பெண் அதிகாரியிடம் ரகளை : இலங்கை நபர் கைது
விமான நிலைய பெண் அதிகாரியிடம், போதையில் ரகளையில் ஈடுபட்ட இலங்கை நபரை போலீசார் கைது செய்தனர். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் நவீந்திரன்(33); லண்டனில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர். இவர், இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார்.
நள்ளிரவு 1.30 மணிக்கு லண்டனுக்குப் புறப்படும் ஜெட்ஏர்வேசில் டிக்கெட் எடுத்திருந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது சகோதரி வசிக்கும் தாம்பரம் சேலையூருக்குச் சென்றார்.
பின், மதுக்கடையில் நுழைந்து மூச்சுமுட்ட குடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு ஜெட்ஏர்வேஸ் விமான அதிகாரி தேவி(30), நவீந்திரனின் விசா மற்றும் பாஸ்போர்ட்டை சோதனை செய்ய முயன்றார். நவீந்திரன் குடிபோதையில் இருந்ததால், "இன்று விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது. நாளை செல்லும் விமானத்தில் அனுப்புகிறோம்' என தேவி கூறினார்.
இதில், கோபமடைந்த நவீந்திரன், "நான் யார் தெரியுமா? என்னுடைய செல்வாக்கு என்ன' என விமானப் பெண் அதிகாரி தேவியிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இதையறிந்த விமான நிலைய போலீசார், குடிபோதையில் இருந்த நவீந்திரனை அழைத்துச் சென்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று பெற்றனர். அதன் பின் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment