கிளிநொச்சி கட்டிடங்கள் இடிந்து பாழடைந்து காணப்படுவதாக அங்கு சென்று திரும்பியுள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவிப்பு
கிளிநொச்சி நகர் மற்றும் பரந்தன் சந்தியைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வடக்கு நோக்கி ஞாயிறு காலை மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறியடிப்பு சண்டையின் போது, 30 படையினர் கொல்லப்பட்டதுடன், 40 படையினர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் என்பற்றையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நகரைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று விட்டுவிட்டு சண்டைகள் நடைபெற்றதாகவும், இரு தரப்பிலும் இதனால் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது. ஆயினும் சேதங்கள் பற்றிய விபரங்களை இராணுவம் வெளியிடவில்லை.
இதேவேளை, கடும் சண்டைகளின் பின்னர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள கிளிநொச்சி நகருக்கு இராணுவம் செய்தியாளர்களைக் கூட்டிச் சென்று நேற்றைய தினம் காட்டியுள்ளது.
கிளிநொச்சி நகரின் கட்டிடங்கள் அனைத்துமே அங்கு நடைபெற்ற சண்டைகளினாலும் எறிகணை மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்களினால் சேதமடைந்திருப்பதாகவும், நகர வீதிகள் வெறிச்சோடிக்கிடப்பதாகவும் சில நாய்களும், கால்நடைகளுமே அங்கு காணப்பட்டதாகவும் கிளிநொச்சிக்குச் சென்றிருந்த ஏஜன்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
கிளிநொச்சி நகரில் பொதுமக்கள் எவரும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 22 பொதுமக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சிக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு ஏஜன்சி செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.
சண்டைகள் நடைபெற்ற வேளை, காட்டுக்குள் ஒளித்திருந்து விட்டு பின்னர் சண்டைகள் ஓய்ந்த பின்னர் வைத்தியசாலைக்குத் திரும்பி வந்து தாங்கள் தங்கியிருந்தாக அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment