிர்ணய சபையைக் கூட உருவாக்க முடியவில்லை. அதன்பின் உருவாக்கப்பட்ட நிர்ணயசபை பல கருத்து வேறுபாடுகள் காரணமாக செயலிழந்த நிலையில் இயங்கியது. 1954ஆம் ஆண்டு புதியதொரு அரசியல் சட்ட நிர்ணயசபை உருவாக்கப்பட்டது. பாகிஸ்தானின் அரசியல் சட்டம் 1956ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல்தான் அமுலுக்கு வந்தது.
அதன்படி இந்தியா போலவே அங்கேயும் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எல்லா குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் ஆன மந்திரி சபையும், பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களும் நாட்டை நிர்வகிக்க வேண்டும் எனும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
ஆனால் இந்த ஜனநாயக ஆட்சிமுறை இரண்டே ஆண்டுகள்தான் நடைமுறையில் இருந்தது. அன்றைய ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்சா 1958 அக்டோபர் 7 இல் இராணுவத் தளபதி அயுப் கானுடன் சேர்ந்து கொண்டு இராணுவ சர்வாதிகார ஆட்சியைப் பிரகடனம் செய்தார்.
இது நடந்த சில வாரங்களில் ஜனாதிபதியை நாடு கடத்திவிட்டு, ஜெனரல் அயுப் கான் தன்னை ஜனாதிபதியாக அறிவித்து ராணுவ ஆட்சியை பாகிஸ்தானில் நடைமுறைப்படுத்தினார்.
அன்றிருந்து இன்றுவரை பாகிஸ்தான் தன் மக்களை முன்னேற்றும் வகையிலான ஓர் அரசியலையும், ஆட்சியையும் பார்க்கவே இல்லை.
நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பாகிஸ்தானில் உள்ள நிறைய பேர் தங்கள் நாடும் ஜனநாயகத்தைத் தழுவி இந்தியா போலவே பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால், இராணுவமும், அவர்களால் உருவாக்கப்பட்ட பல தீவிரவாத அமைப்புகளும் ஜனநாயகத்தின் எதிரிகளாகச் செயல்பட்டு சட்டத்தை தங்கள் கையிலெடுத்து அந்த நாட்டை அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டு சென்றுவிட்டன.
பாகிஸ்தானின் இன்றைய நிலைமை என்ன? அதன் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. இன்றும் அமெரிக்காவின் உதவியில்தான் அங்கே அரசு பட்ஜெட்டுக்கான பணம் கிடைக்கிறது.
இந்த மாதம் முதல் சர்வதேச வளரும் பொருளாதாரக் குறியீடு கணக்கிருந்து பாகிஸ்தான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நாட்டில் பொருளாதாரம் தேக்கநிலைக்குச் சென்றுவிட்டதாக உலக வர்த்தக நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பங்குச்சந்தை 40 சதவிகிதம் தோல்வி அடைந்துள்ளது. பங்குச்சந்தையில் பங்குகளின் விலை 40 சதவிகிதம் குறைந்தது என்பது வேறு; 40 சதவிகிதம் தோல்வியடைந்தது என்பது வேறு. பங்கு விலையை முதலீட்டாளர்களுக்கு கம்பெனிகள் அளிக்க முடியாத அளவு திவாலாக ஆவதைத்தான் தோல்வியடைந்ததாக கூறுகிறோம்.
பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள அன்னியச் செலாவணி நிதியத்திடமிருந்து (ஐ.எம்.எஃப்.) அமெரிக்காவின் சிபாரிசில் இந்த மாதம் ரூ. 14,800 கோடி (இந்தியக் கணக்குப்படி) கடனாக பாகிஸ்தான் பெற்றுள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 75 சதவிகிதம் குறைந்துவிட்டதால் ஐ.எம்.எஃப் நிறுவனத்திடம் மேலும் ரூ. 36,480 கோடி கடனாகக் கேட்டுள்ளது. அந்நாட்டில் வேலையில்லாதோர் 40 லட்சம் பேர் எனவும் 36 சதவிகிதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக பாகிஸ்தானை தனது கூட்டுநாடாக ஏற்றுக்கொண்டு ஆசியாவில் தங்களது வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையை நடத்தி வந்துள்ளது. ரஷியா, சீனா கம்யூனிச கூட்டினை எதிர்த்தும், அணிசேராக் கொள்கையை இந்தியா கடைப்படித்த காலத்திலும் பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டிருந்து அதிக அளவில் ராணுவத் தளபாடங்களும் பண உதவியும் பெற்றது. இராணுவம் எல்லா நிறுவனங்களிலும் புகுந்து ஜனநாயக அரசியல் வளராமல் பார்த்துக்கொண்டது.
ஜனநாயகத்தில் அரசியல் தலைவர்கள் கோடிகோடியாக பணம் குவிப்பதுபோல, ராணுவ ஆட்சியில் இராணுவத் தளபதி மற்றும் அதிகாரிகள் பணம் குவிப்பது நடைமுறை. எனவே, ஜனநாயகம் மலர்ந்து அரசியல்வாதிகள் பணம் குவிக்க வேண்டுமா அல்லது ராணுவ ஆட்சி தொடர்ந்து அவர்கள் பணம் குவிக்க வேண்டுமா? எனும் கேள்வியே பாகிஸ்தானின் அரசியல்.
ஒரு சராசரி பாகிஸ்தானியர் வாழ்க்கையில் வளம் பெற தனது நாடும் இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும் என்றுதான் விரும்புவார். ஆனால் அங்கே ஆட்சிமுறை மக்களாட்சியின் அடிப்படையில் இல்லாமல் அடக்குமுறையின் அடிப்படையில் நடந்து வருவதால் இராணுவத்துடன் ஒத்துப்போகின்ற தலைவர்கள்தான் அரசியல் அரங்கில் உலா வர முடியும் என்கிற நிலைமை. ராணுவம் அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்க தனியார் தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது.
முழுமையான ஜனநாயகம் மலர்ந்துவிட்டால் தங்களுக்கு அங்கே இடமில்லை என்பதால் இராணுவம் பெனாசீர் பூட்டோவைத் தேர்தலுக்கு முன்னரேயே தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு கொன்றுவிட்டதாக அந்நாட்டைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானில் இப்போது ஒரு ஜனநாயக அரசு அமைந்திருந்தாலும், நமது நாட்டைப்போல அங்கே ஜனநாயக நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்நாட்டின் ஜனாதிபதி சர்தாரி தான் சரியென நினைப்பதைச் செய்ய முடியாதவர்.
உதாரணமாக, மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொடர்பு கொண்ட சர்தாரி அந்நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரை டில்லிக்கு அனுப்ப மும்பை தாக்குதலின் விசாரணையை முடுக்கிவிட உதவுவதாக அறிவித்தார். மறுநாளே அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை அரசியல் நோக்கர்கள் மிக எளிதாகப் புரிந்துகொண்டு, அது இராணுவம் குறுக்கிட்டு நிறுத்தப்பட்டது எனக் கூறுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கும்போதே பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் கயானி இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம் என அறிவிக்கிறார். ஜனாதிபதி இராணுவத்தின் பிடியில் உள்ளார் என்பதற்கு இதைவிட பெரிய அத்தாட்சி தேவையில்லை.
1947 முதல் மதவாதிகள் பலரும் இந்தியாவின் மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுமாறு பிரசாரங்களைச் செய்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு சராசரி பாகிஸ்தானிய பிரஜை இந்தியாவின் கொள்கை பாகிஸ்தானை அழித்து ஒழிப்பது ஒன்றுதான் என உண்மையிலேயே நம்புகிறார்.
1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மாணவனாக இருந்தபோது எனது வகுப்பில் பாகிஸ்தானைச் சார்ந்த சுஹைல் எனும் மாணவர் என்னிடம், எங்கள் மக்களின் ஒரே எண்ணம் இந்தியா பற்றிய பயம்தான் எனக் கூறுவார்.
அவரிடம் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை எதிர்த்து இந்திய பாராளுமன்றத்தில் பல எம்.பி.க்கள் பேசியதை நான் கூறியபோது அவர் மிகவும் ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக் கொண்டார். காரணம் அவரது நாட்டு பத்திரிகைகள் சுதந்திரமாகச் செய்தி வெளியிடாது என்பதால் அங்கு யாருக்குமே உண்மை புரியாது.
நமது நாட்டில் அந்துலே போன்றவர்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக உயிர்த்தியாகம் செய்த உயர் பொலிஸ் அதிகாரியைப்பற்றி தவறாகப் பேசிவிட்டு அன்று மாலை ஒரு மசூதிக்குச் செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வரவேற்பினை பெறுவதும், மும்பையின் குடிசைப்பகுதிகளில் சில வீடுகள் பாகிஸ்தான் தேசியக் கொடியைப் பறக்கவிட்டிருப்பதும் நமது ஜனநாயகத்தின் ஓர் அங்கம் என்பதைக் கவனிக்க! பாகிஸ்தானில் இவை நடக்க முடியாதவை.
1971 ஆம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கைதியாகப் பிடிபட்டு இந்திய ராணுவ மருத்துவமனையில் நினைவிழந்து பல நாள் சிகிச்சை பெற்ற ஒரு பாகிஸ்தானிய இராணுவ வீரர் நினைவு திரும்பிய நிலையில் அடக்க முடியாத அளவு தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். நமது மருத்துவர்களும், செவிலியர்களும் காரணம் புரியாமல் திகைக்க பின் அவர் தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வந்தன.
பாகிஸ்தானில் அவரது இராணுவப் பயிற்சியின்போது, இந்தியர்கள் மிகவும் கொடுமையானவர்கள். அவர்கள் கையில் மாட்டினால் நாம் அழிந்துவிடுவோம். அவர்களை அழிப்பது ஒன்றுதான் நமது தலையாய கடமை என பல துர்ப்போதனைகளை கேட்டிருந்த அவருக்கு நமது மருத்துவர்களும், செவியர்களும் அவரது நோயைக் குணப்படுத்தி உணவு அளித்து அன்புடன் பராமரித்த விதத்தைப் பார்த்து குற்ற உணர்ச்சி மேலிட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் தீவிரவாதிகளை அவர்களது நாட்டின் ஜனாதிபதியே தன் நாட்டின் கட்டுப்பாட்டில் அல்லாதவர்கள் எனக் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்களால் இந்தியாவிற்கு உள்ளதை விட அதிக ஆபத்து பாகிஸ்தானுக்கே உண்டு எனக் கூறியிருப்பதும் உண்மைதான். கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தானின் தீவிரவாதிகளால் 3000 இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதைவிட ஆச்சரியமான ஒரு புள்ளிவிவரம் என்னவென்றால் 2000 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். மேல்நாட்டு அரசியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு நாடு இராணுவம் ஒன்றை வைத்திருப்பது நடைமுறை. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஒரு இராணுவம் ஒரு நாட்டினை வைத்திருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஒரு நாட்டினை எதிர்த்து இராணுவ நடவடிக்கை எடுத்து பிரச்சினையை தீர்க்க முடியுமா எனும் கேள்வி எழுகிறது. இன்றைய நிலைமையில் இந்திய பாகிஸ்தான் யுத்தம் பாகிஸ்தானில் ஜனநாயகம் வீழ்ந்து இராணுவம் ஆட்சிப் பொறுப்புக்கு வர உதவி செய்யும். ஜெனரல் கயானி அண்ட் கம்பெனி மகிழ்ச்சியுறலாம். சாதாரண பாகிஸ்தானிய குடிமகன் வறுமை, அறிவின்மை ஆகிய சுழற்சியில் மேலும் அமுங்கிப் போகலாம்.
தீவிரவாதிகளை உருவாக்கி தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை வைத்துக்கொள்ள விரும்பும் இராணுவத்திடமிருந்து எப்போது பாகிஸ்தானுக்கு விடிவுகாலம் பிறக்குமோ தெரியவில்லை. அப்படிப் பிறந்தால் ஒழிய நமக்கும் தீவிரவாதத்திடமிருந்து விடிவுகாலம் பிறக்குமா என்பதும் சந்தேகம்தான்!
-என்.முருகன்-
தினமணி






0 விமர்சனங்கள்:
Post a Comment