மக்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்கவேண்டும் - அமெரிக்கா
இலங்கையில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவது மற்றும் தாக்குதலுக்குள்ளாவது குறித்து அச்சமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஊடகவியலாளர்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
ஊடகங்கள் மீதான மோசமான தாக்குதல்கள், இலங்கையில் ஊடக சுதந்திரம் வீழ்ச்சியடைந்து செல்லும் சூழ்நிலையை எடுத்துக்காட்டுவதாக இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் றொபேர்ட் வுட் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் நிலைத்திருப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த நெருக்குதலற்ற சுதந்திர ஊடகம் அத்தியாவசியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்ப்படுத்தி ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதுடன், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முழுமையான, நம்பத்தகுந்த விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு, அனைத்துப் பொதுமக்களையும், ஊடகவியலாளர்களையும் இலங்கை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்'' என்று அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளார்.
ரிவிர பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதலையடுத்தே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை
நாட்டின் ஊடகத்துறையைப் பாதுகாக்கவும், ஊடகத்துறையினர் மீது தாக்குதல் நடத்துவோர் மற்றும் அவர்களைக் கொலை செய்வோரைத் தண்டிக்கவும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்தளவு நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
துப்பு துலங்கியதாம்
இதேவேளை, ரிவிர பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், தாக்குதல் சூத்திரதாரி தொடர்பான உத்தேச படம் ஒன்றை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
தென்னக்கோனின் காரிலிருந்து கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் கூறியுள்ளது.
சிரஸ கலையகம் மீதான தாக்குதல், சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த படுகொலை, ரிவிர ஆசிரியர் தென்னக்கோன் மீதான தாக்குதல் என, 2009 ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக ஊடகத்துறை மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment