இலங்கைப் படையினரின் தாக்குதலை நிறுத்தாவிட்டால் விரைவில் ஒட்டுமொத்த தமிழினமும் அழிந்து விடும்
இலங்கையில் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் அங்குள்ள ஒட்டுமொத்த தமிழினமும் அழிந்து விடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அங்கு அவர்கள் மேலும் கூறுகையில்;
தமிழினத்தை அடியோடு ஒழித்துவிட வேண்டுமென்ற ஒரே நோக்குடன், சிங்கள அரசு போர் நடத்தி வருகிறது. போரில் முல்லைத் தீவில் மட்டும் 53 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
பாடசாலைகள், கோவில்கள், மருத்துவமனைகள், அகதி முகாம்கள் ஆகியவையும் விமானங்கள் மூலம் குண்டு வீசித் தகர்க்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் உடமைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் முழு அளவில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
இன வெறியுடன் சிங்கள அரசு நடத்தி வரும் தாக்குதல் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவேளை ஒரு சிலர் உயிர் பிழைத்திருந்தாலும், அவர்கள் வாய் மூடி அடிமைகளாக இருக்க வேண்டும். இது தமிழகத்திற்கும், இந்திய அரசுக்கும் பெரும் மானக்கேடாகும்.
எனவே, இலங்கையில் போரை நிறுத்தி இந்திய அரசின் மேற்பார்வையில் தமிழக அரசு மூலமாக பேச்சு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற வழிவகை செய்யப்பட வேண்டுமென்றனர்.
விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்காகத்தான் இந்தப் போர் நடத்தப்படுவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறி வருவது தொடர்பாக கேட்டபோது;
இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் வீடுகள், கட்டிடங்கள், கால்நடைகள் மற்றும் சொத்துகளைச் சிங்கள அரசு அழித்து வருகிறது. தமிழர்களையும் படுகொலை செய்கிறது. இத்தனையையும் செய்துவிட்டு தமிழர்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் கேட்டனர்.
விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்து விட்டால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக பேச வேண்டியிருக்காது என இலங்கை அரசு கருதுகிறது. இலங்கை அரசின் உறுதிமொழிகளை நம்ப முடியாது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரிக்க மாட்டோம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். ஆனால், ராஜீவ் காந்தி செய்த உடன்பாட்டை மீறி இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் இந்தியாவில் உறுதியளித்தார். ஆனால், தமிழர்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment