வன்னியில் இடம் பெயரும் மக்களின் அவலங்கள்
வடக்கில் குறிப்பாக வன்னியில் அகதிகளாக்கப்பட்டுள்ள, மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் இரண்டாயிரம் கர்ப்பிணித்தாய்மார்கள் காணப்படுவதாகவும் ஆயிரக்கணக்கில் சிறுவர்களும், குழந்தைகளுமிருப்பதாக, குறிப்பிடத்தக்களவில் வயோதிபர்கள். காணப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மக்களுக்கு ஏதோ மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து விட்டால் போதும் என்ற நிலையில் அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவர்களுக்கான மருந்துகள், குடிநீர், ஒழுங்கான சாப்பாடு எதுவும் கிட்டவில்லையெனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யுத்தத்தை மனிதநேயமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அன்பு, கருணை, அகிம்மை எனச் சிந்திக்கும் யாருமே யுத்தத்தை விரும்பமாட்டார்கள் சகலரும் அமைதியாகவும், சமாதானமாகவும் இன்புற்றிருக்க வேண்டுமென்பதே மனிதாபிமானத்தின் பிரதான அம்சமாகும். அனைத்து மதங்களும் கூட சமாதான சகவாழ்வையே போதித்து நிற்கின்றன. இந்த நாட்டில் மக்கள் இலட்சக்கணக்கில் தாம்பிறந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கக் கூடியதாகும். அந்த மக்களை மறந்து ஆட்சியாளரது சிந்தனைகள் வேறு திசையில் போய்க் கொண்டிருக்குமானால் அது ஜனநாயகமும், மனிதாபிமானமும் மறைந்து போகும் ஒரு நிலைமையை காட்டிநிற்கும் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.
வன்னியில் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ள மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள், இந்த மண்ணில் பிறந்தவர்கள். இவர்களில் ஒருவரேனும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அரசாங்கமானது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் பிரதான தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்கின்ற மூன்றையும் உறுதிசெய்ய வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இன்று வன்னியிலிருந்து அகதிகளாகி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை வாய்பொத்தி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு அந்தநாட்டு மக்கள் பசியிலிருந்து, நோயிலிருந்து மீட்சி பெற்ற சமூகமாக மாற்றம் காணப்பட வேண்டும். நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்தப் பிரிவு மக்களும் அவலத்துக்குள் தள்ளப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த காலங்களில் வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் அகதிகளாக வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களுக்கு உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலுமிருந்து நூற்றுக்கணக்கான அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும், பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுத்து வந்தன. அப்போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான உதவிகள் கிட்டிவந்ததை மறுக்க முடியாது. சிலகுறைபாடுகள் காணப்பட்டபோதிலும் கூட ஏதோவொரு வகையில் அந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் கிட்டிக் கொண்டேயிருந்தன. அண்மைக் காலத்தில் அரசாங்கம் எடுத்த முடிவுக்கமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் முட்டுக் கட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முட்டுக் கட்டைகள், தடைவிதிப்புகளுக்கு அரசு பல்வேறு நியாயங்களைக் கற்பிக்கலாம்.
மூன்று இலட்சம் அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு யாரும் விளையாடிக் கொண்டிருக்க இயலாது. இன்றைய அவசரத் தேவை அந்த மக்களின் வாழ்வுப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு விதித்த அரசு அதற்கு மாற்றீடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒழுங்கான நிவாரண உதவிகளை வழங்கி அவர்களது துன்பத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் செயலாளரான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தலைமையில் ஒரு குழு வவுனியா, மன்னார் பகுதிகளில் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் வன்னியிலிருந்து வந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களது நலன்களை விசாரித்து உதவுவதற்குத் தயாராகி அங்கு போவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரிய போதிலும் பாதுகாப்புத் தரப்பு அனுமதி வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் இன்று சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. டாக்டர் ஜயலத் ஜயவர்தன கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வடக்கு, கிழக்கு அகதி முகாம்களுக்குச் சென்று உதவிகள் செய்தவராவார். அவரது செயற்பாடுகளை யாரும் அரசியல் நோக்கோடு பார்க்கக் கூடாது. பாதுகாப்புத் தரப்பு ஏதோவொரு காரணத்தைக் காட்டி தமது பக்க நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சிக்கலாம். அப்படியாயின் அந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் அரசாங்கமாவது போதுமான நிவாரண நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். துன்பத்துக்குள் சிக்கியிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் அரசாங்கமானது இந்த விடயத்தில் நழுவல் போக்கில் செயற்பட்டு தவறான அர்த்தங்களைக் கற்பிக்க முனையக் கூடாது. வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment