இப்போது இது தங்கள் நேரம்
கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி
முதலமைச்சர்
சென்னை
இப்போது இது தங்கள் நேரம்
மதிப்புக்குரிய ஐயா,
முழுப்பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு ஒரு தடவை விஜயத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரில் பார்த்தால் தான் எதிலும் முழு நம்பிக்கை ஏற்படும். இங்கே என்ன நடக்கிறது என்று கண்டறிய தாங்கள் ஒரு தடவை இலங்கைக்கு வர வேண்டும். நான் தங்களுக்கு பல கடிதங்களும் தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நியாயமாமன தீர்வுக்கேற்ற பல யோசனைகளுடன் பல வேண்டுகோள்களையும் விடுத்திருந்தேன். உண்மைகளை அறிவதிலேயோ அன்றி எனது கடிதங்களுக்குப் பதில் அனுப்புவதிலேயோ எவரும் பெரிதும் அக்கறைப்படவில்லை. தமிழ் நாட்டில் இன்னுமோர் யாழ்ப்பாணம் உருவாகுவதை அனுமதிக்க வேண்டாமென்று எச்சரித்திருந்தேன். கொடிய விஷப் பாம்புகள் தலையணையின் கீழ் இனப்பெருக்கம் செய்யும் வேளை தமிழ்நாடு கவலையின்றி ஆழ்ந்து தூங்குவதாகவும் எச்சரிக்கை செய்திருந்தேன். எனது வேண்டுகோள்கள், மனுக்கள், எச்சரிக்கைகள் எவற்றையும் யாரும் பொருட்படுத்தாமையால் நான் கூறியவை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
பாராளுமன்ற ஆசனங்களை பெற விடுதலைப் புலிகளே உதவியதால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உத்தரவுகளுக்கமைய நடக்கின்றபடியால் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் பேசும் தார்மீக கடமை அவர்களுக்கு இல்லாது போனாலும் அவர்கள் முழு தமிழ் நாட்டையும் தப்பாக வழி நடத்த தவறவில்லை. முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் பினாமிகளாக அவர்கள் செயற்படுவதால் அவர்கள் தமது நாணயத்தை இழந்து விட்டனர். அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளின் கொடிய பயங்கர செயல்களை மூடி மறைப்பதால் தமிழ் மக்களின் வெறுப்பையும் பெருமளவில் சம்பாதித்துள்ளனர்.
எனது முழு அக்கறையும் மக்களின் நல்வாழ்வை கருதித்தான் என்பதை தயவு செய்து நம்புங்கள். நான் யாருக்கும் முகவராகவோ அன்றி அரசின் கைக்கூலியாகவோ செயற்படவில்லை. அரசுடன் எல்லா விடயங்களிலும் நான் ஒத்துப் போகிறவன் அல்ல. ஆனால் புலிகளை ஒழிக்கும் விடயத்தில் அரசுக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றேன். அவ்வாறு செயற்படுவதற்கு என்னை மன்னிக்கவும். அவர்களின் கொடூர செயற்பாடுகள் கோட்பாடுகளையும் எல்லைகளையும் தாண்டிவிட்டன. எழுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயிர் பலி எடுப்பதற்கு காரணமாக இருந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வாழ்விழந்தும் விதவைகளாகவும், அநாதைகளாகவும், ஆக்கப்பட்டுள்ளனர். கண்பார்வை இழந்தோர், கால் கைகளை இழந்தோர், உணர்வுகளை இழந்தோர் பல்லாயிரம். தமிழ் மக்களின் தலைமையில் பெரும் இடைவெளி விழுந்துள்ளது. பல முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், கனவான்கள், அரசியற் தலைவர்கள் ஆகியோர் கொல்லப்பட்டும், நாட்டை விட்டு ஓடவும் செய்யப்பட்டுள்ளனர். திரு. சம்பந்தன் போன்ற தலைவர்கள் கூட விடுதலைப் புலி தலைவர்கள் தமிழ்ச்செல்வன் போன்றோரின் வழி காட்டலுக்கு செயற்பட வேண்டியுள்ளது. முன் பின் யோசனையின்றி பேசுவதால் திரு. சம்பந்தன் தன் தகமையை இழந்து விட்டார். அவரின் பேச்சுக்கள் வேறு யாரோ ஒருவரின் வற்புறுத்தலில் பேசப்படுவதாக தோன்றுகிறது. பாராளுமன்றத்தில் அவரின் பேச்சுக்கள்
ஒருதலைபட்சமாகவும் விடுதலைப் புலிகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசப்படாமலே நடைபெறுகிறது.
எவருக்கும், எவரையேனும் கொல்லுகின்ற உரிமை கிடையாது. பல குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள், அப்பாவி தொழிலாளிகள் பாடசாலை பிள்ளைகள் போன்ற சிங்கள சமூகத்தை சேர்ந்தோர் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் பல அப்பாவித் தமிழ் மக்களும் அவர்கள் படைகளுக்கு இலக்கு வைக்கும் கிளேமோர் வெடிகளில் அகப்பட்டு இறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் திரு சம்பந்தனோ அன்றி ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமோ விடுதலைப் புலிகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாது அல்லது அவர்களின் கொடூரச் செயல்களால் பல அப்பாவி சிங்கள, தமிழ் மக்கள் கொல்லப்படுவதையோ கண்டித்தது கிடையாது. தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளில் 95 சதவீதத்தை இழந்த விடுதலைப் புலிகள் தற்போது முல்லைத்தீவு தொகுதியின் ஒரு சிறு பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சமூகம் சகலவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் தூதரகமும் இலங்கையில் உண்டு. உண்மை முழு உலகிற்கும் தெரியும் இந்த சூழ்நிலையில் மக்கள் படும் துன்பங்களுக்கு அரசை குற்றஞ்சாட்டும் திரு. சும்பந்தன் அவர்கள் பாடசாலை, சுகாதாரம், குடிநீர் போன்றவை போதியளவு இல்லாத ஓர் குற்கிராமதத்தில் இரண்டரை லட்சம் மக்களை பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளமை பற்றி விடுதலைப் புலிகளை கண்டிக்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளை காப்பாற்றவும் தமிழ் நாட்டவரை தப்பாக வழி நடத்துவதற்காகவுமே உண்மை நிலைமையை மறைக்கின்றனர்.
ஐயா, தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு இப்போது உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டு கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல். இரண்டாவதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உதவுதல். அரசு இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளதென்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டு முழு பொய்யானதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் உலகு முழுவதற்கும் முன்னெடுத்துச் செல்லப்படுவதுமாகும். இத்தகைய ஓர் பொய் பிரச்சாரமே தமிழ் நாட்டு மக்களை இலங்கைக்கு எதிராக வீறு கொண்டு எழ வைத்தது. பெரும் ஆர்ப்பாட்டங்களில் மக்களை ஈடுபடவும்; வைத்தது. சிறு அளவில் ஆட்கடத்தல், பணம் பறித்தல், கொலை ஆகியன நடப்பதை நான் மறுக்கவில்லை. அதில் புலிகளுக்கும் வேறு சிலருக்கும் பங்குண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது. தன்னுடன் தொடர்புடைய சிலருக்கும் இத்தகைய குற்றங்களில் பங்கு உண்டா என கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அரசுடையதே. சிங்கள, இஸ்லாமிய பொது மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிக அன்பாகவும் பண்பாகவும் தம் மத்தியில் வாழும் 55 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களுடன் சமாதானமாக வாழ்கின்றனர். அத் தமிழ் மக்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக கொழும்பிலும் அயல் பட்டணங்களிலும் கல்வி பயின்று வருகின்றனர்.
எம் மக்கள் மீது எத்தகைய அக்கறை எனக்கு உண்டென நான் விளக்கத் தேவையில்லை. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்த ஓர் தமிழன். இந்தியர்கள் தாம் முதலில் இந்தியன் என பெருமை கூறுவது போல் நானும் முதலில் இலங்கையனே. இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அதே இனத்தைச் சேர்ந்தவன். நான் நாட்டைவிட்டு ஓடிப்போகவில்லை. குறிப்பாக யுத்தத்தின் இறுதி கட்டங்களில் மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கும் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மக்களே. நீண்ட காலமாக என்னால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தபட்ட மக்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறை வேறு எவரேனும் கொண்டுள்ள அக்கறையிலும் குறைந்ததல்ல. மேலும் கூறுவதானால் அதிலும் கூட என்றே கூற வேண்டும். யுத்தத்தை நிறுத்த வேண்டுமென தமிழ் நாட்டு அரசும் மக்களும் கேட்டு போராடியது பிழையான சிந்தனையில் உருவாகியதென்றும், நியாயப்படுத்த முடியாததொன்று எனவும், தயக்கத்துடன் என்றாலும், உறுதியாக கூறுகின்றேன். மற்றும் பல விடயங்களோடு நம் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை முற்றாக அழித்த ஓர் பயங்கரவாத இயக்கத்துடன் அரசு போராடுகின்றது. ஒரு காலத்தில் கௌரவமாக தலை நிமிர்ந்து நின்ற எமது சமூகத்தை யாழ்ப்பாண ஸ்ரீதர் படமாளிகை வாசலில் வரிசையாக கால்கடுக்க நின்று கையேந்த காரணமாக இருந்தவர்களும் விடுதலைப் புலிகளே. வன்னி வாழ் மக்கள் நீண்டகாலமாக விடுதலைப் புலிகளிடமிருந்து விடுதலை வேண்டி நின்றதை தமிழ் நாட்டு மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டில் பல்வேறு பிரிவினரும் தனித்தனியே எடுத்த முயற்சிகளை ஒன்று சேர்த்து நியாயமான ஓர் தீர்வை பெற சமாதானமாகவும், நட்புடனும் செயற்பட்டிருந்தால் இந்திய மத்திய அரசு முழு ஆதரவு தந்திருக்கும். அத்துடன் இலங்கையும் இந்தியாவுடன் கொண்டிருக்கும் பல்வேறு உறவுகள் காரணமாக நியாயமான ஓர் தீர்வு காண சாதகமான பங்களிப்பை செய்து இரு நாடுகளும் நெருங்கி வந்து நட்பையும் வளர்க்க உதவியிருக்கும்.
நான் பிறப்பதற்கு முன்பு இலங்கைக்கு வந்த காந்திஜி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் பகையாளிகளாக இருக்க முடியாது என்று கூறியவற்றை அடிக்கடி கூறி வந்துள்ளேன். அக் கூற்று கூடுதலாக தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் தான் பொருந்தும். மேலும் தாங்கள் அடிக்கடி தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு பற்றி பேசுவீர்கள். அதேபோன்ற தொப்புள்கொடி உறவு சிங்கள மக்களுக்கும் மதுரை தமிழ் மக்களுக்கும் இருப்பதை பற்றி தாங்களோ தமிழ் நாட்டு மக்கள் எவருமோ அறிவார்களோ என எனக்குத் தெரியாது. சிங்கள பௌத்தர் மத்தியில் பெருமளவு பத்தினி வழிபாடு(கண்ணகி) இருப்பதும் அவர்கள் அறிவார்களா?
இனப்பிரச்சனை ஓர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ளதை பற்றி நான் கூறத் தேவையில்லை. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தாங்கள் ஒரு தடவை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டால் இனப்பிரச்சனை தீர்வுக்கு ஒரு வாய்ப்பு இருக்குமென நம்புகிறேன்.
நன்றி
தங்கள்
உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ.
0 விமர்சனங்கள்:
Post a Comment