தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம்!
இலங்கை தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக திசை திருப்பி விடுவதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
.
இலங்கையில் போராளிகளுக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தம் எப்படி அவர்களை பலவீனப்படுத்தியதோ அதைப்போல இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளே ஏற்படும் சகோதர யுத்தங்களும் மொத்த பிரச்சனையையும் சிதைத்து விடுகின்றன என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, திருமாவளவன் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பயணம் மேற்கொள்ள முடியாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக இது ஏதோ இலங்கை தமிழரை பாதுகாக்கும் பிரச்சனை என்று இல்லாமல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டிருப்பதாக திருமாவளவனுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இம்மாதம் 12ந் தேதி என்னை வந்து பாமக தலைவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, மற்றும் திருமாவளவன் ஆகியோர் வந்து சந்தித்தனர்.
ஆனால் திடீரென என்னை கலந்து பேசாமல் திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் அறிவித்தார். உண்ணாவிரத பந்தலில் இலங்கை அரசைவிட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்கு போராட்டம் என்பதுபோல விரிவுரைகள் ஆற்றிய தாக திருமாவளவனை முதல்வர் சாடியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ அதைப்போலவே இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளும் ஏற்படும் சகோதர யுத்தங்கள் பிரச்சனையை மூளியாக்கி விடுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
"எப்படியோ; மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத்துணை அவசரத்துடன் இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக்கூட சிந்திக்காமல் ""இலங்கை தேசியக்கொடி எரிப்பு'' என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்றும் கருணாநிதி அந்த மடலில் தெரிவித்துள்ளார்.
மேலும், "முதலில் மூவரும் கலந்து யோசிப்போம் அதில் ஒரு முடிவெடுப்போம்'' என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவிப்பது அதற்கேற்ப செயல்படுவது என்னையே இறுதியாகப் பழி கூறத் திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம்.
அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப்போன இந்த இயக்கத்தை ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை!' என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன் மூலம் திருமாவளவனின் இலங்கை கொடி எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது என்பதை கருணாநிதி உணர்த்தியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment