முல்லைத்தீவிலுள்ள ஐ.நா. பணியாளர்களை விடுவிக்க முயற்சி
விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரியவருகிறது.
முல்லைத்தீவிலிருக்கும் ஐ.நா. பணியாளர்களையும், அவர்களின் உறவினர்களையும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பதில் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் கூறினார்.
“பொதுமக்களுக்குப் பாதுகாப்பான பகுதியை உருவாக்குவது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்” எல்டர் தெரிவித்தார்.
முல்லைத்தீவிலிருக்கும் ஐ.நா. பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் முன்னர் வெளியேற அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டுப்பாடற்ற பகுதியில் 14 உள்ளூர் பணியாளர்களும், 78 குடும்ப உறுப்பினர்களும் தங்கியிருப்பதாக எல்டர் கூறினார்.
“இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் இன்று விடுவிக்கப்படுவார்களா என்பது எமக்கு உறுதியாகத் தெரியாது. எனினும், விடுவிக்கப்படுவார்கள் என நம்புகின்றோம்” என எல்டர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
அதேநேரம், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லையெனவும், அவர்கள் இரண்டு தரப்பாலும் அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment