தேங்காய்க்காகக் கொல்லப்பட்ட சிறுவன்
தேங்காய் திருடிய 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று கடந்த டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பு இராஜகிரிய வெலிக்கடையில் நடந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன் எல்.சஞ்சிவவும் அவனுடைய நண்பனும் சம்பவதினத்தன்று திருடிய தேங்காய்களை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோது வீட்டு உரிமையாளர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ராஜகிரிய பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தப்பிச் செல்ல முயற்சித்த மற்றைய சிறுவனையும் வீட்டு உரிமையாளரையும் கைதுசெய்துள்ள பொலிசார், அவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களவு ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான். ஆனால் தேங்காய்களுக்குப் பதிலாக ஒருவருடைய உயிரைப் பறிப்பதென்பது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலாகும்?
ஒரு தேங்காயின் சந்தைப் பெறுமதி 26 ரூபாவாகும். ஒரு உயிரின் பெறுமதி இவ்வளவுதானா? அல்லது ஒரு தேங்காய் மனித உயிரையும்விட முக்கியத்துவம் பெறுகிறதா? அல்லது மனித உயிரின் பெறுமதி குறைந்துவிட்டதா? போன்ற பல்வேறுபட்ட கேள்விகள் இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்றதும் எமக்குள் தோன்றுகிறது.
நாளாந்தம் நாம் முகம்கொடுக்கும் பாரிய சமூகப் பிரச்சினைகளே இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த கூறினார்.
இலங்கையில் சமூகப் பிரச்சினைகள் பாரிய அளவில் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்களும் நாளாந்தம் அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்டார்.
பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் கலாசார மாற்றங்கள் போன்றவற்றால் உளரீதியாக ஏற்பட்ட பாதிப்பினாலும் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் கருத்து வெளியிட்டார். தற்காலத்தில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் மும்முரமாக இருக்கும் மனிதர்கள் நற்செயல்கள், நல்லொழுக்கம், நற்பண்புகள் என்பவற்றை இழந்துவிட்டதாகவும் அவற்றை மறந்துவிட்டதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான இறுதி நிலைப்பாடொன்றுக்கு வருவதாயின் சிறுவனும் வீட்டு உரிமையாளரும் உளநல பரீட்சைக்குட்டுத்தப்பட வேண்டுமெனவும் ஜகத் வெல்லவத்த குறிப்பிட்டார்.
“சில தேங்காய்களின் மூலம் அந்தச் சிறுவன் என்ன செய்திருக்கக்கூடும்” எனக் கேள்வியெழுப்பிய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த, “அவன் அதனை விற்று அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்திருக்கலாம் இல்லையேல் அவற்றை உணவுக்குப் பயன்படுத்தி இருக்கலாம். சிலவேளை அந்தச் சிறுவன் தனக்கோ அல்லது வேறு யாருக்கேனும் அதனைக் கொடுப்பதற்காகக்கூட திருடியிருக்கலாம்” என ஜகத் வெல்லவத்த தெரிவித்தார்.
வறுமை காரணமா?
இந்தச் சம்பவம் தொடர்பான பிறிதொரு விடயத்தினை வெலிக்கடை பொலிசார் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது.
உயிரிழந்த சிறுவன் அவனுடைய பெற்றோரை சிறுவயதிலேயே இழந்துள்ளான். அவனுடைய உறவினருடனேயே அவன் வசித்துவந்துள்ளதுடன் சிறுவன் எல். சஞ்சீவவுடன் திருடிய மற்றைய சிறுவன் அவனுடைய உறவினரில் ஒருவன் எனவும் பொலிசார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குறித்துக் கருத்து வெளியிட்ட வெலிக்கடை பொலிசார், குறித்த வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளைச் சம்பவமொன்று நடைபெற்றதாகக் கூறினார்கள். இதைக் குறித்து அதிருப்தியுற்றிருந்த வீட்டு உரிமையாளர் தனது அயலவருடைய வீட்டில் இவ்விரு சிறுவர்களும் தேங்காய் திருடுவதைக் கண்டிருக்கிறாராம். அப்போது இவ்விரு சிறுவர்களையும் பிடித்து அவர்களை முளங்காலில் நிற்கவைத்திருக்கிறார் வீட்டு உரிமையாளர். அப்போது வீட்டு உரிமையாளர் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கையில் உரிமையாளர் மீது பாய்ந்த சஞ்சீவ அவருடைய கையில் இருந்த துப்பாக்கியை பறிப்பதற்கு முயற்சித்திருக்கிறார் அப்போதுதான் இந்தச் சிறுவன் உயிரிழந்திருப்பதாகக் கூறிய பொலிசார் அந்தத் துப்பாக்கி அனுமதி பெற்ற ஒன்று எனவும் குறிப்பிட்டனர்.
தன்மீது பாய்ந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டபோதே சஞ்சீவ தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக வீட்டு உரிமையாளர் கூறியபோதும், சிறுவன் மீது வேண்டுமென்றே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக உயிரிழந்த சிறுவனுடைய உறவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எது எவ்வாறு இருந்தாலும் தேங்காயொன்றைத் திருடியதற்கு தண்டனை ஒருவருடைய உயிரைப் பறிப்பதா? ஒரு குற்றச்செயல் குற்றச் செயல்தான். ஆனால் அதற்குத் தண்டனை இதுவா?
ஒருவேளை உணவினைக் பெற்றுக்கொள்வதற்காக திருடி, ஏமாற்றி, கொள்ளையடித்து பசியில் இருக்கும் வாய்க்கு இரை தேடிக்கொள்ளும் மில்லியன் கணக்கான வறியவர்களில் சஞ்சீவவின் கதையும் ஒன்று.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாதிருப்பதாயின், வறியவர்களுக்கு பொருளாதார மானியங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத நிலையில் இவ்வாறு வறுமையின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் மீள்வதென்பது சாத்தியமற்றதொன்றாகும்.
அத்துடன் பொறுப்புவாய்ந்த பதவிநிலைகளில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் கரங்களை இவ்வாறானவர்களுக்காக நீட்டுவார்களாக இருந்தால் மட்டுமே இத்தகைய சவால்களுக்கு முகம்கொடுக்கலாம். மேலும் எல். சஞ்சீவ உள்ளிட்ட பலருடைய உயிர்களையும் பாதுகாக்கலாம். மில்லியன் கணக்கான வறியவர்கள் மகிழ்சியடைவார்கள். அவர்கள் தங்களுடைய எதிரகாலம் குறித்து நம்பிக்கையும் கொள்வார்கள்.
ஐஎன்லங்கா இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment