மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவான விசாகேஸ்வர சர்மா கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் திருகோணமலை திருக்கோணேஸ்வரராலயத்தின் பிரதம குருவாகப் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் தனது மனைவியைக் கொலை செய்து, ஆலய வளவில் புதைத்து வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எதிரியான சிவகடாட்சரக் குருக்கள் விசாகேஸ்வர சர்மா கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விடுத்த உத்தரவுக்கமைய நாட்டை விட்டு வெளியேற எதிரி முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார் என்றும் எதிரி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு பெப்ரவரி 2 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் திருகோணமலை குற்றத் தடுப்பு பொலிஸ் அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு அறிவித்தார்.
இக்கொலை வழக்கு விசாரணைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டது. அப்போது பொலிஸ் அதிகாரி, தலைமறைவாக இருந்த எதிரி கைது செய்யப்பட்டதை மன்றுக்குத் தெரியப்படுத்தினார். பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று தற்போது விளக்கமறியலில் உள்ள எதிரி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இக்கொலை வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன் விசாரணைக்கு வந்தபோது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த எதிரியும் பிரதம அரச தரப்பு சாட்சியான பாலமுரளி சர்மாவும் ஆஜராகவில்லை. இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அதனை அடுத்து எதிரியையும் முக்கிய சாட்சியையும் கைது செய்யும்படி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிரி மற்றும் பிரதான சாட்சி ஆகியோருக்கு எதிராக பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டது. அதேவேளை, எதிரிக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் என்று நாட்டில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகங்களுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அவ்வாறு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எதிரியான விசாகேஸ்வர சர்மா நேற்று முன்தினம் வெளிநாடு செல்ல கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
மனைவி அம்பிகாவைக் கழுத்தில் நைலன் கயிற்றால் சுருக்கிட்டுக் கொலை செய்து அவரின் உடலை ஆலயத்திற்கருகில் பிரதம குரு வசிப்பதற்காக வழங்கப்பட்ட வீட்டின் வளவில் புதைத்து வைத்திருந்ததாக எதிரி விசாகேஸ்வர சர்மா மீது சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது உதவியாளர் பாலமுரளி சர்மா திருமலை பொலிஸுக்கு அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து அம்பிகாவின் எலும்புக் கூடு, மண்டையோடு முதலியன ஆலய வளவில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு ஏப்ரலில் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலமுரளிசர்மா பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் அளித்ததன் பின்னரே கொலைச் சம்பவம் வெளியானது.
0 விமர்சனங்கள்:
Post a Comment