இலங்கையரசுக்கு இந்தியா உதவுவதாலேயே அங்குள்ள தமிழருக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது
இலங்கையரசுக்கு இந்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்வதாலேயே இலங்கைத் தமிழர்களுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. தேர்தல் நிதியளிப்பு விழாவில் பொதுச் செயலாளர் வைகோ பேசினார். ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி, மற்றும் கழக வளர்ச்சி நிதியளிப்பு விழா அக்கட்சியின் அலுவலகமான அண்ணா அறிவகத்தில் நடைபெற்றது. 35 இலட்சம் ரூபா வைகோவிடம் வழங்கப்பட்டது. அப்போது வைகோ பேசுகையில்;
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுகிறார்கள். 4 ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கை அரசுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறது. அதனால் தான் இந்த அளவு பாதிப்பு இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், விடுதலைப்புலிகளை வெல்ல முடியாது. மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளும் இலங்கை தமிழர் விரோதபோக்கை கண்டுகொள்ளவில்லை. ஹிட்லர் ஆட்சியில் கூட நடக்காத கொடுமை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதைத்தான் சினிமா இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் பேசினார்கள். இதில் என்ன தவறு உள்ளது? போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினையில் இருந்து விடுபட ராஜீவ்காந்தி இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பினார். இராணுவம் தமிழர்களுக்குத் எதிராக செயல்பட்டது. இதை சீமான் சொன்னதில் என்ன தவறு உள்ளது?
தற்போது இராணுவ உதவி மட்டுமின்றி உளவு அமைப்பான ரோ மூலமும் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்தியா கொடுத்த பணத்தில் ஆயுதம் வாங்கி இலங்கை அரசு நம் இனத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது. உண்மையில் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள 6 இலட்சம் தமிழர்களுக்கு அரணாக உள்ளனர். அவர்களை வீழ்த்த முடியாது. ராஜபக்ஷ கூட்டத்துக்கு சமாதி கட்டும் நாள் தான் தமிழர்கள் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நாளாகும்.
இனப்படுகொலையை மன்மோகன் சிங் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. ஆனால், வாஜ்பாய் அரசு ஒருநாளும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. நமக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும். உழைப்பு வீண் போகாது. தை பிறந்தால் வழி பிறக்கும். அ.தி.மு.க. கூட்டணி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்லும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment