ஹே பாக்கி என்று அழைத்ததிற்கு இளவரசர் ஹரி மன்னிப்புக் கோரினார்
பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் வம்சாவளியினரை இழிவான வார்த்தையை சொல்லி இளவரசர் ஹாரி திட்டியது ஏற்றுக் கொள்ள முடியாதது என, அந்நாட்டின் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார். அதேநேரத்தில், அதற்காக ஹாரி மன்னிப்புக் கேட்டதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ராணுவத்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அகமது ரஸா கான் என்பவர் பணியாற்றி வருகிறார். அவரை 24 வயதான அந்நாட்டின் இளவரசர் ஹாரி, "பாக்கி' என்ற மோசமான வார்த்தையை கூறி அழைத்தார். பாக்கி என்றால் நாடு விட்டு நாடு வந்த குடியேற்றவாசி என்பதாகும். 2006ம் ஆண்டில், இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதுபற்றிய செய்தி விவரம் சமீபத்தில் வெப்சைட் ஒன்றில் வெளியானது. இதையடுத்து, தான் கூறிய வார்த்தைக்காக இளவரசர் ஹாரி மன்னிப்புக் கேட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், "இளவரசர் ஹாரி கூறிய வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இது ஹாரிக்கும் தெரியும். இருந்தாலும், அவர் மன்னிப்புக் கேட்டதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராணுவத்தில் பணியாற்றும் ஹாரி, இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தன் கமாண்டிங் ஆபீசரை அணுகி விளக்கம் தருவார்' என்றார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரை விமர்சித்ததைப் போல, ராணுவத்தில் பணியாற்றும் மற்றொரு நபரையும் "நீ ராக்ஹெட் போல தோன்றுகிறாய்' என ஹாரி கூறியுள்ளார். ராக்ஹெட் என்பது தலிபான்களை விமர்சிக்கும் மோசமான வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாரியின் தகவல் தொடர்பாளர் கூறுகையில், "ராணுவ வீரர் பற்றி தான் கூறிய வார்த்தை மிக மோசமானது என்பதை இளவரசர் ஹாரி தற்போது உணர்ந்துள்ளார். இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன், எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல், பட்டப் பெயர் கூறி அழைப்பது போல அழைத்துள்ளார்' என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment