ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நால்வரை காப்பாற்றிய ஒன்பது வயது சிறுவன்
பதுளை
ஒன்பது வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரின் உயிர்களைக் காப்பாற்றிய துணிகரச் சம்பவமொன்று கடந்த புதன்கிழமை மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது. கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் ஆண்டு நாலில் கற்று வரும் ஒன்பது வயது நிரம்பிய ஆர்.டி.
தினேஷ் சந்தகெலும் என்ற மாணவனே இவ்வாறு நான்கு பேரின் உயிர்களை காப்பாற்றியவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரமொன்றில் உழவு வேலைக்கு சென்று விட்டு ஐவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி மஹியங்கனை ஆற்றில் பாய்ந்துள்ளது.
அவ்வேளையில் அப்பகுதி வழியாக வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த இம் மாணவன் திடீரென ஆற்றில் பாய்ந்து ஆற்றில் அடித்துச் சென்று கொண்டிருந்த நால்வரையும் தனித்தனியாக கரைக்கு இழுத்து வந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளான். காப்பாற்றப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவ்விபத்தில் பி.எம். தினதா(வயது 70) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மஹியங்கனைப் பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நான்கு பேரின் உயிர்களை காப்பாற்றிய சிறுவனைப் பெரிதும் பாராட்டினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment