இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா.வில் முறையிட வெளிநாட்டு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
தமிழர்களைக் காக்க இனி இந்திய மத்திய அரசை நம்ப முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைதாகி கோவை சிறையில் இருக்கும் திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமைக் கட்சிப் பொதுச் செயலர் மணியரசன் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
தேச விரோதமாகப் பேசியதாகவும், கலவரத்தை தூண்டியதாகவும் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை செய்யாமலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பிணை உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கே கேலிக் கூத்தானது.
இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் தலைமையில் டில்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் நேரடியாக இக் கோரிக்கையை வலியுறுத்தியது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் என்பது தற்போது தொடங்கியது அல்ல, சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது மற்றவர்கள் தெரிவித்தோ, புலனாய்வு செய்து தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி அல்ல. இருப்பினும், போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தவில்லை.
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன், இலங்கை இராணுவத் தளபதியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். டில்லியில் இருக்கும் ஆட்சியாளர்கள் அடிமைச் சிந்தனையில் உள்ளனர் என்பதற்கு இதுவே சான்று.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளிக்காமல் கண்முன் நடக்கும் படுகொலைக்கு மத்திய அரசு உதவி செய்கிறது. இதுவரை தமிழக மீனவர்கள் 410 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிப்போம் எனத் தெரிவித்த பிறகும் கூட தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களைக் காக்க மத்திய அரசை இனி நம்ப முடியாது. இதற்காக தமிழக மக்களைத் திரட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தும்.
மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. கூறிவிட முடியாது. ஏனெனில், மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டதில் தி.மு.க.வுக்கு எந்தளவுக்கு பங்குள்ளதோ, அதே அளவுக்கு இலங்கைப் பிரச்சினையிலும் பங்கு உள்ளது. இதை ஒப்புக்கொள்ள துணிவு வேண்டும். இல்லையெனில் தடுப்பதற்கான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினை குறித்து டில்லி தலைவர்கள் பேசாமல் இருக்கலாம். தமிழகத் தலைவர்கள் அவ்வாறு இருக்கக்கூடாது.
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்து ஐ.நா.வில் புகார் தெரிவிப்பதற்காக வெளிநாட்டு சட்ட நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 23 இல் சென்னையில் நடைபெறுகிறது. இதன் பிறகு ஐ.நா.வில் முறையீடு செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment