அனுராதபுரம் சிறைச்சாலையில் நாம் கடுமையாகத் தாக்கப்பட்டோம்
மன்னார் நீதிமன்றத்தில் தமிழ்க் கைதிகள் சாட்சியம்
மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்ட நீதிமன்றங்களினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தாம் சிறைச்சாலையில் காடையர்களினாலும் சிறைச்சாலை அதிகாரிகளாலும் கடந்த சனிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமை காலையும் நிர்வாணமாக்கித் தாக்கப்பட்டதாக மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த மன்னாரைச் சேர்ந்த பல தமிழ்க் கைதிகள் இன்று (19.012009) மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அந்தக் கைதிகளின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட கைதி ஒருவர் தாங்கள் அனுராதபுர சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு கடந்த சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தாக்கப்பட்டதாகவும் தங்களுடைய உபகரணங்கள் மற்றும் வழங்கப்பட்ட அடையாள அட்டை என்பன எறியூட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் அனுராதபுர சிறைச்சாலையின் காவலராகக் கடமைபுரிந்து வரும் பாலேந்திரா சுமக கங்கீத் மற்றும் அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவித்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ. யூட்சன் இதற்குச் சாட்சி அளிக்குமாறு தெரிவித்தார். 07 கைதிகள் சாட்சியமளித்தனர். இதனைப் பதிவு செய்த மாவட்ட நீதிபதி பொலிஸ்மா அதிபர் அனுராதபுர பொலிஸ் அதிகாரி சிறைச்சாலை ஆணையாளர்நாயகம் ஆகியோருக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி(02.02.09) அன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
கைதிகள் தாம் ஏனைய கைதிகளிடமே உடைகளை வாங்கி அணிந்து நீதிமன்றத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment