அமெரிக்க பெண்ணுக்கு ஒரு சூலில் எட்டுக் குழந்தைகள் பிரசவம்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இவ்வாறு பிரசவிக்கப்பட்ட ஆறு ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கலிபோர்னியாவின் லொஸ்ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் இடம்பெற்ற இச் சத்திரசிகிச்சையை 46 பேரைக் கொண்ட மருத்துவக் குழு மேற்கொண்டுள்ளது.
இக் குழந்தைகள் 1.81 பவுண்ஸுக்கும் 3.41 பவுண்ஸுக்குமிடையிலான நிறையில் இருப்பதாகவும் எட்டு குழந்தைகளும் அழுதவாறும் கால்களை உதைத்தவாறும் மிகுந்த துடிப்புடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பிரசவம் ஐந்து நிமிட நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த டாக்டர் கரென் மப்லிங், இது முன்னெப்போதும் இல்லாத அதிசய நாள். எமது சத்திரசிகிச்சைக் கூடத்தில் 46 மருத்துவர்கள், தாதிமார்கள், சுவாசத்தொகுதி நிபுணர்களென பல நிபுணர்கள் கூடியிருந்தனர். இது உண்மையான மிகவும் அதிசயம் வாய்ந்த நிகழ்வெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதிர்ச்சியடையாத 3 குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் வழங்க வேண்டி இருப்பதாகவும் இப்பிரச்சினையைத் தவிர அனைத்துக் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆறு வாரங்களுக்கு இக் குழந்தைகள் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்படுவதுடன், தாய்ப்பால் ஊட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாயின் வேண்டுகோளுக்கிணங்க அவர் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, 1998 இல் டெக்ஸாஸில் 8 குழந்தைகளை தாயொருவர் பிரசவித்திருந்தபோதும் சில நாட்களின் பின்னர் ஒரு குழந்தை மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment