பாராமுகம் ஏனம்மா?--மதிப்பிற்குரிய சோனியா காந்தி அவர்களே! -- தினமணி
உங்களுடைய மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாகவும் அவரின் முழுமையான நம்பிக்கை பெற்றவனாகவும் இருந்த ஒரு தமிழன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒரு தியாகப் பாரம்பரியம் உண்டு. அன்னியரின் அடிமைத் தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கப் போராடி பல தியாகங்களைச் செய்த இயக்கம் காங்கிரஸ் இயக்கமாகும்.
இமயம் முதல் குமரி வரை வாழும் பல மொழி பேசும் தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கம் அதுவாகும். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நான்கு தலைமுறையினர் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளனர். அவர்கள் இருந்த நாற்காலியை இன்று நீங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சுதந்திர இந்தியாவின் பிரதமர்களாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 37 ஆண்டு காலமாகப் பதவி வகித்து உள்ளனர். நேருவின் குடும்பம் நாட்டுக்குச் செய்த தியாகத்தை மதித்து மக்கள் அளித்த பரிசு இதுவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தந்தது. நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது உலகெங்கும் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு தந்தார்கள்.
ஆனால், அவர்கள் வழி நடத்திய கட்சிக்குத் தலைவராக விளங்கும் நீங்கள் அண்டை நாடான இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதற்கு மெளன சாட்சியாக விளங்குவது காலத்தின் கோலம்தான். இந்திராகாந்தி பதவியில் இருந்த காலத்திலும் பதவியில் இல்லாத காலத்திலும் ஈழத்தமிழர் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறைகளை இன்றைக்கும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 1977-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்று இந்திரா பதவியை இழந்திருந்த நேரம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அ. அமிர்தலிங்கம் சென்னைக்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துத் தங்கள் பிரச்னைக்கு ஆதரவு திரட்டினார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் பொதுச் செயலாளராக நான் இருந்தேன். என்னையும் அவர் சந்திக்க விரும்பியபோது உடனடியாக சென்று சந்தித்தேன். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து விரிவாக எனக்கு எடுத்துக் கூறினார். அப்போது நான் அவரிடம் ""நாங்களும் தமிழர்கள் என்ற முறையில் முற்றிலுமாக உங்களை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால் எங்கள் கையில் எந்த அதிகாரமும் இல்லை. எனவே நீங்கள் தில்லிக்குச் சென்று அகில இந்தியத் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவது நல்ல விளைவைத் தரும்'' என்று கூறினேன். தில்லியில் யாரையும் தனக்குத் தெரியாததால் அதற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது நானும் சம்மதித்தேன். உடனடியாக இந்திரா காந்தியிடம் தொடர்பு கொண்டு பேசி அவரது ஒப்புதலையும் பெற்றேன். பின்னர் அவர் குறிப்பிட்ட தேதியில் அமிர்தலிங்கம் தம்பதியினரை தில்லிக்கு அழைத்துச் சென்று இந்திராவைச் சந்திக்க வைத்தேன்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் அமிர்தலிங்கம் கூறியவற்றுக்குப் பொறுமையாக செவிசாய்த்த இந்திரா, அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். சர்வதேச ரீதியில் ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஆதரவு திரட்டுவது முக்கியம் என்று கூறியதோடு முக்கிய நாடுகளில் யார் யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். சர்வதேச ஆதரவு திரளும் போது இந்தியா தலையிடுவது எளிதாகும். அதற்கு முன்பாக தலையிட்டால் பெரிய நாடான இந்தியா சிறிய நாடான இலங்கையை மிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழும்.
எனவே அதற்கு இடமளிக்காத வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையெல்லாம் தெளிவாக எடுத்துக் கூறினார். ஒரு பேராசிரியை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது போல அவர் அன்று கூறியதையெல்லாம் அமிர்தலிங்கம் குறிப்பெடுத்துக் கொண்டார். பிறகு என்னை அழைத்து அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அமிர்தலிங்கத்தை அதில் பேச வைக்க வேண்டும், அதற்கானவற்றை உடனடியாகச் செய்யும்படி அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ஏ.ஆர். அந்துலேவிடம் கூறும்படி பணித்தார்.
அன்றுமாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கேற்றனர். தங்கள் பிரச்னையை விளக்கி அமிர்தலிங்கம் முதலில் பேசினார். பிறகு பல தலைவர்களும் பல கேள்விகளைக் கேட்டனர். எல்லாவற்றிற்கும் அமிர்தலிங்கம் திருப்திகரமான பதிலை அளித்தார். நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒய்.பிசவான் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ""நீங்கள் இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்கள் அங்கே போய் தனிநாடு கேட்பது எந்த வகையில் நியாயமானது?'' என அவர் கேட்டார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவர் கேட்டதற்கு அமிர்தலிங்கம் தக்க விடையளித்தார்.
பின்னர் இரவில் இந்திராவைச் சந்தித்து நடந்த விவரங்களை நான் தெரிவித்தேன். சவான் கேட்ட கேள்வியை கூறிவிட்டு அண்டை நாட்டின் பிரச்னை பற்றியே சரியாகத் தெரிந்து கொள்ளாத இவரை வெளிநாட்டு அமைச்சராக வைத்திருந்தீர்களே? எனக் கேட்டபோது இந்திரா வாய்விட்டுச் சிரித்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. பயிற்சி பெற்ற இந்தப் போராளிகளைக் கொண்டு சிங்கள அரசுக்குப் பாடம் கற்பிக்க அவர் திட்டமிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக வேண்டாத விளைவுகள் பிற்காலத்தில் ஏற்பட்டுவிட்டன.
இந்திரா காலத்தில் இந்திய மண்ணில் ஈழப் போராளிகளின் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசோ இந்திய அரசோ அவற்றைத் தடை செய்யவில்லை. ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித்தருகிறது. ஆலோசனை வழங்க ராணுவ அதிகாரிகளை அனுப்புகிறது. இலங்கையில் நடைபெறும் போரைப் பின் நின்று நடத்துவது இந்திய அரசுதான் என்பது அம்பலமாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல இந்திராவுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இந்தியாவின் அருகில் தெற்கே இருக்கக்கூடிய இலங்கை நாட்டில் எந்த அன்னிய வல்லரசும் நுழைவது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேரழிவைத் தரும் என்பதை இந்திரா தெளிவாக உணர்ந்து இருந்தார்.
அதற்கு ஏற்பத் தனது இலங்கை அணுகுமுறையை அமைத்துக் கொண்டார். இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தானை ராணுவ ரீதியில் வலிமையாக்க அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுதங்களை அள்ளி அள்ளித் தந்தது. பிரதமர் நேரு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அந்த ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதியை அமெரிக்கா அளித்தது. ஆனால் என்ன நடந்தது? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து முறைகள் நடைபெற்ற போர்களில் அமெரிக்க ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டன.
இந்த உண்மையை சோனியா காந்தியே நினைத்துப் பாருங்கள். இன்று பாகிஸ்தான் வழியாக இலங்கையில் குவிக்கப்படும் அமெரிக்க ஆயுதங்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களை ஒழித்துக்கட்டிய பிறகு, இந்தியாவை மிரட்டுவதற்குப் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு முன்னோட் டம்தான் இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை குறிவைத்துச் சுடுவதாகும். உங்களால் நியமிக்கப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. அவர் அரசின் உயர் அதிகாரிகளான எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் போன்றோர்களுக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, மனிதநேயமும் இல்லை.
இத்தகைய அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளின் பேரில் பிரதமர் மன்மோகன் வழி நடத்தப்படுகிறார். இந்தியாவின் தென்பகுதியில் எதிர்காலத்தில் வரப்போகும் அபாயத்தை பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் அங்கு காலூன்றிவரும் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் திட்டங்கள் குறித்தும் கவலையில்லாமல் இவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் கொலை வெறிக்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அப்பாவி அரபிய மக்களை இஸ்ரேலியர் கொன்று குவிப்பதற்கு எதிராக நீங்களும் உங்களின் பிரதமரும் கண்டன அறிக்கைகளை கொடுத்துள்ளீர்கள்.
அதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். ஆனால் மிக அருகே இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை இல்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலை பொறுத்துத்தான் தமிழகத்தில் உங்கள் கட்சியின் எதிர்காலம் அமையும். தங்களின் கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதில் ஐயமில்லை. இந்திராவோடு மிக நெருங்கிப் பழகிய எனக்கு அது தீராத மனவலியை அளித்தது. அதேவேளையில் இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர எண்ணுகிறேன்.
ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது உடனிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஏதோ ஒரு சாக்குச் சொல்லி அங்கிருந்து நழுவி விட்டார்களே ஏன் என்பதனை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா? உங்கள் கட்சியைச் சேராதவரும் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவருமான தா. பாண்டியன் படுகாயம் அடைந்து பல மாதங்கள் மருத்துவமனையில் கிடந்தாரே, இன்னமும் அவரது உடலில் குண்டுத் துணுக்குகள் பதிந்துள்ளனவே. அத்தகைய ஒருவரே ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதற்குக் குரல் கொடுக்கிறார்.
ஆனால் தங்கள் கணவர் ராஜீவின் உயிரை விடத் தங்கள் உயிரைப் பெரிதாக நினைத்து ஓடி ஒளிந்து கொண்ட தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைகளை நம்பி நீங்கள் செயல்படுவது சரிதானா? 1978-ம் ஆண்டு மதுரைக்கு வந்த இந்திராவைச் சூழ்ந்துகொண்டு திமுகவினர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியபோது அவர் மீது ஓர் அடியும் விழாமல் பாதுகாத்தவன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தலைவரின் உயிருக்கு ஆபத்து வரும்போது தன் உயிரைக் கொடுத்தாவது தலைவரின் உயிரைக் காப்பாற்றுவது ஓர் உண்மைத் தொண்டனின் கடமையாகும். ஆனால் தங்கள் கணவர் ராஜீவைச் சூழ்ந்து வந்த காங்கிரஸ் தலைவர்கள் குண்டு வெடிப்பின்போது மட்டும் மாயமாய் மறைந்து போனார்களே. அவர்கள் யார் என்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். அவர்களின் வார்த்தைகளை நம்பி ஈழத்தமிழர்களின் பிரச்னையில் தவறாகச் செயல்பட வேண்டாமென உங்களை நான் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நால்வரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டபோது, அந்த இளைஞர்களுக்குக் கருணை காட்டும்படி நானும் மற்ற நண்பர்களும் உங்களுக்கு விடுத்த வேண்டு கோளை மதித்து அவர்களுக்குக் கருணை காட்டும் வகையில் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தீர்கள். அதற்காக நானும் மற்ற நண்பர்களும் தில்லியில் உங்களைச் சந்தித்து நன்றி கூறினோம். அந்தப் பெருந்தன்மையான உள்ளம் உங்களிடம் நிறையவே உள்ளது.
சீக்கியர்களின் பொற்கோவிலுக்குச் சென்று சீக்கிய சமுதாயத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்திராவின் படுகொலையை ஒட்டி நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டீர்கள். இந்தப் பேருள்ளத்தை சீக்கிய சமூகம் பாராட்டியது. அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரைப் பிரதமர் நாற்காலியில் அமரவைத்து உள்ளீர்கள். இப்படியெல்லாம் நல்லெண்ணச் சமிக்ஞையைக் காட்டும் நீங்கள், ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் பாராமுகம் காட்டுகிறீர்கள்?
சிங்கள வல்லரக்கர்களால் தினமும் கொன்று குவிக்கப்படும் எங்கள் சகோதரர்களின் பிரச்னையில் தலையிட்டு அவர்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள். இந்திரா காந்தியால் மகனே என அழைக்கப்பட்ட ஒருவன் எழுதும் இந்த கடிதத்திற்கு உரிய மதிப்புக் கொடுத்து இலங்கை பற்றிய தங்களின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment