புலிகள் செய்ததை தற்பொழுது அரசாங்கம் செய்கிறது: ரணில்
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். தம்முடன் இணங்காதவர்களை விடுதலைப் புலிகள் கொன்றதைப் போலவே அரசாங்கமும் தமக்குப் போட்டியானவர்கள் தொடர்பில் நடந்துகொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார். நேற்றையதினம் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நடாத்திய செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இவ்வாறு கூறினார்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் விரைவில் கண்டு பிடிக்க வேண்டும் எனவும், பொலிசார் மேற்கொள்ளும் விசாரணைகளை நம்ப முடியாது எனவும் தெரிவித்த அவர், சர்வதேச தரத்திலான சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் வேண்டுகோள் விடுத்தார்.
செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த அரசாங்கத்தின் இறுதிக்காலம் ஆரம்பித்து விட்டதாகக் கூறினார்.
இவ்வாறான கொலைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினருக்கு அவமானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தக் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் மேற்கொண்ட சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட அமைச்சரவை அங்கிகாரம் போன்றவை தொடர்பான அறிக்கையொன்றை சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க எதிர்வரும் வாரங்களில் வெளியிடுவதற்கு தயாராக இருந்தபோதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மங்கள சமரவீர தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment