சம உரிமை பெறும் வரை இலங்கைத் தமிழருக்கு ஆதரவு வழங்குவோம்
இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான சம உரிமையை பெறும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்றும், இது குறித்து தமிழகத்தில் உள்ள மாணவ சமுதாயத்தினர் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்றும் ம. தி. மு. க வின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு ஆயுத உதவியும் இராணுவ உதவியும் தொடர்நது வழங்கி வரும் இந்திய அரசைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை துறைமுக மைய அலுவலகத்தின் எதிரில் ம. தி., மு. கவின் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கட்சியின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும், திரளான இன உணர்வாளர்களும் இதில் பங்குபெற்றனர். நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை வெளியுறவுத்துறை அழைப்பின் பேரில்தான் இந்திய வெளியுறவு துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்துள்ளார் என்று இலங்கை வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையினைச் சுட்டி காட்டினார்.
இதன் மூலம் நூறு கோடி மக்களைக் கொண்ட, மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை இலங்கை அரசு அவமானப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் இலங்கையில் பாகிஸ்தானும், சீனாவும் காலூன்றி விட்டதால் எதிர்காலத்தில் தென்னிந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், " நானோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்களோ, பாட்டாளி மக்கள் கட்சியினரோ அல்லது விடுதலை சிறுத்தைகளோ, தொடர் உண்ணாவிரதம் இருக்கும் செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்களை சந்தித்துப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தான் கேட்டு கொண்டோமே தவிர போராட்டத்தைத் தொடருமாறு தூண்டவில்லை" என்று விளக்கம் அளித்தார்.
ஈழ தமிழர்கள் தங்களுக்கான சம உரிமையைப் பெறும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்றும், இது குறித்து தமிழகத்தில் உள்ள மாணவ சமுதாயத்தினர் அனைவரும் வீதியில் இறங்கி போராட முன் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment