''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..''
'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் எஸ்.ஆர்.பி-யைச் சந்தித்தோம்.
''இந்தி சினிமாவை மும்பை நிழல் உலக தாதாக்கள் ஆட்டிப்படைக்கிற மாதிரி, தமிழ் சினிமா விடுதலைப்புலிகளோட கையிலதான் சிக்கிக் கிடக்குது. கொஞ்ச
வருஷத்துக்கு முன்னாடி மலேசியா, சிங்கப்பூர்லதான் தமிழ் சினிமாவுக்கு வரவேற்பும் ஆதரவும் இருந்துச்சு. இப்போ ஐரோப்பிய நாடுகளிலேயும், கனடா உள்ளிட்ட அமெரிக்க நாடுகளிலேயும் தமிழ் சினிமாவுக்கு செல்வாக்கு பெருகியிருக்கு. காரணம், இலங்கைத் தமிழர்கள் பல பேரு இந்த நாடுகள்ல செல்வச் செழிப்போட இருக்காங்க. இவங்கள்ல சிலரின் முக்கிய வேலையே விடுதலைப்புலிகளுக்காக வேண்டிக் கேட்டோ மிரட்டியோ பணம் வசூலிக்கிறதுதான். அவர்கள் நேரடியாவும், மறைமுகமாகவும் தமிழ் சினிமாவைத் தயாரிப்பது,விநியோகம் பண்றது போன்ற வேலைகளையும் பார்க்கிறாங்க. தமிழ் சினிமா உலகத்துல விடுதலைப்புலி ஆதரவாளர்களோட பணம் கோடி கோடியாப் புரளுது. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மூன்றில் ஒரு பங்கு இந்த நபர்களின் பணம்தான்னு தகவல் வந்திருக்குது. அதாவது ஒரு வருஷத்துக்கு நாலாயிரம் கோடி ரூபாய். பணம் போடுறவனுக்கு ஒரு பிரச்னை வந்தா, பலன் அடையுறவங்களெல்லாம் ஆதரவாக் கொடி பிடிச்சு தானே ஆகணும். அதனாலதான் இப்போ தமிழ்சினிமா உலகத்துல இருந்து கொத்துக் கொத்தா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குரல் எழுந்திருக்கு. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்காத ஹீரோக்களோட படங்கள் ஓடும் வெளிநாடு தியேட்டர்கள் துவம்சம் செய்யப்படுது. இதுக்கு பயந்து நடுங்கி நிற்கவேண்டிய சூழல் நம்ம ஊர் ஹீரோக்களுக்கு வந்தது பெரிய பரிதாபம்!'' என்று நிறுத்தியவரிடம்,
''தமிழக சட்டம்- ஒழுங்கு நிலை பத்தி காட்டமாகப் பேசுகிறீர்களே...'' என்று கேட்டோம்.
''நான் பொய் பேசலையே? தமிழகத்துல சட்டம்- ஒழுங்கோட நிலை பயத்தைத் தருது. கொலை, கொள்ளை, வழிப்பறின்னு மாநிலத்தோட நிலைமை ரொம்ப மோசமாப் போயிட்டிருக்குது. அதிலும், தமிழக அமைச்சர்கள் சிலரே கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், நிலஆர்ஜிதம் மாதிரியான விவகாரங்களில் சிக்குறதைப் பார்க்கிறப்போ, பகீர்னு இருக்கு. தட்டிக் கேட்க வேண்டிய போலீஸோட நிலைமை அதை விட மோசம். வருவாய்த் துறை, பத்திரப்
பதிவு, போக்குவரத்துத் துறைகளிலேயும் ஊழல் புகார்கள். இதுக்காக நான் முதல்வரை விமர்சிக்கிறதா எடுத்துக்கக் கூடாது. நம்ம முதல்வர் இந்த நேரத்துல ஒரு மருத்துவரைப் போல செயல்பட்டு நிர்வாகப் புண்ணுக்கு சிகிச்சை தரணும்!'' என்றார்.
தமிழக சட்டம்- ஒழுங்கு மீதான எஸ்.ஆர்.பி-யின் சாடல் குறித்து தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிசாமியிடம் கேட்ட போது, ''கூட்டணிக் கட்சிப் பிரமுகரான எஸ்.ஆர்.பி-யின் இந்த விமர்சனம் கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிவது போலத்தான் இருக்கிறது. அவர் சொல்லுமளவுக்கு தமிழ் நாட்டின் நிலை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டக் கூடாது!'' என்றார்.
இதற்கிடையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பாக, வெளிநாட்டில் இருந்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்யும் நபர்கள், அதன் மூலம் இதுவரை வெளிவந்த படங் கள், அவர்களிடம் இருந்து பலன் பெறும் திரைத் துறையினர் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய சி.டி. ஒன்று தயாராகிக் கொண்டுஇருக்கிறதாம்.
எஸ்.ஆர்.பி-யின் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜாவிடம் போனில் தொடர்புகொண்டு கருத்துக் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
எனவே, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணனிடம் கேட்டோம்.
''இதுவரைக்கும் யாருமே யோசிக்காத, சொல்லாத ஒரு கருத்தை எஸ்.ஆர்.பி கூறியிருக்கறது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பாரம்பரியமான படத்தயாரிப்பு நிறுவனங்களான ஏவி.எம்., சிவாஜி ஃபிலிம்ஸ், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் எல்லாம் இலங்கைத் தமிழர் நிறுவனமா என்ன? ஒரு வருஷமா பிரமிட் சாய்மீரா நிறுவனம் பிரமாண்டமான படங்களைத் தயாரிக்குது. அவங்க சிலோன்காரங்களா? மற்றபடி, மதுரை, திருச்சி,சேலம்னு தமிழ்நாட்டுல பல பகுதியிலேர்ந்து கோடம்பாக்கம் வந்து சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கிற தயாரிப்பாளருங்க பலர் இருக்காங்க. அவங்க ளெல்லாம் சினிமாவுக்காக வீட்டையும், காடு, கழனியையும் வித்து சினிமா தயாரிக்கிறாங்க. பலபேர் போட்ட பணத்தை எடுக்க முடியாம நிர்க்கதியா நிற்கிறாங்க அதுதான் நிஜம். இது தெரியாம ஆளாளுக்கு ஒண்ணு சொல்லிகிட்டு இருந்தா எப்படி?'' என்றார்.
விகடன்






0 விமர்சனங்கள்:
Post a Comment