எல்லை கடந்த அரசியல்வாதம்
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை வைத்து அரசியல் செய்யும் ஆபாசமான சந்தர்ப்பவாதம் தமிழகத்தில் உருவாகிவிட்டது. தன்னலமில்லாத ஈழ ஆதரவு மனிதாபிமானம் முழுக்க முழுக்க அரசியலாக மாறிவிட்டது என்று தமிழகத் தமிழர்களும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் வருந்திப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கு தமிழகத்தின் ஈழ அரசியல் குறித்த வரலாறு தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஈழப் பிரச்சனையில் தமிழக அரசியல்வாதிகள் ஆளுக்கொரு துருவத்தில் நிற்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது இன்று, நேற்றல்ல, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இதே கதைதான்.
ஜெயலலிதாதான் ஒரு புறம் ஈழத் தமிழர்கள் செத்தால் என்ன என்று அரசியல் செய்கிறார் என்றால் ஈழ ஆதரவு முகாமிலேயே எக்கச்சக்க பிளவுகள். கருணாநிதி ஒரு பக்கம் அரசியல் செய்கிறார். ராமதாஸ் ஒரு பக்கம் அறிக்கை விடுகிறார். வைகோ ஒரு பக்கம் ஜெயலலிதாவுக்கு அருகில் இருந்துகொண்டே கூக்குரல் எழுப்புகிறார். நெடுமாறன் பலகீன தேகத்துடனும் சில குரல்கள் எழுப்பி வருகிறார். திருமாவளவன் வேறு ஒரு புறம் உண்ணாவிரதமிருக்கிறார். பிரச்சனை அவர்களின் தனித் தனி போராட்டம் மட்டுமல்ல, அவர்களுக்கிடையிலான சண்டையும்தான். நெடுமாறன் கருணாநிதியை திட்டுகிறார், அவர் இவரைத் திட்டுகிறார். வைகோவும் திருமாவளவனும் ராமதாசும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தை, கிட்டத்தட்ட ஒரே தீவிரத்துடன் பேசுகிறார்கள். ஆனால் அந்த மூவரும் ஒரே தளத்தில் இயங்காதது அவர்களின் அரசியல் நேர் எதிரானவை என்பதைக் காட்டுகிறது. வைகோவுக்கும் கருணாநிதிக்குமான சண்டையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகம் ஒருமித்த குரலில் ஒலிக்காதது இன்று அப்பட்டமாகத் தெரிகிறது. அதற்காக இதற்கு முந்தைய காலக் கட்டங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியல்வாதிகளிடம் ஒருமித்த கருத்து இருந்தது என்று சொன்னால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும். ராஜீவ் காந்தி கொலைக்கு முன்பு ஈழம் குறித்த தமிழகத்தின் குரல் ஒருமித்து ஒலித்தது என்ற கருத்துகூட வரலாறு தெரியாததன் விளைவு அல்லது கடந்த காலத்தை எப்போதுமே மெச்சும் மனித உளவியலால் பிறப்பது.
இலங்கைப் பிரச்சனையில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய 1980களில் இன்றைப் போல ஈழத் தமிழர் காவலன் பட்டத்திற்கு அரை டஜன் அரசியல் தலைவர்களின் அடிதடி இருக்கவில்லை. இரண்டே இரண்டு தமிழக அரசியல்வாதிகள் அந்தப் பட்டத்திற்காக மோதிக்கொண்டார்கள். ஒருவர் எம்.ஜி.ஆர், மற்றொருவர் கருணாநிதி. 1983ல் இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை அடுத்து தமிழகத் தமிழர்கள் மத்தியில் எழுந்த வெகுஜன உணர்ச்சிப் பெருக்கை தென்னிந்தியாவின் மீது அலட்சியம் கொண்டிருந்த தில்லி அரசியல்வாதிகளாலேயே புறக்கணிக்க முடியவில்லை என்றால் தமிழக மக்களை நம்பி அரசியல் செய்து வந்த எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்க முடியுமா? அதனால் அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையின் ஆயுதக் குழுக்களுக்கு உதவினார்கள். அதே ஈழ ஆதரவு மனிதாபிமானத்திற்கு நடுவில்தான் ஈழப் பிரச்சனையை தமிழர்களின் பிரச்சனையாக அல்லாமல் தங்களின் அரசியல் பிரச்சனையாக பார்க்கும் போக்கு விதைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் புலிகளை ஆதரிக்க, கருணாநிதியின் ஆதரவு டெலோ அமைப்பிற்கு சென்றது. ஒரு வேளை கருணாநிதி புலிகளை ஆதரித்திருந்தால் அல்லது புலிகள் கருணாநிதியை தங்கள் காட் பாதராக ஏற்றிருந்தால், எம்.ஜி.ஆர் டெலோவை ஆதரித்திருப்பார்; இதுதான் தமிழக அரசியலின் விதி.
சக தமிழர்கள் இலங்கையில் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு 1980களில் தமிழக பொது மக்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. முன்பொரு காலத்தில் தனி நாடு கோரிக்கையைக் கண்ட ஒரு மாநிலத்தின் பிரதான உணர்வை அடக்குவதோ உதாசீனப்படுத்துவதோ ஆபத்தானது என்று உணர்ந்த மத்திய அரசின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சிகள்கூட தரப்பட்டன. அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆருக்கு எதிரான அரசியலுக்கு ஈழப் போராட்டத்தைப் பயன்படுத்தினார் என்று புலி ஆதரவு இணைய தளங்கள் கூறுகின்றன. எனினும் எம்.ஜி.ஆரும் தனது அரசியல் லாபத்திற்காக ஈழப் பிரச்சனையை பயன்படுத்தவே இல்லை என்று சொல்வது முழு உண்மை அல்ல. ஈழப் பிரச்சனையை வைத்து அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த அரசியல் பிரச்சனை 1986ல் வெடித்தது. தனது பிறந்த நாளை ஒட்டி இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்களுக்காக மிகப் பெரிய நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தினார் கருணாநிதி. அதில் கிடைத்த 2 கோடி ரூபாயை அனைத்து போராளிக் குழுக்களுக்கு பிரித்துக் கொடுத்தாலும் எம்.ஜி.ஆர் கொடுத்த நெருக்கடியால் புலிகள் மட்டும் அதைப் பெறவில்லை. அதற்கு பதிலாக தனது சொந்தப் பணத்திலிருந்து 6 கோடி ரூபாயை எம்.ஜி.ஆர் கொடுத்தார் என்று ஆண்டன் பாலசிங்கம் தனது சமீபத்திய நூலில் கூறுகிறார்.
எம்.ஜி.ஆரை புலிகள் தங்கள் காட் பாதராகக் கருதுவது பல்வேறு நூல்களிலும் ஆவணங்களிலும் வெளிப்படுகிறது. அவரின் கடைசி காலத்தில் இந்திய அமைதிப் படையை ஆதரித்தார் என்பதுகூட அவர் மீதான அபிமானத்தைக் குலைக்கவில்லை. இலங்கையின் பெளத்த நகரமான கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆருக்கு ஈழப் பிரச்சனை வெறும் அரசியலாக அல்லாமல் தாய் மண்ணின் மீட்சி என்ற உணர்ச்சிகரமான பங்கேற்பையும் கொடுத்ததால் மற்ற தலைவர்களைவிடவும் அவர் தீர்க்கமாக ஈழ ஆதரவு அரசியலில் ஈடுபட்டார் என்று புலி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். எம்.ஜி.ஆருக்கிருந்த ஈழம் தொடர்பான உணர்வுப்பூர்வமான பந்தத்தையும் பிரபாகரன் குறித்த அவரின் அபிமானத்தையும் புலிகள் இயக்கத்திற்கு சாதகமாக பெரிதும் பயன்படுத்துக்கொண்டார்கள். அன்றைய காலக் கட்டத்தில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆரின் பக்கம் இருப்பதே தங்களுக்கு அதிக பலன்களைக் கொடுக்கும் என்பதால் கருணாநிதியிடமிருந்து அவர்கள் விலகியே இருந்தார்கள். வெகுஜன ஆதரவும் தில்லி செல்வாக்கும் கொண்ட எம்.ஜி.ஆரின் ஆதரவு தொடர வேண்டுமென்றால் கருணாநிதியிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்பது பிரபாகரனின் நுட்பமான அரசியல் மூளைக்குப் புரியாதது அல்ல. எம்.ஜி.ஆர் இறந்த பிறகு கருணாநிதியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது என உணர்ந்து சமாதானம் கோரியும் உதவி கோரியும் பிரபாகரன் திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால் காலப் போக்கில் கருணாநிதி மீது புலிகளுக்கு கடும் வெறுப்பு உருவாகியிருப்பது பல புலி ஆதரவு இணைய தளங்களில் கிடைக்கும் கருணாநிதி மீதான தாக்குதல்கள் காட்டுகின்றன. இந்த வெறுப்பும் தமிழகத்தின் ஈழ ஆதரவுக் குரல்கள் மேலும் பிளவுபட ஒரு காரணம்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தனது கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடனேயே ஜெயலலிதா தனது புலி ஆதரவு நிலைபாடுகளை மாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டார். ராஜீவ் கொலைக்குப் பிறகு 80கள் வரை இருந்த மத்திய அரசின் ஈழ ஆதரவு நிலைபாடு ஈழ எதிர்ப்பு நிலைபாடாக மாறியது. அந்த மாற்றத்தினூடே விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளராக அறிமுகமானார் ஜெயலலிதா. ஈழ ஆதரவில், ஈழத் தமிழர்களின் துக்கத்தில் எந்தப் பங்கையும் ஏற்றுக்கொள்ளாத கட்சியாக அவரது தலைமையின்கீழ் அ.தி.மு.க உருமாறியது. அதனால் இலங்கையில் எஞ்சியிருந்த ஒரே ஆயுதம் தாங்கிய வலுவான ஈழ ஆதரவு இயக்கமான புலிகளுக்கு தமிழக அரசியலில் காலூன்ற ஆட்கள் தேவைப்பட்டார்கள். ராஜீவ் கொலை குறித்த சி.பி.ஐ விசாரணை, ஜெயின் கமிஷன் விசாரணை முதலியவற்றின் நெருக்கடி தணிந்த பிறகும்கூட புலிகளுக்கு கருணாநிதி அதற்குத் தகுந்த நபராகத் தெரியவில்லை. சுயமாக சிந்திக்கும், சுயமாக முடிவெடுக்கும் தலைவர்களை அவர்கள் விரும்பவில்லை. மாறாக தாங்கள் சொல்வதைக் கேட்கும் தலைவரையே அவர்கள் விரும்பினார்கள். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால்கூட முன்பு போல புலிகள் என்ற இயக்கத்தை கண்மூடித்தனமாக ஆதரித்திருக்க முடியாது. மாறி வந்த அரசியல் சூழலை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அதனால் மத்திய அரசியலின் நெருக்கடிகளுக்கு ஏற்ப கருணாநிதி ஈழ விவகாரத்தில் தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டே இருந்தது புலிகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களிடம் அவரின் நம்பகத்தன்மையைக் கெடுத்தது; வெறுப்பை விதைத்தது.
"செக்கோஸ்லோவாக்கியா போல் இலங்கையிலிருந்து ஈழத்தை தனி தேசமாக பிரிக்க வேண்டும்." "ஆயுதப் போராட்டம் மூலமாகவோ, பேச்சு வார்த்தை மூலமாகவோ அவர்கள் (புலிகள்) தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்தால் எங்களுக்கு சந்தோஷம்தான்." சமீபத்தில் விடுத்த "இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படாவிட்டால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள்" என்ற அறிக்கை வரை தொடர்ந்து அவர் ஏற்படுத்திய பல நம்பிக்கைகள் ஒரு சில தருணங்களில் மறு நாளிலேயே பொய்த்திருக்கின்றன. தமிழ் தேசியவாதமா, இந்திய தேசியவாதமா? ஆட்சியா, தமிழ் உணர்வா? என்ற குழப்பத்தில் அவர் தான் சொன்ன பலவற்றை தான் அவ்வாறு சொல்லவே இல்லை என மறுத்திருக்கிறார் அல்லது அதை நீர்த்துப் போகச் செய்திருக்கிறார். கருணாநிதியை முழுக்க தங்களுக்குச் சாதகமான சக்தியாக பயன்படுத்த முடியாது என்று விடுதலைப் புலிகளுக்கு விரைவிலேயே புரிந்திருக்கும். அதனால் தமிழகத்தில் தங்களின் குரலாக புலிகள் கருதியது வைகோவை. வைகோவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எழுச்சி நிறைவேறாமலே போனது அவர்களுக்குக் கிடைத்த பேரிடி. அதற்குப் பிறகு தமிழகத்தில் தங்கள் அரசியலை அவர்கள் பல தலைவர்களின் வழியாக செய்ய வேண்டியதாயிற்று. பணம், ஆள் பலம், தார்மீக பலம் குன்றி முல்லைத்தீவில் முடங்கியிருக்கும் புலிகள் எம்.ஜி.ஆரின் இழப்பை பெரிதும் உணர்வார்கள். இன்று ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன், வைகோ என ஏராளமான புலி ஆதரவுத் தலைவர்கள் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் ஒரு எம்.ஜி.ஆர் செய்ததன் தூசுகூட இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். 1980களில் இரண்டு அரசியல் தலைவர்களுக்கு நடுவில் அல்லல்பட்ட ஈழத் தமிழர் நலன் இன்று அரை டஜன் அரசியல் தலைவர்கள், அவர்களின் சுய நல அரசியல் நோக்கங்களுக்கு நடுவில் திண்டாடுகிறது.
1980களில் தேசிய அரசியல் சூழல் சாதகமாக இருந்த நிலையில் ஈழத் தமிழர் விஷயத்தில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தார்கள். 2008ல் தேசிய சூழல் தமிழ் உணர்வுக்கு சாதகமாக இல்லை, அதை சாதகமாக்கும் எத்தனிப்பும் தெரியவில்லை. இந்திய வெளியுறவு ராஜதந்திரத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் சீனாவும் மேற்கில் பாகிஸ்தானும் பெரும் சவாலாக இருப்பதால் இயல்பாகவே அவற்றின் கவனம் அங்கு திரும்புவதில் ஆச்சரியமில்லை. பங்களாதேஷ் போன்ற சிறிய நாடுகள்கூட ஊடுருவல்கள் மூலம் இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதால், கடலை அரணாகக் கொண்ட தென்னிந்தியாவில் இலங்கையின் சிங்கள அரசும் சிங்கள தேசமும் இந்திய தேசியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை. அதனால் அந்தப் பிரச்சனைகளில் அதிக கவனம் கொடுக்க வேண்டியதில்லை என்ற ராஜதந்திர திட்டமிடல் தில்லியில் கோலோச்சுகிறது.
இலங்கையில் தனி ஈழம் மலர்வதுதான் தனக்கான அச்சுறுத்தலாக இந்திய ராஜதந்திர வல்லுனர்கள் கருதுகிறார்கள். அந்த பயத்தை ஊதிப் பெரிதாக்கி இந்தியாவை தனக்கு சாதகமாக திருப்பி வருகிறது சிங்கள அரசு. தங்களின் முழு ஆதரவை இந்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு தமிழர்களைக் கொல்லும் உரிமையை பெற்றிருக்கிறது. புலிகளை ஒலிப்பது மூலம் எதிர்காலத்தில் இந்திய இறையாண்மைக்கு வரும் அச்சுறுத்தலை தடுக்க உதவுகிறோம் என்ற அவர்களின் தந்திரத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தியாவுடன் நட்பு பாராட்டினாலும் சீனாவுடனும் உறவு வைத்திருக்கும் இலங்கையின் இந்த சாதகத்தை உடைத்துக் காட்டும் ராஜ தந்திரப் போர் மூலம்தான் இனி ஈழத்திற்காக ஏதேனும் செய்ய முடியும். ஆனால் எம்.ஜி.ஆரைப் போல ஒரு மாநிலத்தின் குரலாக ஒலிக்கும் எந்தத் தலைவரும் தமிழகத்தில் இப்போது இல்லை. அதற்கான தகுதியைக் கொண்ட ஒரே தலைவரும் குடும்பச் சுழலில் சிக்கியிருக்கிறார். மற்ற ஈழ ஆதரவுத் தலைவர்கள் பரவலான செல்வாக்கு இல்லாத ஒரு பிரிவின் அல்லது குழுவின் அல்லது ஜாதியின் தலைவர்களாகவே இருக்கிறார்கள். ஈழ எதிர்ப்பு அரசு என்று தாங்கள் வர்ணிக்கும் இந்திய அரசின் அங்கமாக இருந்து கொண்டு, முடிந்த வரை அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, ஈழ விவகாரத் தோல்வியின் பழியை யார் தலையில் போடுவது என்பதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். ஒருவர் நடத்திய உண்ணாவிரதம்கூட பத்திரிகைகளில் தொடர்ந்து அரை பக்கம் விளம்பரம் தரும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்டாகவே பெரிய அளவில் காட்சி தந்தது.
ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சனை குறித்து பொது மக்களின், அரசின் கவனத்தைத் திருப்ப உண்ணாவிரதமிருப்பது சரியான கவன ஈர்ப்பு உத்திதான். ஆங்கிலேய அரசுக்கு எதிராக அதை ஒரு வலுவான கருவியாக பயன்படுத்திய மகாத்மா காந்தி மதரீதியாக பிளவுபட்டிருந்த மக்களை இணைக்கவும் அதைப் பயன்படுத்தினார். சாவதற்கும் தயார் என்ற எண்ணத்துடனும், தன் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை என்று கருதிய முக்கியமான பிரச்சனைகளின் போது அவர் அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார். ஆனால் அவ்வளவு வலுவான ஒரு ஆயுதத்தை காலையில் தொடங்கி மாலையில் முடிக்கும் ஒரு வேளை டயட்டாக சர்க்கரை நோய் வந்த அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள். களப் போராளியாக தன்னை வர்ணித்துக்கொள்ளும் திருமாவளவனாவது அப்படி ஒரு கேலிக்கூத்தைச் செய்யாமலிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 'நான்கு' நாட்கள் உட்கார்ந்தும் மைக்கில் பேசியும் படுத்தும் உண்ணாவிரதம் இருந்த திருமாவளவன் பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்காமலேயே விரதத்தை முடித்துக்கொண்டார். உண்ணாவிரதமிருந்த நாட்களில் முன்னணி பத்திரிகைகளில் பல லட்சம் செலவு செய்து விளம்பரங்கள் கொடுக்குமளவுக்கு பண பலம் பெற்றுவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தனது முயற்சி உண்மையிலேயே அரசின் கவனத்தை, பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கானதா அல்லது வழக்கமான உண்ணாவிரதங்கள் போல அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்று தெரிந்துகொள்ளும் முன்பே தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். அவருக்காக ஒரு தகவல். ஒரு ஆரோக்கியமான மனிதர் 40 நாட்கள் வரை சாப்பிடாமலும் மூன்று நாட்கள் வரை தண்ணீர்கூட குடிக்காமலும் உயிர் வாழ முடியும் என்ற அறிவியல் தத்துவத்தின் உண்மையை, தனது உயிரை பலிகடாவாக வைத்து பரிசோதித்துப் பார்த்தவர் காந்தி. அவர் தன் வாழ்வில் 14 முறை நீண்ட உண்ணாவிரதங்கள் இருந்து மெலிந்த தேகத்தை உடையவரானார். குறைந்தது ஆறு நாட்கள் முதல் 21 நாட்கள் வரை அவரின் உண்ணாவிரதம் நீடித்தது. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் ஈழப் பிரச்சனைக்காக தனது உண்ணாவிரத ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கலாம். ஆனால் தனது இலக்கை எட்டாமல் நான்கு நாட்களில் நிறுத்திக்கொள்வதாக இருந்தால் முதலில் அப்படி ஒரு 'சாகும் வரை' உண்ணாவிரதம் என்ற நாடகத்தில் அவர் இறங்கியிருக்க மாட்டார். அவருக்கு நாடகங்களில் அல்ல நிஜங்களில்தான் ஆர்வம். இன்றைய அரசியல்வாதிகளுக்கு எதில் ஆர்வம் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியல்வாதிகள் 1980கள் முதல் நடத்தி வரும் எல்லை கடந்த 'அரசியல்'வாதத்தின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணிகளை மாற்றிக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவை. காங்கிரசின் ஆதரவை நம்பியிருப்பதால் ஈழப் பிரச்சனையில் கருணாநிதியால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட பிற ஈழ ஆதரவு அரசியல்வாதிகள், அதையே தங்களின் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார்கள். இதையே சாக்காக வைத்து பா.ம.க தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறலாம், விடுதலைச் சிறுத்தைகளும் அவர்களுடன் வெளியேறலாம். அதற்கான பூர்வாங்க முழக்கங்களை அவர்கள் முழங்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்களின் பிணங்கள் அங்கு விழுந்துகொண்டிருக்க இங்கு ஒரு சில அரசியல் கட்சிகளின் கல்லா நிரம்பி வருகிறது.
மாயா
உயிர்மை.கொம்
0 விமர்சனங்கள்:
Post a Comment