மனதிலுள்ள துயரத்தை ஓவியங்களில் வெளிப்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிக்குழந்தைகள்
கண்ணீர்த் துளி தேசமான இலங்கையில் பட்ட துயரங்கள் தமிழ்க் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் காட்டுவதாக அந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்த ஓவியங்கள் இலங்கையில் போர்ச்சூழல் ஓய்ந்து அமைதி நிலவ வேண்டும் என்பதை ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றன.
இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகள் வரைந்த இந்த ஓவியங்களில் நேர்த்தியிலும் அழகிலும் குறைவிருக்கலாம். ஆனால், இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களும் போர்ச்சூழலும் தாய்நாட்டுக்குப் போக வேண்டும் என்ற அகதிகளின் மனநிலையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் உள்ள குழந்தைகளின் மனநிலையை அறிந்துகொள்ளும் வகையில் ஓவியப்போட்டியை அண்மையில் நடத்தியது.
5 முதல் 15 வயது வரை உள்ள 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதில் ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியங்களை வரைந்தனர்.
அந்த ஓவியங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு சென்னை ராயப்பேட்டை ஸ்ரீபுரம் 2 ஆவது தெருவில் உள்ள "தி' மெட்ராஸ் றெற்ஸ் ஹவுஸில் கண்ணீர்த் துளியுள் சூரிய ஒளி என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனவரி 18 ஆம் திகதி காலை முதல் இரவு 7 மணிவரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த நிரஞ்சன் ஓர் ஓவியம் வரைந்துள்ளார். இலங்கையில் குண்டு வெடிப்பு, காரணமில்லாமல் கைது, பெண்களிடம் தவறான நடத்தை போன்றவற்றை வரைந்துவிட்டு, கல்லறை வரைந்து அதில் அமைதி குடிகொண்டுள்ளதாக எழுதியுள்ளார். பல குழந்தைகள் தாங்கள் டாக்டராக, கொம்பியூட்டர் பொறியியலாளராக வர வேண்டும் என்ற விருப்பத்தையும் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். சில குழந்தைகள் தாங்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதைப் போல் இலங்கையில் உள்ள தங்களது சகோதரர்களும் பள்ளிக்குச்செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். இலங்கை இராணுவத்தினர் அப்பாவிகளைக் கொல்வது போலவும், பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போலவும் பல ஓவியங்களில் குழந்தைகள் காட்சிப்படுத்தியுள்ளனர்.செட்டிமேடு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயகாந்த் என்ற மாணவர் " வெளியில் எந்த ஒரு தவறு நேர்ந்தாலும் முகாமில் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக' வேதனை தெரிவித்துள்ளார். அகதிகள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அப்பாவி ஈழத் தமிழர்கள் தத்தளிப்பது போல் ஓர் ஓவியம் நெஞ்சத்தைத் தொடுவதாக உள்ளது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வர அகதிகள் நிகழ்த்தும் உயிர்ப்போராட்டம் இதில் உறைந்து நிற்கிறது. ஒட்டுமொத்த தமிழ் அகதிகளின் மனசாட்சியைப் பிரதிபலிப்பது போல் எப்போது ஈழம் திரும்புவோம் என்று அந்த ஓவியங்கள் மூலம் 6 வயது கிறிஸ்டி கேட்கிறார். ஷெல் வெடிச் சத்தமும் கண்ணிவெடிச் சத்தமும் இல்லாத அமைதி நிறைந்த விடியலை எம்நாடு காண வேண்டும் என்று வி. சண்முகப்பிரியன் என்ற மாணவர் தமது ஓவியத்துக்குப் பின்னால் கவிதை தீட்டியுள்ளார்.
துப்பாக்கிகள், பீரங்கிகள், கண்ணீர்த்துளிகள் என ரத்தமயமான இலங்கையை இ.திலீப் ராஜு என்ற மாணவர் வரைந்துள்ளார். சமாதானப் புறா இலங்கையை விட்டுப் பறப்பது போல் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிங்களவர்கள் ,தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து வாழ்வது போலவும் இருகரம் நீட்டி அமைதியை வேண்டுவது போலவும் சில ஓவியங்கள் உள்ளன. ஓர் ஓவியத்தில் சூரியன் மலை முகடுகளில் மறைவது போலவும் ஒரு வீட்டுக்குப் பாதை செல்வது போலவும் வரையப்பட்டுள்ளது.மாலையில் சூரியன் தனது வீட்டுக்குப் போகிறது . நாங்கள் எப்போ வீடு திரும்புவோம்? என்ற 7 வயது சரிகாவின் கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment