தமிழக சட்ட சபையில் பல கோணங்களில் இன்று எழுப்பப்படவுள்ள இலங்கைப் பிரச்சினை
தமிழக சட்ட சபையில் இன்று சகல கட்சிகளும் இலங்கைப் பிரச்சினை குறித்து குரல் எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. தமிழகத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருமங்கலம் இடைத் தேர்தலை சந்தித்த சூட்டுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் இலங்கைப் பிரச்சினையை சகல கட்சிகளுமே அவரவர் கோணத்தில் எழுப்பவுள்ளன. திருமாவளவன் விவகாரத்தை வைத்து தி.மு.க. வை காங்கிரஸே நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கூட்டணியை விட்டு விலகியிருந்தாலும் திருமாவளவன் விஷயத்தில் மட்டும் தி.மு.க. வுக்கு பா.ம.க. துணை நிற்கும்.
அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு, காங்கிரஸுக்கு எதிராக பா.ம.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை குரல் தரலாம். அ.தி.மு.க., ம.தி.மு.கவைச் சமாளிப்பது காங்கிரஸையும் மத்திய அரசையும் காப்பாற்றுவது பா.ம.கவுடன் உறவை மேம்படுத்தும் வகையில் விவகாரத்தைக் கையாள்வது என தி.மு.க. நிறையவே தனது அரசியல் சாதுரியத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை வரலாம். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஆளுநர் உரையை அ.தி.மு.க., ம.தி.மு.க., இடதுசாரிக் கூட்டணி புறக்கணிக்கலாம் எனத் தெரிகிறது. ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி முடித்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் அதைத் தமிழில் வாசிப்பார். இந்த உரையில் அரசின் திட்டங்களை ஆளுநர் அறிவிப்பார்.
பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டு சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும். அதில் சட்ட சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். நாளை அவை கூடியதும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங், சட்ட சபை முன்னாள் துணை சபாநாயகர் கே. சீனிவாசன் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து ஆளுங்கட்சி உறுப்பினர் பேசுவார். இதையடுத்து அதன் மீது விவாதம் நடைபெறும். இந்தக் கூட்டத் தொடர் ஒருவாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் உட்பட சில புதிய சட்டங்கள் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதால் ஒரு வார காலம் நீடிக்கும் இந்த கூட்டத் தொடருக்குப் பின்னர் பட்ஜெட் கூட்டத் தொடரும் விரைவிலேயே நடத்தப்பட்டு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் பட்ஜெட்டில் புதிய சலுகைத் திட்டங்களை அறிவிக்க முடியாமல் போகலாம். இதைத் தவிர்க்கவும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்குத் தயாராகவும் பட்ஜெட் கூட்டத் தொடரை அரசு விரைவிலேயே நடத்தி முடிக்கும் என்று தெரிகிறது.
Virakeasri
0 விமர்சனங்கள்:
Post a Comment