யுத்தம் சரணம் பாகம் 10
இந்தியாவில் நடைபெற்றது போலொரு சுதந்திரப் போராட்டம் ஏன் இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெறவில்லை?
இந்தக் கேள்விக்கு விளக்கமாக பதில் தேடிக்கொண்டிருப்பது நேர விரயம். இன்றைக்கு வாசிக்கக் கிடைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால வரலாற்று நூல்களிலிருந்து நாம் பெறுகிற விடை மிக எளிமையானதும் மேலோட்டமானதும் ஆகும். ஒரு வரியில் சொல்வதென்றால், முந்தைய போர்த்துக் கீசிய, டச்சு ஆட்சியாளர்களைவிட, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மேல் என்று இலங்கை மக்கள் நினைத்திருக்கிறார்கள்.
விஷயம் அங்கேயே முடிந்துவிடுகிறது. பண்டைய யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர்கள் இந்த வகையில் பிரிட்டிஷ் ஆட்சியையும் `மகா காருண்ய மகிமா ஐந்தாம் ஜார்ச்சு வேந்தரை'யும் பக்கம் பக்கமாகப் பாராட்டிக்கொண்டே போவதைப் பொறுத்துக்கொண்டு வாசித்து அறிய நிறையப் பொறுமை வேண்டும்.
தமிழர்கள்தான் என்றில்லை. சிங்கள சரித்திர ஆசிரியர்களும் பெரும்பாலும் அவ்வண்ணமே வருணித்திருக்கிறார்கள். மதத் திணிப்பு என்கிற ஒரு விஷயம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதுதான் அனைத்திலும் முக்கியமானது. தவிரவும் கல்வி, வேலை வாய்ப்புகளில் திறமைக்கு முன்னுரிமை கிடைத்திருக்கிறது. டச்சுக்காலத்தைக் காட்டிலும் வரி விதிப்புகள் குறைவாக இருந்திருக்கின்றன. குற்றங்களுக்கான தண்டனைகள் சகித்துக்கொள்ளும்படியாக இருந்திருக்கின்றன. நவீன வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மிக முக்கியம், முதலாளிகள் சௌக்கியமாகப் பேணப்பட்டிருக்கிறார்கள்.
இன்னபிற காரணங்களால் பிரிட்டிஷ் ஆட்சியைப் பொற்காலமாகப் போற்றிப் பாடும் சரித்திரங்களை மட்டும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவது அபாயகரமானது. எல்லா இடங்களைப் போலவும் இலங்கையையும் ஆங்கிலேயர்கள் `பயன்படுத்துவதில்'தான் கவனம் செலுத்தினார்கள். பயன்படுத்துவது என்றால் பணம் செய்வது. அனுசரித்து நடந்துகொள்ளும் உள்நாட்டு மக்களுக்கு அநாவசியமான கஷ்டங்கள் அளிப்பதில்லை என்பது பிரிட்டிஷ் கொள்கை. எளிய சலுகைகள். கௌரவம் சேர்க்கும் பட்டங்கள். என்னை நோக்கி உன் விரல் நீளாதவரை உன்னை நான் மதிக்கிறேன் என்கிற உணர்வை ஆழமாக உண்டாக்குவது. மற்றபடி எனக்கு வர்த்தகம், உனக்கு வாழ்க்கை. என்ன செய்கிறேன் என்று கேளாதே. உன்னால் முடிந்தால் ஒரு கைகொடு. கொடுத்த கைக்குக் கூலி நிச்சயம். மகா காருண்ய ஐந்தாம் ஜார்ச்சு மன்னர்பிரானின் ஆசிகளும்கூட.
கண்டிப் பேரரசு உள்பட முழுத் தீவையும் பிரிட்டன் கைப்பற்றி ஆளத்தொடங்கியதும் அவர்கள் முதலில் சிந்தித்தது மத்திய இலங்கையின் மலைப்பாங்கான நிலவளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றித்தான்.
1815லேயே தொடங்கிவிட்டார்கள். வளமான மண். அருமையான சூழல். அற்புதமான காலநிலை. இத்தனை காலமாக இப்படி வீணாக்கி வந்திருக்கிறார்களே? காப்பி விதை போடலாம். அது காசுப்பயிர் கொடுக்கும்.
இடத்தை வளைப்பது அவர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை. எளிய ஏமாற்றல் முயற்சிகளின்மூலம் நில உடைமையாளர்களிடமிருந்து தேவைப்பட்ட பூமியை அவர்கள் பெற்றார்கள். தமது நிலத்துக்கு என்ன விலை என்றே சரியாகத் தெரியாமல் கொடுத்த காசுக்கு ஏமாந்தவர்கள் பலர். மட்டக்களப்பில் மாடமாளிகை, கொழும்புவில் கூடகோபுரம் என்று ஆளுக்கொரு ஆசை காட்டி இடத்தைக் காலி செய்ய வைத்து, கையோடு பிரிட்டனிலிருந்து முதலாளிகளை இலங்கைக்கு வரவழைத்தார்கள்.
கவனிக்கவும். தோட்டத்தொழில் செய்வது என்பது முடிவு. செய்யப்போவது யார்? பிரிட்டிஷ்காரர்கள். இதற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள். அவர்களுக்கு வேண்டிய வசதி செய்துகொடுப்பது பிரிட்டிஷ் அரசாங்கம். இனி வேண்டியது ஒன்றுதான். வேலை பார்க்கப்போகிற கூலிகள். யார் அவர்கள்?
பிரிட்டிஷார் வருவதற்கு முன்னால் இலங்கையில் மிகத் தெளிவாக இரண்டு தனித்தனி தேசிய, கலாசார, பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழர்களும் சிங்களர்களும் இருந்தார்கள். ஒரே தேசம், ஒரே மக்கள், ஒரே ஆட்சி, போனால் போகிறது இரண்டு மொழிகள் என்று அதனை மாற்றியது அவர்கள்தான்.
ஆனால் இது வெளித்தோற்றம். உண்மையில் இந்த இருவேறு இன மக்களையும் மிகச் சரியாக அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். இலங்கைத் தமிழர்களின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது, சிங்கள இனக் கட்டமைப்பு விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தமிழர்கள் மத்தியில் சாதீயத்தின் மிக வலுவான தாக்கம் இருந்தது. உயர்சாதி, கீழ்ச்சாதி பேதங்கள் இருந்தன. அடக்குமுறை, ஒடுக்கல், சுரண்டல் எல்லாம் இங்கிருப்பது போலவே அங்கும் இருந்தன. உயர் சாதியினரும் நிலம் படைத்தோரும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர். அதிகம் விவரிக்கவே வேண்டாம். அந்நாளில் தமிழகத் தமிழர்கள் எப்படி இருந்தனரோ, அப்படியேதான் இலங்கையில் வசித்த தமிழர்களும் இருந்தார்கள்.
தமிழர்களிடையே உள்ளார்ந்து இருந்த இந்த சாதீய பேதங்கள்தான் ஆங்கிலேயர்களை வசீகரித்தன. எந்த வகையில் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இயலும்?
யோசிக்கத் தொடங்கினார்கள். மேல் சாதித் தமிழர்களில் பலர் அப்போது மிஷினரி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து ஆங்கிலக் கல்வி கற்பதில் நாட்டம் கொண்டிருந்தனர். அப்படிக் கற்றவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் உடனடியாக வேலை கிடைத்தது. போஸ்டிங் பெரும்பாலும் மலையகத்தில். காப்பி பயிர் செய்ய வந்து இறங்கியிருக்கும் பிரிட்டிஷ் முதலாளிகளின் அலுவலகங்களுக்கு ஆட்கள் வேண்டாமா?
எனவே, பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளெல்லாரும் தமிழர்கள். படித்த தமிழர்கள். மேல் சாதித் தமிழர்கள். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள். மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானுக்கு விசுவாசம் காட்டக்கூடிய தமிழர்கள்.
தமிழர்கள் மீது சிங்கள மக்களுக்கு வெறுப்பு உண்டாகத் தொடங்கிய ஆரம்பப் புள்ளிகளுள் இது முதன்மையானது.
அவ்வாறான வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்தேதான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தக் காரியத்தைச் செய்தார்கள். அதுதான் வேண்டும். அதுதான் நல்லது. அதுதான் வசதியானதும்கூட. எக்காரணம் கொண்டும் உள்ளூர் மக்கள் ஒற்றுமையாக இருந்துவிடுவது மாட்சிமை பொருந்திய மன்னர்பிரான் ஆட்சிக்கு உகந்ததல்ல.
இந்த அதிகாரித் தமிழர்களை சகல வசதிகளோடும் மலையகத்தில் குடியமர்த்தும் பொருட்டு முதலில் அங்கிருந்த சிங்கள மக்களைக் காலி பண்ணச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கினார்கள்.
மறுபுறம், தோட்டப் பணிகளுக்கு ஆளெடுக்கும் வேலையை இலங்கையில் அல்லாமல் தமிழகத்தில் தொடங்கினார்கள். தமிழர்கள்தாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அல்லர். இலங்கையில் உள்ள சிங்களர்களும் அல்லர். தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள்.
இதையும் கவனிக்க வேண்டும். ஏன் இலங்கையிலேயே வசிக்கும் தமிழர்களை அவர்கள் விரும்பவில்லை? என்றால், அதிகாரிகளாகத் தமிழர்களை நியமித்ததுதான் காரணம். யாரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஒரு யூனியன் மனப்பான்மை வந்துவிடலாகாது. நீ வேறு. நான் வேறு. அவன் வேறு. இவன் வேறு. அது வேறு. இது வேறு.
ராமநாதபுரத்திலிருந்து மதுரை வரை நீண்ட அந்நாளைய மதுரை மாவட்டம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையில் `கைநிறையச் சம்பாதிப்பதற்கு' ஆளெடுக்கும் பணி ஆரம்பமானது.
இங்கும் சாதி இந்துக்களிடையே அல்லாமல், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்தார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலைமையில் இருந்தவர்கள், ஒருவேளை சோற்றுக்கே வழியற்றுக் கிடந்தவர்கள், பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தவர்கள் என்று பார்த்துப் பார்த்துச் சேகரித்தார்கள்.
பக்கத்தில்தான் இருக்கிறது இலங்கை. படகு ஏறினால் ஒரு மணியில் போய்விடலாம். நீங்கள் கால் வைக்கும் இடத்தில் சொர்க்கம் காத்திருக்கிறது. கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். எளிய வேலை. கை நிறையச் சம்பளம். எத்தனை நாள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? இலங்கைக்கு வரலாமே? அதுவும் பிரிட்டிஷ் காலனிதான், இதுவும் பிரிட்டிஷ் காலனிதான். பக்கத்து ஊருக்குப் போய் வேலை பார்ப்பதில்லையா? அந்த மாதிரிதான் இதுவும். அரசாங்கம் உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து தரும். வேலைக்குச் சம்பளம் மட்டுமல்ல; வாழ்வுக்கு ஆதாரமான அத்தனையும் அங்கு கிடைக்கும். பிழைக்கிற வழியைப் பாருங்களய்யா.
கூவிக்கூவி அழைத்தார்கள். நிறைய ஆசை காட்டினார்கள். கனவு வறண்டு வாழ்ந்துகொண்டிருந்த எளிய மக்களைச் சுலபமாக ஏமாற்ற முடிந்தது. 1840_ம் ஆண்டு தொடக்கம் தமிழகத்திலிருந்து அலையலையாக மக்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர்.
கண்டியிலேயே அதுநாள் வரை விவசாயக் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மலையகத்துக்கு வெளியே இருந்த சிங்கள விவசாயக் கூலிகளும் தங்களது பழைய எஜமானர்கள் இல்லாத சூழலில், புதிய பிரிட்டிஷ் முதலாளிகளிடம் வேலை பார்க்க விருப்பமில்லாமல் வெளியேறி விட்டிருந்த சூழலும் அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது.
ஒரு சிலர் இந்தப் புதிய முயற்சிக்கு எதிராகக் கலகம் செய்யவும் பார்த்தார்கள். இலங்கை மக்களை பிரிட்டிஷார் சுரண்டுகிறார்கள் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. குரல் கொடுத்தவர்கள் எல்லோரும் எளியவர்கள். ஏழைகள். அதிகார வர்க்கமாக இருந்த இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ராஜ விசுவாசிகளாகவும், அதிகாரம் ஏதுமற்று மலையகத்தைத் தொலைத்துவிட்டுத் தவித்துக்கொண்டிருந்த சிங்களர்கள் எல்லோரும் தமிழர்கள் மீதான கோபம் மற்றும் அதிருப்தி கொண்டோராகவும் இருந்ததால், இந்த எதிர்ப்புக்குரல்கள் அர்த்தமற்றுப் போயின.
பிரிட்டிஷாருக்கு என்ன? மிகவும் வசதி. இப்போது சிங்களர்களுக்குத் தமிழர்களைப் பிடிக்கவில்லை. மேல் சாதித் தமிழர்கள் அதிகார வர்க்கத் தமிழர்கள், தொழிலாளத் தமிழர்களைப் பொருட்படுத்துவதில்லை. வேலை பார்க்க வருகிற தமிழ்நாட்டுத் தமிழர்கள் முற்றிலும் அந்நியர்கள். மொழிதான் பொதுவானது. அது பிரச்னையில்லை. அவர்களுக்குள் மட்டும்தான் பேசிக்கொள்ளப் போகிறார்கள். அதிகாரித் தமிழர்கள் கனவில்கூட ஆங்கிலத்தில்தான் உரையாடப் போகிறார்கள். நமக்குத் தொழில் நடந்தால் சரி.
1840_ம் ஆண்டு அது ஆரம்பமானது. தமிழகத்தின் பல குக்கிராமங்களில் இருந்து கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தத்தம் வீடு துறந்து புறப்பட்டார்கள். புதிய இடம், நல்ல வேலை, கை நிறையச் சம்பளம். போய் வருகிறேன் தமிழகமே.
ஆயிரம் ஆயிரமாக. பத்தாயிரம் பத்தாயிரமாக. லட்சம் லட்சமாகத் தமிழர்கள் தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுத்தார்கள். அங்கே படகுகள் காத்திருந்தன. விருப்பப்பட்டு வந்த அத்தனை பேரையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றிக்கொண்டார்கள். மேலும் மேலும் கனவுகளைத் தின்னக்கொடுத்தபடி, கொண்டுபோய்த் தலைமன்னாரில் இறக்கிவிட்டார்கள்.
இதுதான் இலங்கை. இதோ, இந்த வழியிலேயே நீங்கள் போகலாம். கொஞ்ச தூரம்தான். நடந்துகொண்டே இருந்தீர்களென்றால் கண்டி வந்துவிடும் என்று குத்துமதிப்பாகக் கைகாட்டினார்கள்.
எப்பேர்ப்பட்ட அவல வாழ்வை நோக்கிய பயணம் அது என்று தெரியாத மக்கள் தம் விதியை நோக்கி அப்போது நடக்க ஆரம்பித்தார்கள்.
(தொடரும்)
நன்றி
குமுதம்
0 விமர்சனங்கள்:
Post a Comment