கரடிப்போக்கும் படையினர் வசம் : கிளிநொச்சி முற்றுகைக்குள்?
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், இரணைமடுச் சந்தி மற்றும் கரடிப்போக்குச் சந்தி ஆகியவற்றைப் படையினர் கைப்பற்றியிருப்பதால், கிளிநொச்சி நகருக்கான பெரும்பாலான போக்குவரத்து மார்க்கங்கள் அடைபட்டு அது முற்றுகைக்குள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
பரந்தன் மற்றும் இரணைமடுச் சந்திப் பகுதிகளைக் கைப்பற்றியதாக புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
தொடர்ந்து, பரந்தன் சந்திக்கும், கிளிநொச்சி நகருக்கும் இடையே ஏ-9 வீதியிலுள்ள மற்றுமொரு முக்கிய சந்தியான கரடிப்போக்குச் சந்தியையும் கைப்பற்றியிருப்பதாக இப்போது அது கூறியுள்ளது.
இதனால், கிளிநொச்சிக்கு கிழக்கே புலிகளின் பிரதான தளங்கள் அமைந்திருக்கும் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து கிளிநொச்சி நகருக்கான பெரும்பாலான பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் அனைத்தும் அடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு வருவதற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமான பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில், பரந்தன் சந்தி படையினர் வசமாகிவிட்டதால், அந்த வீதியூடான கிளிநொச்சிக்கான போக்குவரத்துத் தடைப்பட்டுவிட்டது.
இது தவிர, முரசுமோட்டை - கரடிப்போக்குச் சந்தி, வட்டக்கச்சி - திருவையாறு மற்றும் வட்டக்கச்சி - இரணைமடு ஆகிய மார்க்கங்களுடாக கிளிநொச்சி நகருக்கு வரமுடியும்.
எனினும், தற்போது கரடிப்போக்கு, மற்றும் இரணைமடுச் சந்தி ஆகியன படையினர் வசமாகியிருப்பதால், வட்டக்கச்சி - திருவையாறு ஊடாக கிளிநொச்சி நகரம் மற்றும் டிப்போ சந்தி ஆகியவற்றுக்குச் செல்லும் வீதிகள் மட்டுமே தற்போது கிளிநொச்சிக்கான போக்குவரத்துக்கு எஞ்சியிருக்கும் மார்க்கங்களாகும்.
மேலும், பரந்தன், கரடிப்போக்கு மற்றும் இரணைமடு பிரதேசங்களை படையினர் கைப்பற்றியிருப்பதால், கிளிநொச்சி நகரம் தற்போது வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் படையினரால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மும்முனை முற்றுகைக்குள்ளாகி, பிரதான விநியோக மார்க்கங்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் படையினரை வழிமறித்துச் சண்டை செய்வது புலிகளுக்குச் சிரமமாகவே இருக்கும் என்று இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், இலங்கை அரசாங்கம் தற்போது அறிவித்திருப்பதுபோல், கிளிநொச்சி நகரை அது விரைவில் கைப்பற்றிவிடும் சாத்தியங்களே அதிகம் தென்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment