கிளிநொச்சி ரயில் நிலையம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்
கிளிநொச்சி நகரை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில் கிளிநொச்சி நகர மத்திக்குள் நுழைந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ரயில் நிலையப் பகுதியை இராணுவத்தினரின் 57வது படையணி கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுவிலிருந்தும், வடக்காக கரடிப்போக்குச் சந்தியிலிருந்தும் இராணுவத்தினர் கிளிநொச்சி நகருக்குள் முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரந்தன், கரடிப்போக்கு மற்றும் இரணைமடு பிரதேசங்கள் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், கிளிநொச்சி நகருக்கான பிரதான விநியோக மார்க்கங்கள் அனைத்தும் தடைப்பட்டுவிட்டதால், விடுதலைப் புலிகள் கிளிநொச்சி நகரிலிருந்து பின்வாங்கிவிடுவார்கள் என்று இராணுவ ஆய்வாளர்கள் முன்கூட்டியே எதிர்வுகூறியிருந்தனர்.
கிளிநொச்சிக்கு மேற்காக அக்கராயன்குளம் மற்றும் அடம்பன் பகுதிகளினூடாக கிளிநொச்சிக்குள் நுழைவதற்காக கடந்த பல மாதங்களாக இராணுவம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளை, விடுதலைப் புலிகள் பாரிய மண் அரண்களை அமைத்துத் தடுத்து வந்தனர்.
இந்த நிலையில், பூநகரிப் பக்கமிருந்து பரந்தனை நோக்கிய முன்னேறிய இராணுவத்தினர் பரந்தன் சந்தியை புத்தாண்டு தினத்தில் கைப்பற்றியதன் மூலம், கிளிநொச்சி முற்றுகைச் சமரில் தம்மை பலமான நிலைக்குக் கொண்டுவந்தனர்.
இதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை கரடிப்போக்கு, இரணைமடு மற்றும் கிளிநொச்சிக்கு மேற்காக அக்கராயன் ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் கிளிநொச்சி நகருக்குள் நுழையத் தொடங்கினர்.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தியை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னும் சில மணிநேரத்தில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment