பொட்டு அம்மான் கிழக்கு பகுதிக்குள் நகர்ந்துள்ளார்...?
விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகரான கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுதுறை தலைவராக இருந்த பொட்டு அம்மான் ( சண்முகலிங்கம் சிவசங்கர்) வன்னியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் , அவர் வெளிநாடொன்றுக்கு சென்றிருக்க முடியாதெனவும் கிழக்கு பகுதிக்குள் சென்றிருக்கலாம் எனவும் வெளிநாட்டு புலனாய்வுத் துறையொன்று தகவல் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் பொட்டு அம்மான் வசம் ஒப்படைக்கப்பட்ட பல முக்கிய தாக்குதல்கள் தோல்வியிடைந்ததன் பின், பொட்டு அம்மானின் பொறுப்புகள் இரத்தினம் மாஸ்டர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் , விடுதலைப்புலிகளது புலனாய்வுத்துறை , விமானப்படை , ராதா படையணியான பிரபாகரனின் பாதுகாப்புப்படை ஆகியவற்றின் பொறுப்புகள் பொட்டு அம்மான் தலைமையிலிருந்து பறிக்கப்பட்டு அவை தற்போது இரத்தினம் மாஸ்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. தவிரவும் தற்போது கிழக்கு பகுதிக்கான பணிகள் பொட்டு அம்மானுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
யுத்த தோல்விகளை விடுதலைப்புலிகள் பெற்றுள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் நன்கு பயிற்றப்பட்ட உறுப்பினர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தி இழப்பதை தவிர்க்கும் முகமாக அவர்களை இலங்கையின் கிழக்கு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பொது மக்கள் போல அனுப்புவதற்கு அது தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கைதுசெய்யப்பட்ட பயிற்சி பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் 10 பேரை தமிழ்நாட்டு போலீசார் கைதுசெய்ததிலிருந்து இது உறுதியாகியுள்ளதாக அது மேலும் தெரிவிக்கிறது.
பொட்டு அம்மானுடன் தற்கொலை போராளிகள் 30 பேர் கிழக்குக்குள் தற்சமயம் ஊடுருவியுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் வழி தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் முல்லைத்தீவின் விசுவமடு பகுதியில் இருப்பதாகவும், வான் வழியாகவோ , கடல் வழியாகவோ வெளியேற முடியாதவாறு பாதுகாப்பு படைகள் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதாகவும், பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பிரபாகரன் வன்னியில் தங்கியிருந்த போதிலும் அவரது குடும்பத்தினர் குறித்து எதுவித தகவலும் தெரியவில்லை என கருணா அம்மான் இன்று தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment