உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு!
- ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன்
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி.
யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார்.
''ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?''
''யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில்தான், அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். எந்தப் பெண்ணும் தனியாக நள்ளிரவிலும் வீதிகளில் நடந்து செல்லலாம். குற்றச் செயல்கள் நடவாத அமைதிப் பிரதேசமாக அது இருந்தது. சிங்கள அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டது தவிர, வேறு பாதிப்புகள் அப்போது இல்லை. 1985-ல் இருந்து மின்சாரம் கிடையாது. இருட்டில் வாழ்ந்து பழகிவிட்டது.
சந்திரிகா ஆட்சியின்போதுயாழ்ப் பாணத்தை ராணுவம் கைப்பற்றியது. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மக்களை ஒடுக்கமான இரும்புக் கம்பிகளுக்குள் போட்டு அடைத்துவிட்டது ராணுவம். தொப்பி அணிந்துகூட சாலையில் நடக்க முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம் கொடுத்தார்கள். சோடா, ஃபேன்ட்டா பாட்டில்களைப் படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டார்கள். அவையும் சில மாதக் காட்சிகள்தான். யாழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பத்திரிகையில் வந்த செய்தி குறித்து அந்த மக்களிடம் கேட்டேன். 'உதட்டில் உள்ள சந்தோஷம் அது. உள்ளத்து நெருப்பை அவர்கள் உணரவில்லை' என்று ஒரு பெண் சொன்னாள்.''
''கிழக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்கவும் அங்கு பல்வேறு நலத் திட்டங்களை இலங்கை அரசு செய்ய ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்களே?''
''அங்கு நடப்பது அரசாங்கம் அல்ல. ஒரு பொம்மை ஆட்சி. நாங்கள் நல்லது செய்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகச் சில திட்டங்களைச் செய்கிறார்கள். காலங்கள் ஓடும்போது, இதுவும் நிறுத்தப்படும். இந்துக்களின் மனதைக் காயப்படுத்தும் காரியங்கள் திட்டமிட்டு நடக்கின்றன. புத்த கோயில்கள் கட்டப்படுகிறது. தமிழ் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை வைக்கிறார்கள். முஸ்லிம்கள் வசம் இருந்த வயல்கள் பறிக்கப்பட்டு அவை சிங்களக் குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன. இதுதான் அவர்களின் செயல் திட்டங்கள். இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் நலத் திட்டங்கள்.
நீங்களே அங்கு சென்று பாருங்கள்... 'எவள் தமிழ்ப் பெண், எவள் சிங்களப் பெண்' என்றே தெரியாது. சிங்களப் பெண்ணைப் போல உடையுடுத்தி, அவள் பயன்படுத்தும் அதே மாதிரியான பேக் போட்டுக்கொண்டு பொட்டு வைக்காமால், சிங்களம் பேசி வாழ எம் மக்கள் பழகிக்கொண்டார்கள். தமிழச்சி என்ற அடையாளத்தை இழந்து, சிங்களப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக்கொண்டால்தான் நிம்மதி என்று தமிழ்ப் பெண் நினைக்கிறாள். இதுவா நாங்கள் கேட்ட வாழ்க்கை? இதற்காகவா போராடினோம்?
''இது போன்ற நிலைமைகளை நாடாளுமன்றத்தில் பேசினீர்களா?''
''அது அவர்கள் நாடாளுமன்றம். அங்கு தமிழனுக்காகக் குரல் கொடுக்க முடியாது. பேச விட மாட்டார்கள். எனக்குத் தெரிய, தமிழ் எம்.பி. யாராவது பேசினால் ஹெட் போனை பொருத்திக்கொள்ளவே மாட்டார்கள் பல சிங்களத் தலைவர்கள்!''
'
'ஒரு எம்.பி-யாக ராஜபக்ஷேவைச் சந்திக்க முடியாதா?
''தமிழின அழிப்பைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக சிங்கள மக்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் அங்குள்ள தலைவர்கள். தமிழனுக்கு எதிரான எந்த அநீதிக்கும் அங்கு நீதி கிடைக்காது. எதை வைத்து ராஜபக்ஷேவை நம்ப முடியும்?''
'
'இன்று வன்னியில் நிலைமை என்ன?''
''வன்னிப் பகுதிகளில் திடீரென 1,000 கிலோ எடையுள்ள குண்டுகள் விழுந்து 30 அடி ஆழத்துக்குக் கிணறுகள் போல பள்ளம் பறிக்கும். கிளாஸ்டல் வகை குண்டுகள் குறிப்பிட்ட உயரம் வரை தாழ்ந்து வெடித்துச் சிதறும். வானத்தில் எந்த விமானம் பறந்தாலும் அங்குள்ள மக்கள் பதறுகிறார்கள்.
ஓமந்தைதான் ராணுவத்தின் செக் போஸ்ட். அதைத் தாண்டி ராணுவத்தால் வர முடியாது. வீடு வாசலை இழந்த மக்கள், காட்டுக்குள் பதுங்கி பிளாஸ்டிக் ஷீட் அடித்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு பிளாஸ்டிக் ஷீட்டை செக் போஸ்ட்டில் அனுமதிப்பதில்லை. வன்னிக்குத் தேவையான பொருட்களில் இதுவரை அரைப் பங்குதான் வந்திருக்கிறது. கடைசிக் காலாண்டுக்கான மருந்து இதுவரை வரவே இல்லை. மலேரியாவுக்கான மருந்து, கடந்த 11 மாதங்களாக வரவில்லை. அதனால் 44 பேர் மருந்து இல்லாமல் இறந்து போனார்கள். விஷ நாய்க் கடிக்கு மருந்து இல்லாமல் 84 பேர் இறந்துள்ளார்கள். போரில் சாவது பாதி, போர்ச் சூழல் கொல்வது மீதி!''
'
'இந்த மக்களுக்காகத் தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதே. அவை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்ததா?''
''எம் மக்களுக்கு சமீப காலத்தில் கிடைத்த மிகப் பெரிய ஆறுதல் தமிழகத்தில் எமக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும், அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களும்தான்.''
''இது இன்னும் எத்தனை நாளைக்கு?''
''இப்போது விளிம்பு நிலையில் நிற்கிறோம். யாழ்ப்பாணத்து எம்.பி-யான நான், கடந்த 2 ஆண்டுகளாக அங்கே செல்ல முடியவில்லை. ராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிவநேசன் எம்.பி. தனது வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சியை இன்னமும் எவராலும் மறக்க முடியவில்லை. அங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
பிப்ரவரி மாதத்துக்குள் புலிகளை அடக்கிவிடப் போவதாக ராணுவம் சொல்கிறது. அவர்கள், இப்படிப் பல தடவைகள் நாள் குறித்திருக்கிறார்கள். அதை எம்மக்கள் முறித்திருக்கிறார்கள். விடியல் தூரத்தில் இல்லை என்று மட்டும்தான் இப்போது எங்களால் சொல்ல முடியும்!''
விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment